» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ஏலச்சீட்டு பணத்தை திருப்பி தராததால் தீக்குளித்த நபர் சாவு : ஆசிரியையின் கணவர் கைது

செவ்வாய் 17, நவம்பர் 2020 10:52:44 AM (IST)

ஏலச்சீட்டு பணத்தை திருப்பி தராததால் தச்சு தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக ஆசிரியையின் கணவரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் சிவந்திபுரம் கஸ்பா புதுமனை தெருவைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (49), தச்சு தொழிலாளி. இவருக்கு மாரியம்மாள் (44) என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர். சிவந்திபுரம் வராகபுரம் கீழ காந்தி நகரைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற மில் தொழிலாளி மரியசெல்வம் (64). இவருடைய மனைவி அரசு பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். மரியசெல்வம் ஏலச்சீட்டு நடத்தி வருகிறார். இவரிடம் கடந்த 2015-ம் ஆண்டு பாலசுப்பிரமணியன் ரூ.1 லட்சத்துக்கான ஏலச்சீட்டில் சேர்ந்தார். இதற்காக பாலசுப்பிரமணியன் மாதந்தோறும் பணம் செலுத்தி வந்தார். 

இதற்கிடையே தவணைக்காலம் முடிந்ததும், மரியசெல்வம் ரூ.1 லட்சம் முதிர்வு தொகையை பாலசுப்பிரமணியனிடம் வழங்காமல் இழுத்தடித்து வந்தார். இந்நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு நிகழ்ந்த விபத்தில் பாலசுப்பிரமணியனுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அவர் மரியசெல்வத்தின் வீட்டுக்கு நேரில் சென்று பணத்தை கேட்க முடியாத நிலை இருந்தது. பின்னர் பாலசுப்பிரமணியனுக்கு சற்று குணமடைந்ததும், அவர் இதுகுறித்து கடந்த 2018-ம் ஆண்டு விக்கிரமசிங்கபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் மரியசெல்வத்திடம் மாதந்தோறும் ரூ.1,500-ஐ பாலசுப்பிரமணியனுக்கு வழங்குமாறு கூறினர். ஆனாலும் மரியசெல்வம் பணத்தை வழங்காமல் காலம் கடத்தி வந்தார். பின்னர் அவர், தீபாவளி தினத்தில் சீட்டு பணத்தை தருவதாக பாலசுப்பிரமணியனிடம் கூறினார்.

இதனால் தீபாவளி அன்று காலை 7 மணி அளவில் மரியசெல்வத்தின் வீட்டுக்கு சென்று பாலசுப்பிரமணியன் சீட்டு பணம் கேட்டார். ஆனால் மரியசெல்வம் வழக்கம்போல் சீட்டுப்பணத்தை கொடுக்காமல் பின்னர் தருவதாக கூறினார். இதனால் மனமுடைந்த பாலசுப்பிரமணியன் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

இதில் உடல் கருகி பலத்த காயம் அடைந்த பாலசுப்பிரமணியனுக்கு அம்பை அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலையில் பாலசுப்பிரமணியன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மரியசெல்வத்தை கைது செய்தனர்.

இதற்கிடையே பாலசுப்பிரமணியனின் சாவுக்கு காரணமான மரியசெல்வம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் பாலசுப்பிரமணியனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மரியசெல்வம் கைது செய்யப்பட்ட விவரத்தை போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு, பாலசுப்பிரமணியனின் உடலை பெற்று சென்று அடக்கம் செய்தனர்.

கண்காணிப்பு கேமராவில் பதிவு

இந்த நிலையில் பாலசுப்பிரமணியன் தீக்குளித்து தற்கொலை செய்த காட்சியானது, மரியசெல்வத்தின் வீட்டின் முன்புள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அதில், ஏலச்சீட்டு பணத்தை மரியசெல்வத்திடம் பாலசுப்பிரமணியன் கேட்கிறார். ஆனால் மரியசெல்வம் பணம் தர மறுத்ததால், பாலசுப்பிரமணியன் பாட்டிலில் கொண்டு வந்த பெட்ரோலை தனது உடலில் ஊற்றுகிறார். ஆனாலும் அவரை சமாதானம் செய்ய முயலாமல், மரியசெல்வம் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த தனது மோட்டார் சைக்கிளை முன்னெச்சரிக்கையாக நகர்த்தி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இது சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் விக்கிரமசிங்கபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory