» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ராமநதி-ஜம்புநதி மேல்மட்ட திட்டம் விரைவில் துவக்கம் : எம்.எல்.ஏ., செல்வமோகன்தாஸ் பாண்டியன் உறுதி

திங்கள் 6, ஜனவரி 2020 1:03:10 PM (IST)

தென்காசி மாவட்டத்தில் ராமநதி-ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என தென்காசி எம்.எல்.ஏ., செல்வமோகன்தாஸ் பாண்டியன் கூறினார்.

இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:கடந்த 2016ல் நடைபெற்ற தென்காசி சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக வேட்பாளராக நான் போட்டியிட்ட போது இத்தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளான இராமநதி-ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் திட்டம், தென்காசியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம், அனுமன் நதி பாலம், இரட்டைகுளம்-ஊத்துமலை கால்வாய் திட்டம் ஆகியவற்றை நிறைவேற்றி தருவேன் என வாக்குறுதி அளித்தேன். தேர்தலில் வெற்றி பெற்றவுடன் சட்டப்பேரவையிலும் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினேன். 

இதன் பயனாக அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா சுரண்டை அனுமன் நதி பாலம் அமைக்க ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுஇ அப்பணி நிறைவு பெற்றுள்ளது. இதே போல் தொடர்ந்து சட்டமன்றத்தில் நான் வலியுறுத்தியதன் பயனாக தென்காசியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் அறிவிக்கப்பட்டு விட்டது. அடுத்ததாக காமராஜர் ஆட்சிக்காலத்தில் அறிவிக்கப்பட்ட  இராமநதி-ஜம்புநதி இணைப்பு கால்வாய் திட்டம்  மீண்டும் அறிவிக்கப்பட்டு தொடங்கப்பட்டது. இத்திட்டத்திற்கு கடந்த 2005ம் ஆண்டு அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா புத்துயிர் கொடுத்து அடிக்கல் நாட்டினார். 

அதன் பிறகு 2015ம் ஆண்டு 110 விதியின் கீழ் இப்பணிகளை துவங்குவதற்காக முதற்கட்டமாக ரூ. 5.25 கோடியை முதல்வர் ஜெயலலிதா ஒதுக்கீடு செய்து அறிவித்தார். இதைத்தொடர்ந்து நான் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வானதற்கு பிறகு இத்திட்டப்பணிகளை நிறைவேற்றுவதற்காக மறைந்த முதல்வர் ஜெயலலிதா, தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரிடம் தொடர்ந்து வலியுறுத்தியதன் பயனாக இத்திட்டத்திற்கு ரூ.41.70 கோடி மதிப்பீடு செய்யப்பட்டு, இந்நிதியை நபார்டு வங்கி மூலம் கடனாக பெற்று இத்திட்டத்தை நிறைவேற்றலாம் என கடந்த ஜனவரியில் இறுதி வடிவம் கொடுக்கப்பட்டு நபார்டு வங்கிக்கு அனுப்பபட்டது. 

சிலர் சமூக வலைதளங்களில் இத்திட்டம் தங்களது தலைவர் மூலம் மத்திய அரசிடம் வலியுறுத்தியதன் பேரில் தான் நபார்டு வங்கி நிதி ஒதுக்கீடு செய்யவுள்ளதாக தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். இது மாநில அரசின் திட்டமாகும். மத்திய அரசுக்கும் இத்திட்டத்திற்கு எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதே போல் இரட்டைகுளம்-ஊத்துமலை கால்வாய் திட்டப்பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பூர்வாங்க பணிகள் நிறைவு பெற்றுள்ளது. 

அடுத்தக்கட்ட பணிகளும் விரைவில் நடைபெறும். மேலும் வீராணம் குளத்தில் இருந்து வெளியேறும் தண்ணீர் வீணாக ஆற்றில் திறந்து விடப்படுவதால் அத்தண்ணீரை தெற்குகாவலாக்குறிச்சி வரை கால்வாய் மூலம் கொண்டு செல்லும் திட்டம் நிறைவேற்றப்படும் என தென்காசி தனி மாவட்ட துவக்க விழாவில் முதல்வர் அறிவித்துள்ளார். எனவே இத்திட்டமும் விரைவில் தொடங்கப்பட்டு விடும் என எம்.எல்.ஏ., செல்வமோகன்தாஸ் பாண்டியன் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory