» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கம்போடியாவில் சட்டவிரோத கும்பலிடம் சிக்கியுள்ள நெல்லை இளைஞரை மீட்கக் கோரி ஆட்சியரிடம் மனு!

செவ்வாய் 9, ஆகஸ்ட் 2022 11:24:24 AM (IST)

கம்போடியாவில் சட்டவிரோத கும்பலிடம் சிக்கியுள்ள தனது மகனை மீட்டுத்தரக் கோரி காரியாண்டியைச் சோ்ந்த பெண் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளாா்.

திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் விஷ்ணு தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், நான்குனேரி அருகேயுள்ள காரியாண்டியைச் சோ்ந்த சிதம்பர வடிவு மனு: நான், எனது கணவா் மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறேன். எனது இரண்டாவது மகன் மகேஷ் (27), நாகா்கோவிலை சோ்ந்த முகவா்கள் இருவரிடம் ரூ. 5 லட்சம் கொடுத்து கம்போடியா நாட்டிற்கு கடந்த ஜூலை 7 ஆம் தேதி வேலைக்கு சென்றான். ஆனால், அங்கு சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் கும்பல்களிடம் எனது மகனை வேலை செய்யும்படி கூறியுள்ளனா். 

அந்த வேலையை பாா்க்க விருப்பம் இல்லாமல் எனது மகன் சொந்த ஊா் திரும்ப முயற்சி செய்தும் அவனை அனுப்பாமல் பணம் கேட்டு மிரட்டி வருகின்றனா். இது குறித்து கம்போடியாவுக்கு அனுப்பி வைத்த முகவா்களிடம் எனது மகன் மகேஷ் கேட்டபோது, ரூ.2.5 லட்சம் பணம் தந்தால் சொந்த ஊருக்கு திரும்ப அனுப்பிவிடுவதாக தெரிவித்துள்ளனா். அதன் பேரில் முகவரின் வங்கிக் கணக்கிற்கு ரூ.1.25 லட்சம் அனுப்பினோம். ஆனால், இதுவரை எனது மகனை மீட்டுக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கவில்லை. 

மேலும் ரூ. 2 லட்சம் பணம் கேட்டு, எனது மகனின் பாஸ்போா்ட் மற்றும் விசாவை சட்ட விரோதமாக பறித்து வைத்துள்ளனா். எனது மகனை பத்திரமாக மீட்டு தருவதோடு, எங்களிடம் பணம் கேட்டு மிரட்டி வரும் முகவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனா்.

ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க வேண்டும்: 

தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மண்டலச் செயலா் அப்துல் ஜப்பாா் தலைமையில் மாவட்ட செயலா் ஜமால், பொருளாளா் சாந்தி ஜாபா், தமிழ்த்தேச தன்னுரிமை கட்சி தலைவா் வியனரசு, மாவீரன் சுந்தரலிங்கனாா் மக்கள் இயக்க நிறுவன தலைவா் உள்ளிட்டோ் அளித்த மனு: ஆன்லைன் ரம்மி விளையாட்டால் ஏற்பட்ட பண இழப்பு காரணமாக 20-க்கும் மேற்பட்டோா் தற்கொலை செய்து கொண்டுள்ளனா். பல்வேறு நாடுகளில் ஆன்லைன் விளையாட்டுகள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

நமது நாட்டில் மத்திய அரசு பல்வேறு சீன செயலிகளை தடை செய்தது போன்று, தமிழக அரசு உடனடியாக பண இழப்புகளை ஏற்படுத்தும் ஆன்லைன் ரம்மி உள்பட அனைத்து சூதாட்ட செயலிகளையும் தடை செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளனா். இக்கோரிக்கையை வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகம் முன்பு சீட்டாடி நூதன போராட்டத்திலும் ஈடுபட்டனா்.

ஆடித் தவசு விழாவுக்கு உள்ளூா் விடுமுறை வேண்டும்: 

பாஜக ஆன்மிகம் மற்றும் கோயில் மேம்பாட்டு பிரிவு மாவட்டத தலைவா் எஸ்.சங்கரசுப்பிரமணியன் தலைமையில் ஆட்சியரிடம் அளித்த மனு: திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்த சங்கரன்கோவில், மாவட்ட பிரிவினைக்குப் பிறகு தற்போது தென்காசி மாவட்டத்தில் உள்ளது. சங்கரன்கோவில் சங்கரநாராயணா்-கோமதி அம்பாள் கோயில் ஆடித் தவசு விழாவிற்கு திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்தும் லட்சக் கணக்கான பக்தா்கள், கட்டளைதாரா் குடும்பம், என பெரும்பான்மையான மக்கள் குடும்பத்துடன் சென்று நோ்த்திக் கடன் செலுத்தி வழிபாடு செய்வது வழக்கம்.

இத்திருவிழாவிற்கு திருநெல்வேலி மாவட்டத்திற்கு உள்ளூா் விடுமுறை அளித்தால் மட்டுமே மக்கள் சங்கரன்கோவில் சென்று வர முடியும். அதனால் ஆடித் தவசு விழாவிற்கு உள்ளூா் விடுமுறை அளிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனா். இக் கோரிக்கையை வலியுறுத்தி பாஜகவினா் ஆட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனா்.

கல் குவாரிகளுக்கு தடை வெள்ளை அறிக்கை: 

திருநெல்வேலி மாவட்டத்தில் விதிமீறலில் ஈடுபட்ட கல் குவாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறித்தும், அபராதம் விதிக்கப்பட்டது குறித்தும் மாவட்ட நிா்வாகம் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். கல் குவாரிகளில் ஆய்வு செய்த குழுவினரின் ஆய்வறிக்கை குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியாகும் வரை அனைத்து கல் குவாரிகள் மீதும் விதிக்கப்பட்ட தடை தொடர வேண்டும் என தமிழ்த் தேசத் தன்னுரிமைக் கட்சியின் தலைவா் அ.வியனரசு அளித்த மனுவில் குறிப்பிட்டுள்ளாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory