» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லையப்பர் கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

செவ்வாய் 19, ஜனவரி 2021 10:30:00 AM (IST)

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் தைப்பூசத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் -காந்திமதியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. நிகழாண்டுக்கான விழாவையொட்டி இன்று செவ்வாய்க்கிழமை காலையில் சுவாமி - அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து கோயில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. நமச்சிவாய முழக்கத்துடன் பக்தர்கள் வழிபட்டனர். 

தொடர்ந்து திருவிழா நாள்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி - அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடைபெறுகின்றன. திருநெல்வேலி ஊரின் பெயர்க்காரணத்தை விளக்கும் வரலாற்று நிகழ்வான நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல் நிகழ்வு இம்மாதம் 22 ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கும், இரவு 8 மணிக்கு பஞ்ச மூர்த்திகளுடன் சுவாமி-அம்பாள் வீதியுலாவும் நடைபெற உள்ளது. தைப்பூச நாளான இம் மாதம் 28 ஆம் தேதி தீர்த்தவாரி நடைபெறுகிறது. 

இதற்காக சுவாமி நெல்லையப்பர், காந்திமதியம்பாள், அகஸ்தியர், தாமிரபரணி, குங்குலிய கலய நாயனார், சண்டிகேஸ்வரர், அஸ்திர தேவர், அஸ்திர தேவி ஆகிய மூர்த்திகள் சுவாமி நெல்லையப்பர் கோயிலில் இருந்து சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலை, கீழ்பாலம் வழியாக கைலாசபுரத்தில் தாமிரவருணி நதியின் கரையோரம் உள்ள சிந்துபூந்துறை தைப்பூச மண்டபத்தில் எழுந்தருள்வார்கள். அங்கு சிறப்புத் தீபாராதனை முடிந்ததும் தீர்த்தவாரி நடைபெறும்.

இம் மாதம் 29-ஆம் தேதி சௌந்திர சபா மண்டபத்தில் வைத்து பிருங்கி ரத முனி சிரேஷ்டர்களுக்கு திருநடனம் காட்டியருளும் சௌந்திர சபா ஸ்ரீ நடராஜர் திருநடனக் காட்சி நடைபெறுகிறது. 30-ஆம் தேதி சத்திர புஷ்கரணி என்றழைக்கப்படும் வெளி தெப்பக்குளத்தில் இரவு 7 மணிக்கு தெப்பத்திருவிழா நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் மற்றும் ஊழியர்கள் செய்து வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory