» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கடைக்குள் புகுந்து வாலிபர் சரமாரி வெட்டிக் கொலை : நிலத்தகராறில் பயங்கரம்!

புதன் 7, ஆகஸ்ட் 2024 10:37:12 AM (IST)

நெல்லையில் நிலத் தகராறில் கடைக்குள் புகுந்து வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீசார்  கைது செய்தனர்.

நெல்லை மேலப்பாளையம் ஹாமீம்புரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் அமிர்அம்சா. இவரது மகன் செய்யது தாமீம் (31). இவர் மேலப்பாளையம்- அம்பை ரோட்டில் பள்ளிவாசல் அருகே கடை வைத்து பத்திரப்பதிவு தொடர்பாக ஆன்லைன் சேவை மையம் நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இரவில் கடையில் இருந்து வீட்டிற்கு சாப்பிடுவதற்காக சென்றார். பின்னர் அவர் கடையில் வேலை இருப்பதாக கூறிவிட்டு மீண்டும் கடைக்கு சென்றார்.

ஆனால், வெகுநேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வராததால் குடும்பத்தினர் கடைக்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு செய்யது தாமீம், மர்மநபர்களால் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதை பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து கதறினார்கள். மேலப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். அதில் செய்யது தாமீமுக்கும், நெல்லை அருகே உள்ள சீதபற்பநல்லூர் சிறுக்கன்குறிச்சி பகுதியைச் சேர்ந்த பேச்சிமுத்துவுக்கும் (39) நிலம் தொடர்பாக தகராறு இருந்துள்ளது. இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக ஆத்திரமடைந்த பேச்சிமுத்து, தனது கூட்டாளியான அதே பகுதியைச் சேர்ந்த பெருமாள் (59) என்பவருடன் நேற்று முன்தினம் இரவில் கடைக்குள் புகுந்து செய்யது தாமீமை வெட்டிக்கொலை செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் மூர்த்தி உத்தரவின் பேரில் மேலப்பாளையம் போலீசார் இந்த கொலையில் ஈடுபட்டதாக பேச்சிமுத்து, பெருமாள் ஆகிய 2 பேரையும் நேற்று மாலையில் அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். நெல்லை மேலப்பாளையத்தில் கடைக்குள் புகுந்து வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory