» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

விவசாயி வீட்டில் ரூ.12 லட்சம் நகை-பணம் கொள்ளை : மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

வெள்ளி 22, ஜனவரி 2021 9:14:57 AM (IST)

சங்கரன்கோவில் அருகே பட்டப்பகலில் விவசாயி வீட்டில் ரூ.12 லட்சம் நகை-பணத்தை கொள்ளையடித்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருவேங்கடத்தை அடுத்த சங்குபட்டி மேல தெருவைச் சேர்ந்தவர் நாராயணசாமி (70), விவசாயி. இவருைடய மனைவி ஆண்டாள் (65). இவர்களுடைய மகன் சரவணன். திருமணமான இவர் சிங்கப்பூரில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இதனால் நாராயணசாமி தன்னுடைய மனைவியுடன் சொந்த ஊரில் தனியாக வசித்து வருகிறார். நேற்று முன்தினம் காலையில் நாராயணசாமி மனைவியுடன் அப்பகுதியில் உள்ள தனது தோட்டத்துக்கு சென்றார்.

அப்போது நாராயணசாமியின் வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் பட்டப்பகலில் வீடு புகுந்து பின்புற கதவை உடைத்து திறந்து உள்ளே நுழைந்தனர். தொடர்ந்து வீட்டில் இருந்த பீரோவையும் உடைத்து திறந்து, அதில் இருந்த 28½ பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.1 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றனர். இவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ.12 லட்சம் இருக்கும். மாலையில் நாராயணசாமி மனைவியுடன் வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு மற்றும் பீரோ உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததையும், நகைகள்-பணம் கொள்ளை போனதையும் அறிந்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து திருவேங்கடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

சப்-இன்ஸ்பெக்டர் சோலையப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கொள்ளை நடந்த வீட்டில் பதிவான தடயங்களை தடயவியல் நிபுணர்கள் சேகரித்தனர். போலீசாரின் மோப்ப நாய் ரிக்கி வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த வீட்டில் மோப்பம் பிடித்து விட்டு, அப்பகுதி வழியாக கோவில்பட்டி மெயின் ரோடு வரையிலும் ஓடிச் சென்றது. ஆனால், யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இந்த கொள்ளை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து மாவட்ட எஸ்பி சுகுணாசிங் உத்தரவின்பேரில், கொள்ளையர்களை பிடிப்பதற்காக போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. பட்டப்பகலில் விவசாயியின் வீடு புகுந்து ரூ.12 லட்சம் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory