» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லை அருகே கட்டுகட்டாக ரூ.500 கள்ள நோட்டுகள் சிக்கியது - 4பேர் கைது!
புதன் 7, ஆகஸ்ட் 2024 10:39:40 AM (IST)
நெல்லை அருகே போலீசார் நடத்திய வாகன சோதனையில் காரில் கட்டு, கட்டாக ரூ.500 கள்ளநோட்டுகள் சிக்கின. இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழ்நாட்டில் போதைப்பொருள், கள்ளநோட்டுகள், தங்கம் உள்ளிட்டவை கடத்தப்படுவதை தடுக்க சிறப்பு போலீஸ் தனிப்பிரிவு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தனிப்பிரிவு போலீசாருக்கு மதுரையில் இருந்து நெல்லை, கன்னியாகுமரி வழியாக கள்ளரூபாய் நோட்டுகளை ஒரு கும்பல் காரில் கொண்டு செல்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. உடனே, நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.
அதேநேரத்தில் நெல்லையை அடுத்த மூன்றடைப்பு அருகே நெடுங்குளம் சந்திப்பு பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் முருகேஷ் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்து அதில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். காரில் இருந்தவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காரில் இருந்தவர்களை கீேழ இறங்க செய்து, காரை சோதனையிட்டனர். அப்போது, காரின் இருக்கைக்கு கீழ் 2 பெட்டிகள் இருந்தது. அதை திறந்து பார்த்தபோது கட்டு, கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருந்தன. அதை எடுத்து பார்த்தபோது அனைத்தும் கள்ள ரூபாய் நோட்டுகள் என்பது தெரியவந்தது. மொத்தம் ரூ.75 லட்சத்து 93 ஆயிரத்து 500 இருந்தன. இதனை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் காரில் இருந்த ஒரு அரிவாள், கத்தி, 5-க்கும் மேற்பட்ட செல்போன்கள் ஆகியவற்றையும், காரையும் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து காரில் இருந்த 4 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில், 4 பேரும் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தெற்கு தெருவை சேர்ந்த கணேசன் மகன் விஷ்ணு சங்கர் (வயது 35), செல்லையா மகன் தங்கராஜ் (42), விருதுநகர் மாவட்டம் சிவகாசி திருத்தங்கல் பகுதியை சேர்ந்த சீமைசாமி (56), ராமதாஸ் மகன் கோபாலகிருஷ்ணன் (33) ஆகியோர் என்பது தெரியவந்தது.
அவர்கள் மதுரையில் கள்ளரூபாய் நோட்டுகளை அச்சடித்து அவற்றை ரூ.1 லட்சம் அசல் பணத்திற்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான கள்ளரூபாய் நோட்டுகளை கொடுத்து பணம் இரட்டிப்பு செய்து வந்துள்ளனர். தற்போது அவர்கள் கள்ளரூபாய் நோட்டுகளை தயார் செய்து கேரளாவிற்கு ரகசியமாக கொண்டு செல்ல முயன்ற பரபரப்பு தகவலும் வெளியானது.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, 4 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.