» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கனமழை எதிரொலி சிவகிரியில் காட்டாற்று வெள்ளம் : 3 வீடுகள் இடிந்து விழுந்தது

புதன் 18, நவம்பர் 2020 3:46:07 PM (IST)சிவகிரியில் பெய்த தொடர் கன மழை காரணமாக காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. 3 வீடுகள் இடிந்து விழுந்தன.

தென்காசி மாவட்டம் சிவகிரி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. நேற்று காலை வரை சிவகிரியில் ஒரே நாளில் 81 மிமீ மழையளவு பதிவாகியுள்ளது. கன மழை காரணமாக சிவகிரி அருகேயுள்ள மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் இருந்து காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் வாசுதேவநல்லூர் அருகேயுள்ள தலையணை மற்றும் சிவகிரி அருகேயுள்ள கோம்பையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

கன மழை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக சிவகிரி, வாசுதேவநல்லூர் பகுதியில் உள்ள குளங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர் அதிகரித்துள்ளது. கனமழை மற்றும் நீர்நிலைகள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் விவசாய பணிகளை மேற்கொண்டுள்ளனர். சிவகிரி பகுதியில் உள்ள நீர்நிலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் நீர் நிலை அருகில் யாரும் செல்ல வேண்டாம் என தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

சிவகிரி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. தொடர் கன மழை காரணமாக சிவகிரி பாலகணேசன் தெருவைச் சேர்ந்த இசக்கிராஜா என்பவரது மனைவி ஆறுமுகத்தாய் (30), கக்கன்ஜி கீழத் தெருவைச் சேர்ந்த சின்னகணேசன் மனைவி பாண்டியம்மாள் (35),  சிவராமலிங்கபுரம் வடக்குத் தெருவைச் சேர்ந்த காளிமுத்து மகன் மூக்கையா (38) ஆகியோரின் வீடுகள் இடிந்து விழுந்தன. 

அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை. வீட்டை இழந்த மூவரும் கூலித் தொழிலாளிகள். இதுகுறித்து தகவல் அறிந்த சிவகிரி தாசில்தார் ஆனந்த், வருவாய் ஆய்வாளர் முத்துக்குமார், கிராம நிர்வாக அலுவலர் முனியசாமி ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர். மேலும் அவர்களுக்கு அரசு நிவாரண உதவி வழங்க கோட்டாட்சித்தலைவர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு பரிந்துரை செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory