» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ஆட்சியர் பாரபட்சமாக நடப்பதாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு புகார்!

சனி 3, ஜூன் 2023 9:48:18 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பாரபட்சமாக நடப்பதாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு புகார் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக  ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்புதமிழ்நாடு முதல் அமைச்சருக்கு அனுப்பியுள்ள மனுவில், தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பின் சார்பில் நாங்கள் தங்கள் கவனத்திற்கு கீழ்க்கண்ட செய்திகளை கொண்டு வருகிறோம். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பின் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் அரி ராகவன் என்பவர் பெயரில் எங்களது கூட்டமைப்பு தமிழக அரசோடு ஒரு தரப்பாக இணைந்து, தேசிய பசுமை தீர்ப்பாயத்திலும், சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்கு நடத்தினோம். 

தற்போது உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசோடு இணைந்து நாங்களும் ஒரு தரப்பாக வழக்கு நடத்தி வருகிறோம். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக முட அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் உறுதுணையாக இருந்து வருகிறோம். உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையில் கொரோனா காலத்தில் ஆக்ஸிஜன் தயாரிப்பதற்கு உத்தரவிட்டு கண்காணிப்பு கமிட்டி அமைத்தது. 

அதில் தூத்துக்குடி மக்கள் சார்பாக இருவரை, தேர்வு செய்யும் அனுமதியையும் எங்களுக்கு கொடுத்தது. அதன்படி மாவட்ட ஆட்சியர் எங்களிடம் தொடர்பு கொண்டார் நாங்களும் இருவரை தேர்ந்தெடுத்து மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி, சிபாரிசு கடிதம் கொடுத்தோம். அதன் பின்பு பல முறை மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை ஸ்டெர்லைட் பிரச்சனைகளில் பேச்சு வார்த்தைக்கு அழைத்து நாங்களும் கலந்து கொண்டுள்ளோம்.

இந்நிலையில் நேற்று 02.06.23 தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களை அழைத்து, அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் கழிவை அகற்றுவது சம்பந்தமாக தாக்கல் செய்த அறிக்கையை பற்றி விவாதித்துள்ளார். மேற்படி கூட்டத்திற்கு எங்களது ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பை அழைக்கவில்லை. அதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. இதனால் நாங்கள் மிகுந்த அதிர்ச்சியும், மன வேதனையும் அடைந்துள்ளோம்.

இதே போன்று 2018 ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு நடப்பதற்கு முன்பாக 20.05.18 அன்று நடந்த பேச்சுவார்த்தையில் அப்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் அவர்கள் போராட்ட குழுவில் அனைவரையும் அழைக்கவே இல்லை. போராட்டத்தில் அதிக அக்கறை உள்ள தரப்பை பேச்சுவார்த்தைக்கு அழைக்காததை ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு படுகொலையை விசாரித்த நீதியரசர் அருணா ஜெகதீசன் கமிட்டியின் அறிக்கை கண்டித்துள்ளது. 

அதில் மாவட்ட ஆட்சியர் அனைத்து தரப்பு ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களையும் சரியாக அழைத்து பேசியிருந்தால் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்திருக்காது என்று குறிப்பிடப் பட்டுள்ளது. அதற்காக அன்றைய ஆட்சியர் வெங்கடேஷ் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் செய்யப்பட்டுள்ளது. அறிக்கை தாக்கல் அன்றைய ஆட்சியர் செய்த அதே தவறை மீண்டும் தற்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரும் செய்கிறார். 

மேற்படி கூட்டத்திற்கு முன்பு வரை நடைபெற்ற எல்லா நிகழ்வுகளுக்கும் எங்களை அழைப்பதும், நாங்கள் சென்று கலந்து கொண்டு ஒரு சுமூகமான முடிவை எட்ட அரசுக்கு உதவி செய்தும் வந்தோம். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பாரபட்சமாக நடந்து கொள்வதை நாங்கள் உங்கள் கவனத்திற்கு கொண்டு வருவது தவிர்க்க முடியாதது ஆகிறது. எனவே தாங்கள் தலையிட்டு 2018 இல் நடந்த தவறு மீண்டும் நடக்காமல் தடுத்து, ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களை எந்தவித பாரபட்சமும் இன்றி நடத்தி, ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடி, தூத்துக்குடி மக்களை காப்பாற்ற வழிவகை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

தூத்துக்குடிJun 3, 2023 - 10:26:46 PM | Posted IP 172.7*****

ஆட்சியருக்கு நன்றிகள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory