» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
விநாயகர் சதுர்த்தி விழாவில் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்: தென்காசி எஸ்பி
சனி 31, ஆகஸ்ட் 2024 8:51:48 AM (IST)
விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் யாரும் நடந்து கொள்ளக் கூடாது என தென்காசி மாவட்ட எஸ்பி ஶ்ரீனிவாசன் அறிவுறுத்தினார்.
தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஶ்ரீனிவாசன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவில் கடைபிடிக்க வேண்டிய முக்கிய விதிமுறை கள் குறித்து விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யும் பொறுப்பாளர்களுடனான கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது.
அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட வேண்டும். விநாயகர் சிலை வைக்கும் இடத்தில் இரவு நேரங்களில் போதிய மின் வசதி இருக்க வேண்டும். சிலை அமைக்கப் பட்டுள்ள பகுதியில் தகரத் தினால் கூரை அமைக்கப்பட வேண்டும். சிலைகள் அமைந்துள்ள இடத்தில் தீ தடுப்பு உபகரணங்கள் மற்றும் கேமராக்கள் வைத்திருக்க வேண்டும். விநாயகர் சிலை வைத்திருக்கும் இடத்தில் அரசியல் மற்றும் ஜாதியை குறிக்கும் வகையில் எந்தவித பிளக்ஸ் போர்டுகளும் அமைக்க கூடாது.
விநாயகர் சிலை வைத்திருக்கும் இடத்தில் தன்னார்வலர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். விநாயகர் சிலை ஊர்வலம் குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட நேரத்தில் அனுமதிக் கப்பட்ட வழித்தடத்தில் மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும். ஊர்வலத்தின் போது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் யாரும் நடந்து கொள்ளக் கூடாது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலந்தாய்வு கூட்டத்தில் அறிவுரை வழங்கினார்.