» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லை ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வலியுறுத்தி கையெழுத்து இயக்கம்!
சனி 31, ஆகஸ்ட் 2024 8:43:56 AM (IST)
செங்கோட்டை - நெல்லை தினசரி ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வலியுறுத்தி கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
செங்கோட்டை -நெல்லை வழித்தடத்தில் தினசரி இயங்கும் சாதாரண ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பொது மக்களிடம் கையெழுத்து பெற்று,மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்திற்கு கோரிக்கை அனுப்பும் நிகழ்ச்சி ரயில் பயணிகள் நலச் சங்கத் தலைவர் கவிஞர் உமர் பாரூக் தலைமையில் நடைபெற்றது.
தேசிய கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் துபாய் சமூக நல ஆர்வலர் முனைவர் முகமது முகைதீன் முதல் கையெழுத்திட்டு,தொடங்கி வைத்தார். செயலாளர் பேரா.விஸ்வநாதன்,பொருளாளர் சீதாராமன் மற்றும் சங்க நிர்வாகிகள் அப்துல் சமது, ஒளி மாலிக், ரசாக், அனீஸ் பாத்திமா உள்ளிட்ட நூற்றுக் கணக்கானோர் பங்கு பெற்றனர்.
இது குறித்து ரயில் பயணி உமர் பாரூக் கூறியதாவது: "கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தில் இருந்து தினந்தோறும் சுமார் 2500 பேர் ஏறி இறங்குகின்றனர். காலை மாலை இரு வேளையும் திருநெல்வேலி மற்றும் செங்கோட்டை செல்லும் ரயிலில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் என ஒரே நேரத்தில் ஏறுவதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு, படிகளில் தொங்கியபடி ஆபத்தான நிலையில் பயணம் செய்து வருகின்றனர்.
இதனைக் களைந்தெறிய, வெறும் 12 பெட்டிகளைக் கொண்டு இயங்கும் இந்த ரயில்களில் கூடுதலாக 4 பெட்டிகளை இணைக்க வேண்டும் " என்றார்.