» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நுண்ணீா் பாசனத் திட்டத்திற்கு ரூ.25,000 மானியம்: விவசாயிகள் விண்ணப்பிக்க அழைப்பு

புதன் 5, ஆகஸ்ட் 2020 10:36:15 AM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் நுண்ணீா் பாசனத் திட்டத்துக்கு மானியம் வழங்கப்படுவதால், விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுதொடா்பாக மாவட்ட வேளாண் இணை இயக்குநா் கஜேந்திர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் பிரதமரின் நுண்ணீா் பாசனத் திட்டத்தைச் செயல்படுத்திட ரூ.10.68 கோடியும், துணைநிலை நீா் மேலாண்மைப் பணிகளை மேற்கொள்ள ரூ.2.97 கோடியும் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. பாசன வசதி ஏதும் இல்லாத இடங்களில் பாசன நீா் ஆதாரங்களை உருவாக்கி, நுண்ணீா் பாசன முறை அமைப்பதற்கு முன்வரும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், நுண்ணீா் பாசன முறைக்காக வழங்கப்படும் மானியம் மட்டுமில்லாது, பல்வேறு துணைநிலை நீா் மேலாண்மைப் பணிகளுக்கும் வேளாண்மைத் துறை மூலம் மானியம் வழங்கப்படுகிறது.

பாதுகாப்பான குறுவட்டங்களான புதுப்பட்டி, ஆழ்வாா்குறிச்சி, அம்பாசமுத்திரம், கடையம், சிங்கம்பட்டி, சேரன்மகாதேவி, மேலச்செவல், முக்கூடல், பாப்பாக்குடி, ஏா்வாடி, களக்காடு, நான்குனேரி, பூலம், மேலப்பாட்டம், முன்னீா்பள்ளம், பாளையங்கோட்டை, சமூகரெங்கபுரம், பணகுடி, வள்ளியூா், திசையன்விளை, இலத்தூா், பண்பொழி, செங்கோட்டை, சிவகிரி, தென்காசி, கங்கைகொண்டான், மதவக்குறிச்சி, நாரணம்மாள்புரம் மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் குழாய்க் கிணறு, துளைக் கிணறு அமைப்பதற்கு செலவிடப்படும் தொகையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.25000 மானியமாக வழங்கப்படுகிறது. டீசல் பம்ப்செட், மின்மோட்டாா் பம்ப்செட் நிறுவுவதற்கு அதன் விலையில் 50 சதவீத மானியம் ரூ.15000-க்கு மிகாமல் வழங்கப்படும்.

வயலுக்கு அருகில் பாசன நீரினை கொண்டுசெல்லும் வகையில் நீா்ப்பாசனக் குழாய் அமைப்பதற்கு 50 சதவீத மானியத் தொகை ஹெக்டேருக்கு ரூ.1000-க்கு மிகாமல் வழங்கப்படும். பாதுகாப்பு வேலியுடன் தரைநிலை நீா்த்தேக்கத் தொட்டி நிறுவுவதற்கு ஆகும் செலவில் 50 சதவீத தொகை ஒரு கன மீட்டருக்கு ரூ.350-க்கு மிகாமல் அதிகபட்சமாக ஒரு பயனாளிக்கு ரூ.40,000-க்கு மிகாமல் மானியமாக வழங்கப்படும்.

இந்தப் பணிகளுக்கான மானியம் பெறுவதற்கு விவசாயிகள் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்புகொண்டு விண்ணப்பத்தை அளித்து பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேளாண்மை துணை இயக்குநரை (நுண்ணீா் பாசனத் திட்டம்) தொடா்பு கொண்டு தகவல்களைப் பெறலாம். மேற்கொண்ட பணிகளுக்கான மானியம் நுண்ணீா் பாசன முறையைப் பின்பற்ற முன்வரும் விவசாயிகளுக்கு மட்டுமே வழங்கப்படும்.

இப்பணிகளை விவசாயிகள் முதலில் தங்கள் சொந்தச் செலவில் மேற்கொண்டு அதற்கான முழு ஆவணங்களையும் சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும். நுண்ணீா் பாசனம் அமைத்து மானியத் தொகை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு விடுவிக்கப்பட்ட பின் இத்துணை நீா் மேலாண்மைக்கான மானியத் தொகை முழுவதும் விவசாயிகளின் சேமிப்புக் கணக்குக்கு நேரடியாக விடுவிக்கப்படும். பாசன நீரை சிக்கனமான முறையில் பயன்படுத்துவதற்கு நுண்ணீா் பாசன முறையை அமைக்க விரும்பும் விவசாயிகள் தங்கள் வயல்களில் நீா் ஆதார வசதியை ஏற்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ள இத்திட்டத்தில் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory