» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கமல், ரஜினியால் திமுகவின் வாக்கு வங்கிக்கு எந்த பாதிப்பும் இல்லை: கனிமொழி எம்.பி., பேட்டி!!

செவ்வாய் 22, டிசம்பர் 2020 12:52:24 PM (IST)"கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோரால் திமுகவின் வாக்கு வங்கிக்கு எந்த பாதிப்பும் இல்லை" என்று திமுக மகளிரணி செயலரும், தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி தெரிவித்தார். 

"விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்"  என்ற தலைப்பில் திருநெல்வேலி மத்திய மாவட்டத்திற்குள்பட்ட திருநெல்வேலி, பாளையங்கோட்டை பகுதிகளில் கனிமொழி இன்று பிரசாரம் மேற்கொண்டார். திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் உள்ள அண்ணா சிலைக்கு காலை 9.30 மணிக்கு மாலை அணிவித்த கனிமொழி, பின்னர்  திருநெல்வேலி நகரத்தில் உள்ள வஉசி மணிமண்டபத்தில் அவருடைய சிலைக்கு மாலை அணிவித்தார்.

அதைத் தொடர்ந்து பொலிவுறும் நகரம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் திருநெல்வேலி சந்திப்பு பழைய பேருந்து நிலைய கட்டுமான பணிகளை கனிமொழி ஆய்வு செய்தார். அதன்பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுக ஆட்சியில் எல்லா திட்டங்களுக்கும் அடிக்கல் மட்டுமே நாட்டப்படுகின்றன. பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் ரூ.78 கோடி மதிப்பில் திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் தொடங்கி 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் கட்டி முடிக்கப்படவில்லை. இங்கு மணல் கொள்ளைதான் நடைபெற்றிருக்கிறது. 

பொலிவுறு நகரம் திட்டப் பணிகளை அரசு தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டது. அதனால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. பொலிவுறு நகரம் திட்டப் பணிகளில் முதல்வருக்கு வேண்டப்பட்டவர்களுக்கே ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் கடந்த திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதற்காக திமுகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திமுக எதை செய்தாலும், வழக்கு போடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது அதிமுக அரசு.  திமுக மீது எத்தனை வழக்குகள் போட்டாலும், அதை சந்திக்க தயாராக இருக்கிறோம். 

இப்போது பொங்கல் பரிசாக ரூ.2,500 வழங்குகிறார்கள். கரோனா பொது முடக்கத்தின்போது அனைவருக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தினார். ஆனால், அப்போது எதையும் வழங்காமல் இப்போது தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவிட்டு ரூ.2,500 வழங்குகிறது அதிமுக அரசு. அவர்கள் செய்த தவறுகளை மக்கள் மன்னித்து விடுவார்கள் என நினைக்கிறார்கள். ஆனால், மக்கள் ஏமாற மாட்டார்கள். அதிமுக அரசை வீ்ட்டுக்கு அனுப்பிவிட்டு திமுகவை ஆட்சியில் அமர்த்த மக்கள் காத்திருக்கிறார்கள். திமுகவின் தேர்தல் அறிக்கை ஜனவரி மாதத்துக்குள் தயாராகிவிடும் என்றார்.

நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோரின் அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்குப் பதிலளித்த கனிமொழி, "ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சியைத் தொடங்கலாம். ஆனால், கட்சி தொடங்கும் அனைவராலும் ஆட்சியை பிடிக்க முடியுமா என்ற கேள்வி இருக்கிறது. அந்த கேள்விக்குள் செல்ல நான் விரும்பவில்லை. கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோரால் திமுகவின் வாக்கு வங்கிக்கு எந்த பாதிப்பும் இல்லை. நல்லாட்சியை தரும் கட்சியை ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்பதில் மக்கள் உறுதியாக இருக்கிறார்கள். மக்கள் தங்கள் வாக்கை வீணடிக்க விரும்பமாட்டார்கள். அதனால், வரக்கூடிய சட்டப்பேரவை தேர்தலில் திமுகவின் வெற்றி உறுதி" என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory