» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தென்காசி விவசாயியின் உடல் அடக்கம் : மறுஉடற்கூறு ஆய்வுக்கு பின் நடைபெற்றது

வெள்ளி 31, ஜூலை 2020 5:33:54 PM (IST)

மறுஉடற்கூறு ஆய்வுக்கு பின் தென்காசி விவசாயி அணைக்கரை முத்துவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வாகைகுளம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள ஆழ்வார்குறிச்சி வாகைகுளத்தை சேர்ந்தவர் அணைக்கரை முத்து (72). விவசாயி. இவர் தனது வீட்டு அருகே உள்ள தோட்டத்தில் மின்வேலி அமைத்து இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கடையம் வனத்துறையினர் அவரை விசாரணைக்கு அழைத்து சென்றனர். அப்போது அணைக்கரை முத்துவுக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனே அவரை தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால், இதனை ஏற்றுக் கொள்ளாத முத்துவின் குடும்பத்தினர், வனத்துறை அதிகாரிகள் விசாரணையில் அவரை தாக்கியதால் தான் உயிரிழந்ததாக புகார் அளித்தனர். மேலும் பல்வேறு போராட்டங்களை நடத்தி அவரது உடலை வாங்க மறுத்தனர். அணைக்கரை முத்துவை கொலை செய்த வனத்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும், நிவாரண உதவியாக ரூ.25 லட்சம் வழங்க வேண்டும் மேலும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என பல சமூக அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் வலியுறுத்தின.

இதனை தொடர்ந்து இறந்த அணைக்கரை முத்துவின் குடும்பத்துக்கு நிவாரணமாக 10 லட்சம் ரூபாயும் குடும்பத்தில் ஒருவருக்கு வேலையும் வழங்குவதாக தமிழக முதல்வர் அறிவித்தார். ஆனால் அவர்களின் முக்கிய கோரிக்கையான வனத்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்யவில்லை. இது தொடர்பாக அவர்கள் மீண்டும் உடலை வாங்க மறுத்தனர்.

இந்த நிலையில் இறந்த அணைக்கரை முத்துவின் மனைவி பாலம்மாள் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்தார். அதில் தனது கணவரின் உடலை மறுஉடற்கூறு ஆய்வு செய்ய வேண்டும். இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிட வேண்டும். எனது கணவரை கொலை செய்த வனத்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒரு உத்தரவை பிறப்பித்தது. அதன் அடிப்படையில் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3 மருத்துவர்கள் அடங்கிய குழுவினரால் மீண்டும் மறுஉடற்கூறு ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. இதனையடுத்து இன்று நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி தடவியல் துறை செல்வமுருகன், தடவியல் துறை இணை பேராசிரியர் பிரசன்னா, தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி தடவியல் துறை தலைவர் ஆகியோர் மறுஉடற்கூறு ஆய்வு செய்தனர்.

அம்பாசமுத்திரம் நடுவர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கார்த்திக்கேயன் முன்னிலையில் மறுஉடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உடலை பெற்றுக்கொண்ட அவரது மகள் வசந்தி; எங்களது முக்கிய கோரிக்கையான வனத்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்யவில்லை என்றாலும், நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை வைத்து நாங்கள் எங்களது தந்தையின் உடலை பெற்றுக்கொள்கிறோம் என்று கூறினார். இதை தொடர்ந்து ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள வாகைகுளத்திற்கு உடல் கொண்டு வரப்பட்டு அங்குள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது .


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory