» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ஒட்டு மொத்தமாக தற்செயல் விடுப்பு போராட்டம் : வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் அறிவிப்பு

சனி 1, ஆகஸ்ட் 2020 7:27:50 PM (IST)

வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 5,6ம் தேதிகளில் ஒட்டுமொத்தமாக தற்செயல் விடுப்பு எடுத்தும், 5ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டமும் நடத்துகின்றனர் என வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க தென்காசி மாவட்ட தலைவர் தாசில்தார் செல்வநாயகம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: கொரோனா நோய் தொற்று தடுப்புப் பணியில் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக வருவாய்த்துறை அலுவலர்கள் தங்கள் உயிரையும் பணயம் வைத்து ஈடுபட்டு வருகின்றனர். இந்த யுத்தத்தில் பல வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் நோய் தொற்றுக்கு ஆளாகி சிகிச்சையில் உள்ளனர். கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டு உயிரிழந்தோரின் குடும்பத்தினர் ஆதரவின்றி நிர்கதியில் உள்ளனர்.கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு உயிரிழக்கும் அலுவலர்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.50 இலட்சம் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டு, 3 மாதம் கடந்த பின்னரும், கொரோனா நோய் தடுப்பு பணியில் உயிரிழந்த அலுவலர்களுக்கு நிவாரணம் வழங்கப்படாமல் உள்ளது.இதனால் இப்பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து அலுவலர்களுக்கு பெரும் வேதனையும், பாதுகாப்பற்ற நிலையில் மனச்சோர்வு அடைந்து நோய் தடுப்பு பணிகளில் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.

இக்கோரிக்கை குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் தமிழக முதலமைச்சர் ஆகியோரை தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் நேரில் சந்தித்து முறையீடு அளிக்கப்பட்ட பின்னரும், நிவாரணம் வழங்குவதில் தாமதிப்பது வேதனையாக உள்ளது.தமிழக அரசின் ஆணைகளுக்கு இணங்கி நோய் தடுப்புப் பணிகளில் ஈடுபட்டதாலேயே, அலுவலர்கள் தங்களது உயிரை இழந்துள்ளனர் என்பதை தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும். கடந்த 2 மாதங்களுக்கு மேலாக பல இயக்கங்களை நடத்திவரும் வருவாய்த்துறை அலுவலர்களின் உணர்வுகளுக்கு அரசு மதிப்பளிக்க வேண்டும்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அலுவலர்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற 5.8.2020 மற்றும் 6.8.2020 இரண்டு நாட்கள் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் உள்ள 12,000 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அலுவலர்கள் கலந்து கொள்ளும் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்புப் போராட்டம் மற்றும் 5.8.2020 அன்று மாநில மாவட்ட மற்றும் வட்டக்கிளை நிர்வாகிகள் கலந்துகொள்ளும் 1 நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள 8 வட்டாட்சியர் அலுவலகங்கள்,  2 கோட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் உள்ளிட்ட அனைத்து வருவாய் துறை அலுவலர்களும் இப்போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க தென்காசி மாவட்ட தலைவர் தாசில்தார் செல்வநாயகம் அறிக்கையில் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory