» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தென்காசி மாவட்டத்தில் 4 அணைகளில் தண்ணீர் திறப்பு : ஆட்சியர், எம்பிக்கள் பங்கேற்பு

திங்கள் 14, ஜூன் 2021 4:11:54 PM (IST)



தென்காசி மாவட்டத்தில் கடனாநதி, இராமநதி, கருப்பாநதி, அடவிநயினார்  ஆகிய நீர்த்தேக்கங்களில் இருந்து கார் பருவ சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஞானதிரவியம் ஆகியோர் கடனாநதி, இராமநதி  ஆகிய நீர்த்தேக்கங்களில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தனர். தொடர்ந்து தென்காசி நடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமார் கருப்பாநதி, அடவிநயினார் ஆகிய நீர்த்தேக்கங்களில் இருந்து கார் பருவ சாகுபடிக்கு தண்ணீரினை திறந்து வைத்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவிக்ககையில்:-  தமிழக முதல்வர் தென்காசி மாவட்டம், தென்காசி வட்டம் இராமநதி பாசன திட்டத்தின் கீழுள்ள வடகால், தென்கால் மற்றும் பாப்பன்கால் ஆகிய கால்வாயின் கீழ் பாசனம் பெறும் 1008.19 ஏக்கர் பாசன நிலங்களுக்கு கார் பருவ சாகுபடிக்கு இராமநதி நீர்த்தேக்கத்திலிருந்து 14.06.2021 முதல் 31.10.2021 வரை 140 நாட்களுக்கு விநாடிக்கு 60 கனஅடி வீதம் மொத்தம் 168.03 மி.கன அடிக்கு மிகாமல் நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தைப் பொறுத்து தேவைக்கு ஏற்ப தண்ணீர் திறக்க உத்தரவிட்டார். 

இதனைத் தொடர்ந்து இன்று இராமநதி நீர்த்தேக்கத்திலிருந்து கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இதன் மூலம் கடையம், மேலக்கடையம், கோவிந்தபேரி, ஆழ்வார்குறிச்சி, வாகைக்குளம், அயன் பொட்டல்புதூர், பொட்டல்புதூர், பாப்பான்குளம், ரவணசமுத்திரம் ஆகிய கிராமங்களின் விவசாயிகள் பயன்பெறுவார்கள்.

இதேபோல் கடனாநிதி நீர்த்தேக்கத்திலிருந்து கார் பருவ சாகுபடிக்கு 3987.57 ஏக்கர் பாசன பரப்புள்ள நேரடி பாசனத்திற்காக 125.00 கனஅடி மிகாமலும் தண்ணீர் திறந்து விட உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்முலம் தென்காசி, அம்பாசமுத்திரம் ஆகிய இரு வட்டங்களில் இருந்து 12 கிராமங்களில் உள்ள விவசாயிகள் பயன் பெறுவார்கள்.

கருப்பாநதி நீர்த்தேக்கத்திலிருந்து கார் பருவ சாகுபடிக்கு 1082.23 ஏக்கர் பாசன பரப்புள்ள நேரடி பாசனத்திற்காக 25 கனஅடி மிகாமலும் தண்ணீர் திறந்து விட உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்முலம் கடையநல்லூர் வட்டத்திலுள்ள 7 கிராமங்களில் உள்ள விவசாயிகள் பயன் பெறுவார்கள்.

அடவிநயினார் அணையிலிருந்து கார் பருவ சாகுபடிக்கு 2147.47 ஏக்கர் பாசன பரப்புள்ள நேரடி பாசனத்திற்காக 60 கனஅடி மிகாமலும் தண்ணீர் திறந்து விட உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்முலம் செங்கோட்டை, கடையநல்லூர் வட்டத்திலுள்ள 12 கிராமங்களில் உள்ள விவசாயிகள் பயன் பெறுவார்கள். 

ஆக மொத்தம் நான்கு நீர்த்தேக்க அணையிலிருந்து 8225 ஏக்கர் கார் பருவ சாகுபடிக்கு நேரடியாக தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. ஆகையால் எதிர்வரும் நாட்களில் தென்மேற்கு பருவ மழையினால் அணையில் நீர்; வரத்து அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நீரை அனுமதிக்கப்பட்ட பாசன நிலங்கள் முழுமைக்கும் பயன்பெறும் வகையில் சுழற்சி முறையில் வழங்கப்பெறும் எனவும் விவசாய பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி சிறந்த முறையில் கார்பருவ சாகுபடி பயிரிட்டு நீர் விநியோகப்பணிக்கு, பொதுப்பணித்துறைக்கு ஒத்துழைப்புத்தர வேண்டுமென மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் (நீர்வளம்) எஸ்.மாரியப்பன், உதவி செயற்பொறியாளர் சங்கர்ராஜ், உதவி பொறியாளர் முருகேசன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory