» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

உயிரிழந்த காவலாளிக்காக உயிரை விட்ட பாசக்கார நாய்

வெள்ளி 10, ஜனவரி 2020 6:10:16 PM (IST)

நெல்லையில் தொழிலதிபர் ஒருவரது வீட்டின் காவலாளி மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், அவரது உடலை நெருங்க விடாமல் 4 மணி நேரமாக பாசப்போராட்டம் நடத்திய அந்த வீட்டின் வளர்ப்பு நாய், அதனை அப்புறப்படுத்தும் முயற்சியின்போது பரிதாபமாக உயிரிழந்தது.

நெல்லை பெருமாள்புரத்தில் உள்ள தனியார் பேருந்து உரிமையாளர் சோமசுந்தரம் என்பவரது வீட்டில்  நாய் ஒன்றை பெயரிட்டு வளர்த்து வந்தனர். இதே வீட்டில் கடந்த 5 ஆண்டுகளாக குருந்துடையார் புரத்தை சேர்ந்த பன்னீர் செல்வம் என்பவர் காவலாளியாகப் பணியாற்றி வந்துள்ளார்.

வீட்டின் உரிமையாளர் சோமசுந்தரத்தின் மனைவிக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில் கோவையிலுள்ள மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் சோமசுந்தரம் குடும்பத்தினர் அனைவரும் கோவை சென்றுவிட்டனர். காவலாளி பன்னீர் செல்வம் காவல் பணியில் இருந்துள்ளார்.இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை காலை 6 மணியளவில் அந்த வீட்டின் தோட்டம் அருகே பன்னீர் செல்வம் மர்மமான முறையில் இறந்து கிடந்திருப்பதை அக்கம்பக்கத்தினர் பார்த்து போலீசாருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

போலீசார் வந்து உட்பக்கமாக தாழிடப்பட்டிருந்த முன்பக்க கேட்டை திறக்க முயற்சித்தபோது உள்ளிருந்த நாய்குரைத்து அவர்களை தடுத்தது. பன்னீர்செல்வத்தின் உடல் அருகிலேயே அது நீண்ட நேரமாக நின்றுகொண்டு இருந்ததால் அங்கு யாரும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.4 மணி நேரம் கடந்த நிலையில், வேறு வழியின்றி போலீசார் கயிற்றில் சுருக்கு போட்டு நாய் ராபினை இழுத்து அப்புறப்படுத்த முயற்சித்தனர்.சுற்றுச்சுவர் மீது நின்றுகொண்டு சுருக்குக் கயிற்றை இழுக்க முயற்சிக்கையில் எதிர்பாராத விதமாக கழுத்து இறுக்கப்பட்டு ராபின் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

அதன் பின்னர் பன்னீர்செல்வத்தின் உடல் மீட்கப்பட்டு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டது. பரிசோதனையில் அவர் மாரடைப்பால் உயிரிழந்தது தெரியவந்தது.4 ஆண்டுகளாக தனக்கு உணவளித்து அன்போடு பராமரித்து வந்த பன்னீர் செல்வத்தை நெருங்க விடாமல் ராபின் நடத்திய போராட்டம் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory