» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
லாரியில் இருந்து ரூ.50½ லட்சம் கொள்ளை: நெல்லை-தூத்துக்குடியைச் சேர்ந்த 5 பேர் கைது !
திங்கள் 19, ஆகஸ்ட் 2024 8:29:17 AM (IST)
திருச்சி அருகே லாரியில் ரூ.50½ லட்சத்தை கொள்ளையடித்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் பாலத்தில் இருந்து குதித்து தப்பிக்க முயன்றபோது 3 பேரின் கால்கள் முறிந்தன.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள தும்பிச்சம்பட்டியை சேர்ந்தவர் ரமணி (50). தொழிலதிபரான இவருக்கு சொந்தமான ஒரு லாரியை நீலகிரி மாவட்டம், தொட்டகும்பை சேரனூர் பகுதியை சேர்ந்த டிரைவரான ஆனந்த்(40) ஓட்டி வந்தார். இவர் தற்போது மேட்டுப்பாளையம் காய்கறி மார்க்கெட் பின்புறம் குறிஞ்சி நகர் பகுதியில் குடியிருந்து வருகிறார்.
இவர் தினமும் மேட்டுப்பாளையத்தில் இருந்து திருச்சி வழியாக தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்திற்கு காய்கறிகள் ஏற்றிச்சென்று, பின்னர் அங்கிருந்து வேறு பொருட்களை ஏற்றிக்கொண்டு மேட்டுப்பாளையத்திற்கு திரும்புவது வழக்கம். அதன்படி கடந்த 3-ந்தேதி மாலை கும்பகோணத்தில் காய்கறிகளை இறக்கிவிட்டு, மீண்டும் அங்கிருந்து வைக்கோல் கட்டுகளை ஏற்றிக்கொண்டு மேட்டுப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். லாரியில் கிளீனராக லோகேஸ்வரனும்(22) பயணம் செய்தார்.
திருச்சி வழியாக பெட்டவாய்த்தலை அருகே உள்ள காவல்காரபாளையம் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சென்றபோது, ஒரு கடையில் டீ குடிப்பதற்காக இருவரும் சாலையோரம் லாரியை நிறுத்திவிட்டு சென்றுள்ளனர். அப்போது, மர்மநபர்கள் லாரியில் இருந்த ரூ.50 லட்சத்து 68 ஆயிரத்து 200-ஐ கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், பெட்டவாய்த்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
திருச்சி மாவட்ட எஸ்பி வருண்குமார் உத்தரவின்பேரில், ஜீயபுரம் டிஎஸ்பி பாலசந்தர் தலைமையில் 5 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் நவலூர் குட்டப்பட்டு பகுதியில் சந்தேகப்படும்படி சிலர் காரில் சுற்றி திரிவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தனிப்படையினர் நவலூர்குட்டப்பட்டு அரியாற்று பாலம் அருகே நிறுத்தப்பட்டு இருந்த காரின் அருகே சென்றபோது, காருக்குள் இருந்து 5 பேர் இறங்கி ஓட்டம் பிடித்தனர்.
அவர்கள் அங்குள்ள அரியாற்றுபாலத்தில் இருந்து குதித்து தப்பிக்க முயன்றனர். உடனே 5 பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் 5 பேரிடமும் விசாரணை நடத்தியதில் அவர்கள், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த பிரவீன்குமார் (25), போஸ் என்கிற இசக்கிமுத்து (25), நெல்லை நாங்குநேரியை சேர்ந்த வெள்ளைபாண்டி (22), நெல்லை மேலகாடுவெட்டியை சேர்ந்த முத்துமணிகண்டன் (25), மதுரை திடீர்நகரை சேர்ந்த சூர்யா என்கிற உதயநிதி (27) என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களிடம் லாரியில் இருந்து கொள்ளையடித்த பணத்தில் ரூ.26 லட்சத்தை மீட்டனர். இந்த சம்பவத்தில் பயன்படுத்திய காரையும் கைப்பற்றி 5 பேரையும் கைது செய்தனர். இதற்கிடையே அரியாற்று பாலத்தில் இருந்து தப்பிக்க முயன்ற கீழே குதித்ததில் வெள்ளைபாண்டி, சூர்யா, இசக்கிமுத்து ஆகிய 3 பேருக்கும் காலில் காயம் ஏற்பட்டது. அவர்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.