» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மரக் கடத்தலுக்கு துணை போன விஏஓ சஸ்பெண்ட் : தென்காசி ஆர்டிஓ அதிரடி

திங்கள் 29, ஜூன் 2020 1:06:01 PM (IST)

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் அரசுக்கு சொந்தமான இடங்களில் நின்ற விலை உயர்ந்த மரங்களை வெட்டி கடத்திய வழக்கில் தொடர்புடைய இலஞ்சி விஏஓ.,வை சஸ்பெண்ட் செய்து  தென்காசி ஆர்டிஓ உத்தரவிட்டுள்ளார்.

தென்காசி மாவட்டம், குற்றாலம் ஐந்தருவி பகுதிகளில் இலஞ்சி வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட இடங்களில் நின்று கொண்டிருந்த மிகப்பழமையான சுமார் 50 அடி உயரமும் 3 மீட்டர் சுற்றளவும் உள்ள ஈட்டி மரத்தை யாரோ மர்ம நபர்கள் வெட்டுவதாக குற்றாலம் வனச்சரகர் பாலகிருஷ்ணனுக்கு  ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலறிந்த குற்றாலம் வனச்சரகர் பாலகிருஷ்ணன் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போது அங்கு பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஈட்டி மரம் வெட்டப்பட்ட நிலையில் கிடந்துள்ளது. ஆனால் அந்த மரங்களை வெட்டிய மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள விலை உயர்ந்த ஈட்டி மரங்களை கைப்பற்றிய வனத்துறையினர் இந்த மரங்களை வெட்டிய கும்பல் பற்றி தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் தென்காசியை அடுத்த சிவராமபேட்டை பகுதியைச் சேர்ந்த சாமி ( 47), அச்சன்புதூர் வேலுச்சாமி மகன் முத்துராஜ் ( 36), அதே பகுதியைச் சேர்ந்த முருகையா ( 52) ஆகியோர் அந்த விலை உயர்ந்த ஈட்டி மரத்தை வெட்டிய தாக தெரியவந்துள்ளது. உடனடியாக வனத்துறையினர் 3 பேரையும் பிடித்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.தகவல் அறிந்த மாவட்ட வன அலுவலர் செந்தில்குமார் உத்தரவின் பேரில் இந்த வழக்கை குற்றாலம் வனச்சரகர் பாலகிருஷ்ணன், பயிற்சி வனச்சரக அலுவலர் பிரபாகரன், வனவர்கள்  பாண்டியராஜ்,  அழகர்ராஜ் ஆகியோர்  மேல் விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதன்பேரில் அவர்கள் நடத்திய விசாரணையில் இலஞ்சி விஏஓ நடராஜன் மற்றும் மர அறுவை மில் உரிமையாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் இதில் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது. மர அறுவை மில் உரிமையாளர் கிருஷ்ணனை பிடித்து விசாரணை நடத்தியதில் இலஞ்சி விஏஓ நடராஜன் இதில் சம்பந்தப்பட்டிருப்பது மேலும் உறுதியாக தெரிய வந்துள்ளது.

எனவே வனத்துறையினர் இதுபற்றி வருவாய்த்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி தென்காசி கோட்டாட்சித் தலைவர் பழனி குமார்  அரசுக்குச் சொந்தமான விலை உயர்ந்த மரங்கள் வெட்டிக் கடத்தல் கும்பலுக்கு உதவியாக இருந்த நடராஜனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.இந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் தொடர்ந்து நடத்திய விசாரணையில் மேலும் பல்வேறு இடங்களில் இந்த கும்பல் விலை உயர்ந்த தேக்கு, ஈட்டி, தோதகத்தி,ரோஸ்ட்,  உள்ளிட்ட விலை உயர்ந்த மரங்களை வெட்டி இருப்பது தெரியவந்துள்ளது. எனவே வனத்துறை அதிகாரிகள் தொடர்ந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.  இந்தச் சம்பவம் தென்காசி, குற்றாலம், செங்கோட்டை, பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory