» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கிணற்றில் தவறி விழுந்த கரடி உயிருடன் மீட்பு : வனப்பகுதியில் விடப்பட்டது

செவ்வாய் 24, நவம்பர் 2020 9:02:13 AM (IST)

களக்காடு அருகே கிணற்றில் தவறி விழுந்த கரடியை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி மீட்டனர்.

நெல்லை மாவட்டம் களக்காடு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் புலி, கரடி, மிளா உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இவை அடிக்கடி உணவு மற்றும் தண்ணீர் தேடி அருகில் உள்ள விளைநிலங்களுக்கும், குடியிருப்பு பகுதிகளுக்கும் புகுந்து விடுகின்றன. இதேபோன்று மலைப்பகுதியில் இருந்து இறங்கிய வனவிலங்குகள் அருகில் உள்ள சிறிய மலைக்குன்றுகளான பொத்தை பகுதியிலும் உள்ளன.

இந்நிலையில் களக்காடு அருகே சிங்கிகுளம் கிராமத்தில் உள்ள பொத்தை பகுதியில் கரடிகள் நடமாட்டம் இருந்தன. இவை அங்குள்ள பனம்பழம் உள்ளிட்ட பழங்களை விரும்பி சாப்பிட்டு வந்தன. நேற்று அதிகாலையில் சிங்கிகுளம் கால்பரவு பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் 2 கரடிகள் சுற்றி திரிந்தன. அவற்றில் ஆண் கரடியானது அங்குள்ள தரைமட்ட கிணற்றில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தது.சுமார் 15 அடி ஆழமுள்ள கிணற்றில் கிடந்த தண்ணீரில் கரடி தத்தளித்தது. உடனே மற்றொரு கரடி பொத்தை பகுதிக்கு ஓடி விட்டது.

இதனைப் பார்த்த விவசாயிகள், வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே வனத்துறை துணை இயக்குனர் இளங்கோ, வனச்சரகர் பாலாஜி மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் விரைந்து சென்று, கிணற்றில் தத்தளித்த கரடியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.இதற்காக கரடிக்கு துப்பாக்கி மூலம் மயக்க மருந்து ஊசி செலுத்தி, இரும்பு கூண்டு மூலம் வெளியே கொண்டு வர ஏற்பாடு செய்தனர். அதன்படி கால்நடை மருத்துவர் துப்பாக்கி மூலம் கரடிக்கு மயக்க மருந்து ஊசி செலுத்தினார். பின்னர் கிணற்றுக்குள் இரும்பு கூண்டு இறக்கப்பட்டது. தொடர்ந்து கிணற்றை சுற்றிலும் வலைவிரித்து கரடியை பிடிக்க வனத்துறையினர் தயாராக இருந்தனர்.

அப்போது கிணற்றில் இருந்த கரடி திடீரென்று இரும்புகூண்டின் மீது தாவி ஏறி, அங்கிருந்து கிணற்றுக்கு வெளியே வலையில் சிக்காமல் குதித்து ஓடியது. இதனால் அங்கு நின்ற வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து தலைதெறிக்க ஓடினர். அங்கிருந்து ஓட்டம் பிடித்த கரடி சிறிதுதூரத்தில் இருந்த பச்சையாறு புதர் பகுதியில் பதுங்கியது. பின்னர் அது சிறிதுநேரத்தில் மயங்கியது. இதையடுத்து வனத்துறையினர் அந்த கரடியை பிடித்து சென்று, அதற்கு சிகிச்சை அளித்து செங்கல்தேரி வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிங்கிகுளத்தில் ஊருக்குள் புகுந்த கரடியை பிடிக்க சென்ற வனத்துறை ஊழியர் உள்பட 2 பேரை அது கடித்து குதறியது குறிப்பிடத்தக்கது. எனவே, சிங்கிகுளம் பகுதியில் சுற்றி திரியும் கரடிகளை கூண்டு வைத்து பிடித்து சென்று வனப்பகுதியில் விட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory