» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ஊரடங்கை மதிக்கும் மக்களுக்கு போலீசார் பரிசு : தென்காசியில் பொதுமக்கள் மகிழ்ச்சி.

திங்கள் 13, ஏப்ரல் 2020 10:33:07 AM (IST)


தென்காசியில்  ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்கும் குடும்பத்திற்கு தென்காசி போலீசார் தினமும் 5 வீடுகளுக்கு சென்று அரிசி உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்கள்.இந்தத் திட்டம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது அதன் ஒரு கட்டமாக ஊரடங்கு உத்தரவு 144 தடை உத்தரவு உள்ளிட்ட உத்தரவுகளை பிறப்பித்து அனைவரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது அனைவரும் அவர்களது வீட்டிலேயே தங்கி இருக்க வேண்டும் என்பன போன்ற சட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறார்கள்.

அதன்படி பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது வீதிகளில் நடமாடக் கூடாது என்பதை கண்காணிக்கும் போலீசார் தமிழகம் முழுவதும் பல்வேறு நடைமுறைகளை செயல்படுத்தி வருகிறார்கள் சில இடங்களில் வெளியில் நடமாடும் பொது மக்களுக்கு அறிவுரைகள் கூறுவது,   இருசக்கர வாகனங்களில் வலம்வரும் இளைஞர்களுக்கு தோப்புக்கரணம் போடுதல் தரையில் உருளுதல் வழக்குப்பதிவு செய்தல் வாகனங்களை பறிமுதல் செய்வது,  லேசான லத்தி கவனிப்பு, மேலும் சில இடங்களில்  சட்டத்தை மீறி வெளியில் வருபவர்களை கைது செய்வது உள்ளிட்ட நடைமுறைகளை கடைபிடித்து வருகிறார்கள்.

ஆனாலும் பொதுமக்கள் கொரோனா வைரஸின் கொடூரம் பற்றி தெரியாமல் வீதிகளில் கூட்டம் கூட்டமாக வேடிக்கை பார்க்க வந்து கொண்டிருக்கிறார்கள் இவர்களை கட்டுப்படுத்த தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுகுணா சிங்,  தென்காசி மாவட்ட  காவல்துறை துணை கண்காணிப்பாளர் கோகுலகிருஷ்ணன் ஆகியோரின் ஆலோசனையின்படி தென்காசி காவல் நிலைய ஆய்வாளர் ஆடிவேல் புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்தி வருகிறார்.

அதன்படி  தென்காசி காவல் நிலைய ஆய்வாளர் ஆடிவேல் தலைமையில் போலீசார் போலீஸ் வாகனத்தில் தென்காசி வீட்டு வசதி வாரிய காலனி பகுதிக்கு சென்றனர் அங்குள்ள  சில வீடுகளின் கதவை தட்டினார்கள். வீட்டு வாசலில் போலீஸ் வாகனத்தில் போலீசார் தனது வீட்டு கதவை தட்டுவதை பார்த்தது அச்சமடைந்த வீட்டு உரிமையாளர்கள் மிகவும் பதட்டத்தோடு வந்து கதவைத் திறந்தனர் . உள்ளே சென்ற காவல் ஆய்வாளர் ஆடிவேல் அந்த வீட்டின் தலைவரிடம் உங்கள் வீட்டில் மொத்தம் எத்தனை பேர்  அவர்களில் எத்தனை பேர் தற்போது வீட்டில் இருக்கின்றார்கள் எத்தனை பேர் வெளியில் சென்று உள்ளார்கள் என்று விசாரித்தார்.அதற்கு அவர்கள் எங்கள் வீட்டில் மொத்தம் நான்கு உறுப்பினர்கள் நான்கு பேர்களும் வீட்டிற்குள் தான் இருக்கிறோம் என்று பதில் கூறினார்.

அதனைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ஆடிவேல் தனது வாகனத்தில் வைத்திருந்த அரிசி மளிகை பொருட்கள் சமையல் எண்ணெய் டூத் பேஸ்ட் , டூத் பிரஷ், உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் அடங்கிய பார்சலை அந்தக் குடும்பத்தின் தலைவரிடம் வழங்கியதோடு இதைப்போன்று அரசின் மறு உத்தரவு வரும்வரை அனைவரும் வெளியே வராமல் வீட்டிற்குள் இருக்க வேண்டும்.

அதன்படி  கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் அறிவித்துள்ள 144 தடை உத்தரவை மதித்து வீட்டுக்குள் இருக்கும் பொதுமக்களை தேர்வு செய்து அவர்களில் 5 வீடுகளுக்கு இதுபோன்ற சீர்வரிசை பொருட்களை வழங்குகிறோம். அதன்படி இன்று உங்கள் குடும்பத்திற்கு தென்காசி காவல்துறை சார்பில் வழங்கப்படும் சீர்வரிசை பொருட்களை பெற்றுக் கொள்ளுங்கள் என்றார்.

அதனை பெரும் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டனர்.அதன்படி தென்காசி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள  5 வீடுகளுக்கு சென்ற போது அந்த வீடுகளிலும்  குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வீட்டிற்குள் இருந்தனர். அதனைத் தொடர்ந்து அவர்களது வீடுகளுக்கும் சீர்வரிசை பொருட்களை வழங்கினார்கள்.

இந்த திட்டம் ஊரடங்கு உத்தரவு  நிறைவு பெறும் வரை செயல்படுத்தப்படும் என்றும் ஆய்வாளர் ஆடி வேல் தெரிவித்தார்.நிகழ்ச்சியில் தென்காசி காவல்துறை ஆய்வாளர் க.ஆடிவேல் பிரபல திரைப்பட இயக்குனர் பாரதி கண்ணன், பசியில்லா தமிழகம் அறக்கட்டளை நிறுவனர் முகமது அலி ஜின்னா  போலீசார் மற்றும்  சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.

தென்காசியில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த தென்காசி  போலீசார் மேற்கொண்டுள்ள இந்த புதிய திட்டம் பொதுமக்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்றுள்ளது தினமும் காலையில் ஒவ்வொரு வீட்டிலும் இன்று காவல்துறையினர் தங்கள் வீட்டுக்கு வந்து விடுவார்கள் எனவே நாம் அனைவரும் வீட்டிற்கு உள்ளேயே இருந்து இந்த சீர்வரிசை பொருட்களை பரிசாக பெற வேண்டும் என்று ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory