» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
குற்றால அருவியில் அடித்து வரும் மரத்தடிகள், பாம்பு, பூச்சிகள்: சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை!
செவ்வாய் 9, ஆகஸ்ட் 2022 5:25:16 PM (IST)
குற்றாலத்தில் மெயினருவி, ஐந்தருவி ஆகிய அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
கேரளாவில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. குறிப்பாக பாபநாசம், சேர்வலாறு அணைகள் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது.
கடந்த 9 நாட்களில் பாபநாசம் அணை நீர்மட்டம் சுமார் 41 அடி வரை உயர்ந்துள்ளது. கடந்த 3-ந்தேதி பாபநாசம் அணை நீர்மட்டம் 75 அடியாக இருந்த நிலையில் இன்று 104.60 அடியை எட்டி உள்ளது. இதேபோல் 3-ந்தேதி சேர்வலாறு அணை நீர்மட்டம் 100 அடியை எட்டிய நிலையில் இன்று அதில் 121.95 அடி நீர் இருப்பு உள்ளது.
இந்த அணைகளுக்கு வினாடிக்கு 2730 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணைகளில் இருந்து 1004 கனஅடி நீர் பாசனத்திற்காக வெளியேற்றப்பட்டு வருகிறது. பாபநாசம் அணை பகுதியில் அதிகபட்சமாக 35 மில்லிமீட்டரும், சேர்வலாறில் 24 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.
தென்காசி மாவட்டத்திலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள தென்காசி, செங்கோட்டை, ஆய்குடி, சிவகிரி, கடையநல்லூர் உள்ளிட்ட இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இன்று காலை வரை கருப்பாநதி பகுதியில் 27 மில்லிமீட்டரும், அடவிநயினாரில் 22 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. இதேபோல் கடனாவில் 20 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. தொடர்மழையால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்த வண்ணம் உள்ளது. கடனா, ராமநதி அணைகள் முழு கொள்ளளவை எட்டினாலும் அணை பாதுகாப்பு கருதி 2 அடி குறைவாகவே தேக்கி வைக்கப்பட்டு உள்ளது.
அணைக்கு வரும் நீர் உபரியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.அடவிநயினார் அணை நீர்மட்டம் மேலும் 3 அடி உயர்ந்து 125 அடியாகவும், கருப்பாநதி அணையில் 64.96 அடியும் நீர் இருப்பு உள்ளது.
குற்றாலத்தில் மெயினருவி, ஐந்தருவி ஆகிய 2 அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரிப்பால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. பழைய குற்றாலம் அருவி, புலியருவி, சிற்றருவியில் தடை விதிக்கப்படவில்லை. இதனால் அந்த அருவிகளில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
மெயினருவியில் தண்ணீர் ஆர்ச்சை தாண்டி விழுகிறது. அருவியின் மேல் பகுதியில் கனமழையால் மரத்தடிகள், கட்டைகள், பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகள் அடித்து வரப்படுகின்றன. அவற்றை அருவிக்கரையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு துறையினர் அப்புறப்படுத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்: ஆட்சியர் சுகுமார் ஆய்வு
சனி 27, டிசம்பர் 2025 5:23:34 PM (IST)

நெல்லை அரசு டவுன் பஸ்சில் முதல் பெண் கண்டக்டர் : சாதனை படைக்கும் சிங்கப்பெண்!!
சனி 27, டிசம்பர் 2025 8:51:46 AM (IST)

உறவினர் காதை கத்தியால் வெட்டிய போலீஸ் ஏட்டு: நெல்லையில் பரபரப்பு
சனி 27, டிசம்பர் 2025 8:50:11 AM (IST)

நெல்லை மாவட்டத்தில் நவம்பர் மாதத்தில் 310.45 மி.மீ மழை பெய்துள்ளது: ஆட்சியர் தகவல்
வெள்ளி 26, டிசம்பர் 2025 5:24:20 PM (IST)

திருநெல்வேலியில் நாளை மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்!
வெள்ளி 26, டிசம்பர் 2025 10:54:01 AM (IST)

விசைத்தறிகளை நவீனமயமாக்கும் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர் அழைப்பு!
வெள்ளி 26, டிசம்பர் 2025 10:36:34 AM (IST)


