» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடி ரவுடி என்கவுண்டர்: மாஜிஸ்ட்ரேட் நேரில் விசாரணை - தென்மண்டல ஐ.ஜி. முகாம்!

சனி 16, அக்டோபர் 2021 12:41:50 PM (IST)

தூத்துக்குடியில் ரவுடி என்கவுண்டர் செய்யப்பட்டது தொடர்பாக மாஜிஸ்ட்ரேட் நேரில் விசாரணை நடத்தினார்.

தூத்துக்குடி மாவட்டம், கூட்டாம்புளி அருகேயுள்ள திருமலையாபுரத்தைச் சோ்ந்தவா் துரைமுருகன் (40). தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரத்தைச் சோ்ந்த ஜெகதீஷ் என்பவரை கொலை செய்து திருநெல்வேலி அருகே புதைத்தது தொடா்பாக துரைமுருகனை போலீஸாா் தேடி வந்தனா். ரௌடி துரைமுருகன் தனது நண்பா்கள் சிலருடன் தூத்துக்குடி முத்தையாபுரம் கோவளம் கடற்கரை பகுதியில் தங்கி இருப்பதாக தனிப்படையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, தனிப்படை பிரிவு காவல் உதவி ஆய்வாளா் ராஜபிரபு தலைமையிலான குழுவினா், துரைமுருகனை பிடிக்கும் முயற்சியில் வெள்ளிக்கிழமை மாலை ஈடுபட்டனா். அப்போது, காவலா் டேவிட்ராஜன், உதவி ஆய்வாளா் ராஜபிரபு ஆகியோரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோட முயன்றபோது போலீஸாரால் சுடப்பட்டு துரைமுருகன் உயிரிழந்தாா். காயமடைந்த காவல் உதவி ஆய்வாளா் ராஜபிரபு, காவலா் டேவிட் ராஜன் ஆகியோா் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். 

என்கவுண்டர் தொடர்பாக முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் வழக்குப் பதிவு செய்துள்ளார். விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் விசாரணை நடத்தி வருகிறார்.  என்கவுண்டரில் பலியான துரைமுருகனின்  உடல் உடற்கூறு ஆய்விற்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக தூத்துக்குடி ஜே.எம்.எண் 2 மாஜிஸ்ட்ரேட் உமாதேவி, பார்வையிட்டு விசாரணை நடத்தினார். மேலும், என்கவுண்டரில் தொடர்புடைய காவல் ஆய்வாளர் மற்றும் போலீசாரிடம் நடத்தினார். இதையைடுத்து பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. 

தென்மண்டல ஐ.ஜி. முகாம்

துரைமுருகன் என்கவுன்டர் சம்பவத்தில் காயம்டைந்து, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எஸ்ஐ ராஜபிரபு, காவலர் டேவிட் ஆகியோரை தென்மண்டல ஐ.ஜி. அன்பு சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் நடந்த சம்பவம் குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தினார். இன்று 2வது நாளாக போலீஸ் பாதுகாப்பு மற்றும் விசாரணை நடைமுறைகளை ஐ.ஜி. அன்பு மேற்பார்வையிட்டார். அவருடன் நெல்லை சரக டிஐஜிபி ரவீன்குமார் அபிநபு, தூத்துக்குடி எஸ்.பி. ஜெயக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

அண்ணன் மகன் மூலம் தகவல்

துரைமுருகனின் அண்ணன் மகன் சுதந்திரராஜ் (27). இவர் மீது தூத்துக்குடி சிப்காட், மத்தியபாகம், கோயம்பேடு காவல் நிலையங்களில் 3 கொலை வழக்கு மற்றும் கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளில் ஜாமீனில் வெளியே வந்து இரண்டரை ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த அவரை தூத்துக்குடி தனிப்படை போலீசார் கடந்த 14ம் தேதி கைது செய்தனர். அவர் மூலம் கிடைத்த தகவல் மூலம் துரைமுரு கன் மறைந்திருந்த இருப்பிடம் போலீசுக்கு தெரியவந்தது. 

மைத்துனர் கொலை - பிரிந்து சென்ற மனைவி 

துரைமுருகன் தனது அத்தை மகன் மைத்துனரான முருகன் என்பவரை கூட்டாளியாக சேர்த்து திருட்டு மற்றும் அடிதடியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனால் முருகன் அடிக்கடி சிறை சென்றுள்ளார். அந்த நேரத்தில் முருகன் மனைவியுடன் துரைமுருகனுக்கு பழக்கம் ஏற்பட்டுள் ளது. 2003ம் ஆண்டு ஒரு வழக்கு தொடர்பாக முருகனை போலீசார் பிடித்துச் சென்றுள்ளனர். இதனால் வீட்டிற்கு அவர் வர மாட்டார் என நினைத்து முருகன் மனைவியு டன் துரைமுருகன் தனிமையில் இருந்துள்ளார். 

ஆனால் போலீசார் முருகனை விடுவித்து விட்டதால், வீட்டிற்கு வந்த முருகன், இருவரையும் பார்த்து விட்டார். இதனால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில் முருகனை கொன்று வீட்டுக்குள்ளேயே புதைத்து விட்டார். ரவுடி துரைமுருகனின் கிரிமினல் நடவடிக்கைகள் பிடிக்காமல் அவரது மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனால் வேறொரு பெண்ணை விட்டுக்கு அழைத்து வந்து குடும்பம் நடத்தினார். அவரை தாய் உள்ளிட்ட குடும்பத்தினர் ஏற்காததாலும், துரைமுருகனின் ரவுடியி சத்தால் பயந்து, பயந்து வாழ வேண்டியிருந்ததாலும் அவரும் பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது.


மக்கள் கருத்து

ராஜாOct 18, 2021 - 10:15:21 AM | Posted IP 162.1*****

so crucial

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory