» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கோவில் விழாவில் அண்ணன், தம்பி குத்திக்கொலை: பெண்கள் உள்பட 7 பேர் கும்பல் வெறிச்செயல்!
ஞாயிறு 18, ஆகஸ்ட் 2024 11:10:26 AM (IST)
திசையன்விளை கோவில் விழாவில் அண்ணன்-தம்பி குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் திசையன்விளை கக்கன்நகரைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன்கள் மகேஷ்வரன் (43), மதியழகன் (40), மதிராஜா (38). இவர்கள் அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. இதில் மகேஷ்வரன் உடன்குடி அனல் மின்நிலையத்திலும், மற்ற 2 பேரும் டிரைவர்களாகவும் உள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்தவர் சுடலைமணி மனைவி முருகேஷ்வரி (50). இவர்களுக்கு ராஜ்குமார் (26), பெவின் குமார் (24), வருண் குமார் (22), அஜித்குமார் (23), சபரி வினோத் (18) ஆகிய 5 மகன்கள் உள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு கக்கன்நகர் அருகே ஓடக்கரை சுடலைமாடசாமி கோவில் கொடை விழா நடைபெற்றது. இதில் மேற்கண்ட இருதரப்பு குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். நள்ளிரவில் கோவில் முன் கரகாட்டம் நடந்தது. இடையில் பூஜைக்காக கரகாட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது, 2 குடும்பத்தினருக்கும் இடையே மதுபோைதயில் திடீரென்று வாய்த்தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த ராஜ்குமார், பெவின்குமார், வருண்குமார், அஜித்குமார், சபரி வினோத், முருகேஷ்வரி, ராஜ்குமாரின் மனைவி திவ்யா (24) ஆகியோர் கோவில் கொடை விழாவுக்கு ஆடுகளை பலியிடுவதற்காக கொண்டு வந்த கத்திகளால் மதியழகன், மதிராஜா ஆகியோரை சரமாரியாக குத்தியதாகவும், மகேஷ்வரனை கத்தியால் வெட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதை பார்த்த விழாவுக்கு வந்த பக்தர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட ராஜ்குமார் உள்பட 7 பேரும் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டனர். கத்திக்குத்தில் மதியழகன், மதிராஜா ஆகியோர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக பலியானார்கள். மகேஷ்வரன் படுகாயங்களுடன் உயிருக்கு போராடினார்.
இந்த இரட்டைக் குறித்து உடனடியாக திசையன்விளை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட போலீஸ் எஸ்பி (பொறுப்பு) சுந்தரவதனம், வள்ளியூர் டிஎஸ்பி யோகேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். படுகாயம் அடைந்த மகேஷ்வரனை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக மதிராஜா மனைவி சூரியா திசையன்விளை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்இன்ஸ்பெக்டர் பிரியராஜ்குமார் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பச்சைமால் விசாரணை நடத்தி ராஜ்குமார், பெவின் குமார், வருண்குமார் ஆகிய 3 பேரையும் பிடித்து அதிரடியாக கைது செய்தார். மற்ற 4 பேரை போலீசார் வலைவீசி ேதடி வருகின்றனர்.
திசையன்விளையில் கோவில் விழாவில் அண்ணன்தம்பி சரமாரி குத்திக்கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இதனால் அந்த பகுதியில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.