» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வாஞ்சி மணியாச்சி- நாகர்கோவில் இரட்டை ரயில் பாதை பணிகள் அடுத்த ஆண்டு நிறைவடையும்

வியாழன் 18, பிப்ரவரி 2021 8:51:45 AM (IST)

வாஞ்சி மணியாச்சி-நாகர்கோவில் இடையே இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணிகள் அடுத்த ஆண்டு இறுதிக்குள் நிறைவடையும் என தென்னக ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் கூறினார்.

தென்னக ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் நேற்று மாலையில் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் ஆய்வு செய்தார். ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடைகளை பார்வையிட்ட அவர், அங்கு குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளனவா? என்று பார்வையிட்டார். முதலாவது நடைமேடையில் ரயில்வே உபகரணங்கள் கண்காட்சி அமைக்கப்பட்டு உள்ளது. இதனை பொது மேலாளர் ஜான் தாமஸ் திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னர் அவர், ரயில்களை பராமரிக்கும் இடத்தையும், ஊழியர்களின் குடியிருப்புகளையும் பார்வையிட்டார்.

பின்னர் ஜான் தாமஸ் நிருபர்களிடம் கூறியதாவது: கேரள மாநிலம் புனலூரில் இருந்து நெல்லை ரயில் நிலையம் வரையிலும் ஆய்வு மேற்கொண்டேன். இங்குள்ள அனைத்து ரயில் நிலையங்களும் சிறப்பான முறையில் பராமரிக்கப்படுகிறது. பயணிகளுக்கு தேவையான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மதுரை-வாஞ்சிமணியாச்சி இடையே இரட்டை ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது வாஞ்சி மணியாச்சியில் இருந்து நாகர்கோவில் வரையிலும் இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் அடுத்த ஆண்டு (2022) டிசம்பர் மாதத்திற்குள் நிறைவடையும்.

கொரோனா பரவலால் பயணிகள் ரயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நிலைமையை ஆய்வு செய்த பின்னர் பயணிகள் ரயில்கள் மீண்டும் இயக்கப்படும். எக்ஸ்பிரஸ் ரயில்கள் அனைத்தும் படிப்படியாக இயக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார். பின்னர் அவர், மதுரை ரயில்வே கோட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 18 தொழிலாளர்களுக்கு விருதுகளை வழங்கினார். அப்போது மதுரை கோட்ட மேலாளர் லெனின், ரயில் நிலைய மேலாளர் முருகேசன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். 

மும்பை- நாகர்கோவில் ரயிலை தினசரி இயக்க கோரிக்கை 

இதற்கிடையே நெல்லை வந்த பொது மேலாளர் ஜான் தாமசிடம், மும்பை தமிழின ரயில் பயணிகள் நலச்சங்க தலைவர் அப்பாதுரை மனு வழங்கினார். அந்த மனுவில், ‘மும்பை-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் இன்னும் இயக்கப்படவில்லை. அதனால் மும்பை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலை மக்கள் நலன் கருதி 6 நாட்களுக்கு பதிலாக தினசரி இயக்க வேண்டும். ரயில் நிலையத்தில் நடைபெறும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும்" என்று கூறப்பட்டு இருந்தது. இதேபோன்று ரயில்வே தொழிற்சங்கத்தினரும் பொது மேலாளரிடம் கோரிக்கை மனு வழங்கினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST



Tirunelveli Business Directory