» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வேளாண் அதிகாரி தீக்குளித்து தற்கொலை: பாளையங்கோட்டையில் பரபரப்பு!

ஞாயிறு 18, ஆகஸ்ட் 2024 10:48:52 AM (IST)

பாளையங்கோட்டையில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து ஓய்வு பெற்ற வேளாண் அதிகாரி தற்கொலை செய்து கொண்டார். உடலில் எரிந்த நெருப்புடன் அவர் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை பாளையங்கோட்டை சாந்திநகர் 28-வது தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 61). இவர் கல்லிடைக்குறிச்சியில் வேளாண்துறை அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவரது மனைவி கணபதியம்மாள் (59). இவர் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தாசில்தாராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். அவர்கள் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகிறார்கள்.

நேற்று முன்தினம் இரவு ஆறுமுகம், கணபதியம்மாள் ஆகியோர் வழக்கம்போல் சாப்பிட்டுவிட்டு தூங்கச் சென்றனர். நள்ளிரவில் வீட்டில் இருந்து வெளியே வந்த ஆறுமுகம், சற்று தொலைவில் இருந்த ஒரு பெட்ரோல் பங்கிற்கு சென்று கேனில் பெட்ரோல் வாங்கி வந்தார். நேற்று அதிகாலையில் அங்கு உள்ள தனியார் பள்ளிக்கு சொந்தமான மைதானத்திற்கு சென்றார். 

அங்கு வைத்து திடீரென பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். பின்னர் வலி தாங்க முடியாமல் உடலில் பற்றிய நெருப்புடன் அலறியடித்தபடி ஆறுமுகம் தனது வீட்டை நோக்கி ஓடினார். வீட்டின் அருகே சென்றதும் சுருண்டு கீழே விழுந்து கதறினார். சத்தம் கேட்டு கணபதியம்மாள் மற்றும் அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர்.

மேலும் பாளையங்கோட்டை போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து தீயில் கருகி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஆறுமுகத்தை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஆறுமுகம் காலையில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் வழக்குப்பதிவு செய்தார்.

கடந்த சில நாட்களாக ஆறுமுகம் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாமா? என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இருந்தபோதும் வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்ற கோணத்திலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory