» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ஞானதிரவியம் எம்.பியை கைது செய்ய வேண்டும் : நெல்லை எஸ்பியிடம் அதிமுக பரபரப்பு புகார்

செவ்வாய் 2, ஜூன் 2020 6:12:45 PM (IST)


நிலஅபகரிப்பு வழக்கில் ஞானதிரவியம் எம்.பியை உடனடியாக கைது செய்து விசாரணையை தொடங்க வேண்டும் என நெல்லை மாவட்ட எஸ்பியிடம் அதிமுக  பரபரப்பு புகார் அளித்துள்ளது.

நெல்லை காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு ராதாபுரம் எம்எல்ஏ இன்பதுரை தலைமையில் அதிமுகவினர்,நெல்லை மாவட்ட போலீஸ் எஸ்பியை சந்தித்து அளித்த  புகார் மனுவில் திமுகவைச் சேர்ந்த ஞானதிரவியம் எம்பி மீது  கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ராதாபுரம் தொகுதியைச் சேர்ந்த குமாரி பகவதி என்பவர் அளித்த நில அபகரிப்பு வழக்கில் ஞானதிரவியம் எம். பி க்கு எதிராக  முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதற்கு  வழக்கறிஞரான பழனி சங்கர் குமாரி பகவதிக்கு சட்ட உதவிகள் செய்தார் என்ற காழ்ப்புணர்சியில்தான் இந்த கருணாநிதி குறித்த மீம்ஸ் விவகார புகார் மனு அளிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஞானதிரவியம் அவரது இரு மகன்களும் குற்றப் பின்னணி உடையவர்கள் என்றும் அவர்கள் மீது பல்வேறு காவல் நிலையங்களில் ஆள்கடத்தல்,அடிதடி, கொலை வழக்கு உள்ளிட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளது.மேலும் அவர்கள் வசம் உள்ள  கைத்துப்பாக்கியை கொண்டு எவரையும் மிரட்டும் போக்கு கொண்டவர்கள். எனவே எனது உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அந்த புகார் மனுவில் வழக்கறிஞர் பழனிசங்கர் கூறியிருந்தார். மேலும் குமாரி பகவதி வழக்கில்  குற்றம்சாட்டப்பட்டுள்ள ஞானதிரவியம் எம்பி வெளியில் இருந்தால் சாட்சிகளை கலைத்து விடுவார். எனவே அவரை உடனடியாக கைது செய்து சிறையில் அடைத்து நில அபகரிப்பு புகார் தொடர்பாக  விசாரணையை தொடங்க வேண்டும் என்றும் புகார் மனுவில் கூறியிருந்தார்.144 தடை உத்தரவு தற்போது அமலில் உள்ள நிலையில் திசையன்விளை காவல் நிலையத்திற்கு  திமுகவினர் 50 பேர் ஊர்வலமாக சென்று புகார் மனு அளித்தது சட்டத்திற்குப் புறம்பானது. எனவே அவர்கள் மீது இதற்கென தனியாக ஒரு வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் புகார் மனுவில்   கூறியிருந்தார்.

திமுக- அதிமுக வாக்குவாதம் : எஸ்பி அலுவலகத்தில் பரபரப்பு

வழக்கறிஞர் பழனி சங்கர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனுவை கொடுத்து கொண்டிருக்கும் போதே மாவட்ட எஸ்பி., அலுவலக வளாகத்திற்குள் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், ஞானதிரவியம் எம்பி, முன்னாள் எம்எல்ஏ அப்பாவு உள்ளிட்ட 50 திமுகவினர் நுழைந்தனர். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார்  அவர்களை தடுத்தனர்.ஆனாலும் திமுகவினர் எஸ்பி., அலுவலகத்தின் முதலாவது மாடியில் உள்ள காவல்துறை கண்காணிப்பாளர் அறைக்கு   முன்னேறியதாக தெரிகிறது.

இதனால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வாசலில் காத்திருந்த அதிமுக வழக்கறிஞர்கள் அனைவரும் தங்களையும்  காவல்துறை கண்காணிப்பாளர் அறைக்குள் அனுமதிக்க வேண்டும் என கூறினார்களாம்.இதனால் அங்கு பெரும் பரபரப்பும் பதட்டமும் நிலவியது.  இன்பதுரை எம் எல் ஏ தலைமையில் வந்திருந்த அதிமுகவினரும் ஆவுடையப்பன் தலைமையில் வந்திருந்த திமுகவினரும்  ஒருவருக்கு ஒருவர் சரமாரியாக கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து தனது அறையில் இருந்து வெளியே வந்த எஸ்பி., ஓம்பிரகாஷ் மீனா இருதரப்பினரையும் சமாதானபடுத்தியதோடு , திமுகவினரை உடனடியாக அலுவலகத்தை விட்டு வெளியேற்றுமாறு கடும் எச்சரிக்கை விடுத்தார். இதையடுத்து அருகில் இருந்த போலீசார் திமுகவினரை வெளியே அப்புறப்படுத்தினர்.

தொடர்ந்து எஸ்பியிடம் புகார் மனு அளித்து விட்டு வழக்கறிஞர் பழனி சங்கருடன் வெளியே வந்த இன்பதுரை எம்எல்ஏ நிருபர்களிடம் கூறுகையில் : பேரறிஞர் அண்ணா பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு கடமை  கண்ணியம் கட்டுப்பாடு  அவசியம் எனக் கூறினார்.அண்ணாவின் கட்டளையை அதிமுக வினரான நாங்கள் தொடர்ந்து பின்பற்றி வருகிறோம். ஆனால் காவல்துறையினர் தடுத்தும் கூட கேட்காமல் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்குள் அத்துமீறி புகுந்த திமுகவினரின் இன்றைய நடவடிக்கைகளை பார்க்கும் பொழுது  திமுகவினரிடம் கடமையும் கண்ணியமும்  தட்டுப்பாடாக உள்ளது என்பதைதான் காட்டுகிறது என்று கூறினார். புகார் கொடுக்க வந்த இடத்தில் அதிமுக திமுகவினரின் வாக்குவாத சம்பவத்தால்  நெல்லை மாவட்ட  எஸ்பி., அலுவலகத்தில் பெரும் பரபரப்பு நிலவியதை தொடர்ந்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory