» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லையப்பர் கோவிலில் நெல்லுக்கு வேலியிட்ட நிகழ்வு - திரளான பக்தர்கள் தரிசனம்

சனி 23, ஜனவரி 2021 8:56:20 AM (IST)நெல்லையப்பர் கோவிலில் நேற்று நடந்த நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல் நிகழ்ச்சியினை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் தைப்பூச திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 11 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடந்து வருகிறது. விழாவின் 4-வது நாளான நேற்று முக்கிய நிகழ்ச்சியான நெல்லுக்கு வேலியிட்ட நிகழ்ச்சி நடந்தது. இதற்கு ஒரு புராண வரலாறு கூறப்படுகிறது. 

அதாவது, வேதபட்டர் என்பவர் சுவாமிக்கு நெய்வேத்தியம் படைக்க யாசகம் பெற்ற நெல்மணிகளை காயவைத்து விட்டு தாமிரபரணி ஆற்றுக்கு குளிக்க சென்றார். அப்போது கடும் மழை பெய்தது. சுவாமிக்கு நெய்வேத்தியம் படைக்க காயவைத்த நெல்மணிகள் மழையில் நனைந்து விடுமே என்று வேதனையுடன் வேதபட்டர் வந்து பார்த்தார். அப்போது நெல்மணிகளை ஈசன் மழையில் நனையாமல் வேலியிட்டு காத்து அருளியதாக வரலாறு கூறுகிறது. இதுவே ‘திருநெல்வேலி’ என பெயர் வரக்காரணம் என்று கூறப்படுகிறது.

இதை நினைவு கூறும் வகையில் நெல்லையப்பர் கோவிலில் நெல்லுக்கு வேலியிட்ட வைபவம் நடந்தது. இதற்காக சுவாமி முன்பு ஒரு பெரிய தட்டில் நெல்மணிகள் வைக்கப்பட்டு இருந்தன. அவற்றை பக்தர்கள் இருகைகளில் எடுத்து போட்டு சாமியை வழிபட்டனர். இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள். முன்னதாக, காலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து இரவு 8 மணிக்கு பஞ்சமூர்த்திகள், சுவாமி, அம்பாள் வீதி உலா நடந்தது.

வருகிற 28-ம் தேதி நெல்லை சந்திப்பு கைலாசபுரம் தாமிரபரணி ஆற்றங்கரையில் சிந்துபூந்துறை தீர்த்தவாரி மண்டபத்தில் வைத்து சுவாமி, அம்பாள் தைப்பூச தீர்த்தவாரி நடக்கிறது. தொடர்ந்து 29-ம் தேதி சவுந்தரிய சபா மண்டபத்தில் நடராஜர் திருநடன காட்சி நடக்கிறது. வருகிற 30-ம் தேதி சுவாமி நெல்லையப்பர் கோவில் எதிரே உள்ள சந்திர புஷ்கரணி என்ற வெளித்தெப்பத்தில் இரவு 7 மணிக்கு தெப்பத்திருவிழா நடக்கிறது. இதில் மின்விளக்குளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் பஞ்சமூர்த்திகளுடன் சுவாமி, அம்பாள் வலம் வருகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை நெல்லையப்பர் கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory