» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தென்காசி மாவட்ட எல்கைகள் மூடல் மாவட்ட ஆட்சியர் தகவல்

புதன் 25, மார்ச் 2020 10:31:00 AM (IST)

தென்காசி மாவட்ட எல்கைகள் மூடப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது ;உலகமெங்கும் பரவலாக பரவி வரும் கொரோனா வைரஸ் நோய்களை கட்டுப்படுத்திட தமிழ்நாடு அரசு எடுத்துவரும் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளின் தென்காசி மாவட்டத்தில் போக்குவரத்து மற்றும் பொதுமக்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்திட குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 144ன் படியும், தொற்றுநோய்கள் சட்டம் 1897 ல் சரத்து 2ன் படியும் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவரால் கீழ்கண்ட கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.தென்காசி மாவட்ட எல்லையான புளியரை, மேக்கரை, தேவிபட்டணம், கீழ ஆம்பூர், மாறாந்தை, கே. ஆலங்குளம், நடுவப்பட்டி, வேலாயுதபுரம், பனவடலிசத்திரம் ஆகியன மூடப்படுகிறது.

ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் பொது இடத்தில் ஒன்றாக கூடுவதற்கோ, வாகனங்களில் செல்வதற்கோ அனுமதி இல்லை. ஊர்வலமாக செல்வதற்கோ ஆர்ப்பாட்டம் செய்வதற்கோ அனுமதியில்லை.சமூக கலாச்சார, அரசியல், மதம் சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்துவது, விளையாட்டு, கல்வி, கருத்தரங்குகள் மற்றும் மாநாடுகள் நடத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது. 16.03.2020 முன்பாக திருமண மண்டபங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள திருமணம் மட்டுமே அனுமதிக்கப்படும். அங்கும் 30 நபர்களுக்கு மேலான நபர்கள் கலந்து கொள்ள அனுமதியில்லை. புதிதாக திருமணம் மற்றும் வேறு எந்த நிகழ்ச்சிகளும் நடத்திட திருமண மண்டபங்களில் முன்பதிவுகள் செய்யக்கூடாது.

03.03.2020 க்கு பின்பு வெளிநாடுகளில் இருந்து தென்காசி மாவட்டத்திற்கு வந்து உள்ள அனைவரும் தங்களது வீட்டில் தங்களை சுய தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் நோய் அறிகுறி வருகிறதா என்பதை சுயமாக கண்காணித்து வரவும். அறிகுறிகள் தென்பட்டால் மாவட்ட அவசர கட்டுப்பாட்டு அறை எண் 107 அல்லது 04634-290548 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு மருத்துவ ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம்.

அத்தியாவசிய மற்றும் அவசர பணிகளுக்கான வாகனங்கள் தவிர பிற அரசு பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்கள்,  வாடகை வாகனங்கள் அனைத்தும் இயங்காது.மாநிலங்களுக்கு இடையேயும், மாவட்டங்களுக்கு இடையேயும் அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்களைத் தவிர பிற வாகனங்கள் எதுவும் இயங்க அனுமதி இல்லை.  அத்தியாவசியப் பொருட்களுக்கான மருத்துவம், பால், காய்கறி, பழங்கள், மளிகை, இறைச்சி, மீன் கடைகள் போன்றவை தவிர பிற அனைத்து கடைகளும், வணிக வளாகங்களும், பணிமனைகளும், டாஸ்மாக் கடைகளும் இயங்காது.

அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் அரசுத்துறைகளான  மாவட்ட நிர்வாகம், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, சிறைத்துறை, பொது சுகாதாரம் மற்றும் மருத்துவத்துறை, நீதிமன்றங்கள், உள்ளாட்சி அமைப்புகள் போன்றவை மட்டும் தொடர்ந்து இயங்கும். எனினும் தனிநபர் சுகாதார நடவடிக்கை உட்பட அனைத்து நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் அனைத்து அலுவலகங்களில் தொடர்ந்து பின்பற்றப்பட வேண்டும்.

அத்தியாவசியமான பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் குறைந்த பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.அத்தியாவசிய கட்டடப் பணிகள் தவிர பிற கட்டடப் பணிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. எனினும் இந்த நாட்களில் வேலைக்கு வராத தொழிலாளர்களுக்கு சம்பளம் நிறுத்தம் செய்யக் கூடாது. 

வீடுகளில் இல்லாமல் விடுதிகளில் மற்றும் பிற இடங்களில் தங்கியிருக்கும் பணியாளர்களின் நலன் கருதி பார்சல் மூலம் மட்டும் உணவு வழங்கும் வகையில் உணவகங்கள் திறந்திருக்க அனுமதிக்கப்படும். அம்மா உணவகங்கள் வழக்கம் போல் செயல்படும்.பொதுமக்கள் அனைவரும் அத்தியாவசிய தேவைகளுக்காக அன்றி வேறு எவ்வித தேவைக்காகவும் வெளியில் நடமாடாமல் வீடுகளிலேயே தங்கியிருக்க வேண்டும். பொதுமக்கள் அனைவரும் மேற்படி கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து கொரோனா வைரஸ் தொற்று பரவாத வண்ணம் உரிய ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்..இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory