» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வீரவநல்லூர் பாய் நெசவுத் தொழிலாளிக்கு தமிழக அரசு சார்பில் விருது

ஞாயிறு 1, செப்டம்பர் 2024 7:21:40 PM (IST)



வீரவநல்லூரைச் சேர்ந்த பெண் நெசவுத் தொழிலாளி சுலைகாள் பீவிக்கு தமிழக அரசு சார்பில் வாழும் கைவினைப் பொக்கிஷம் விருது வழங்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், பத்தமடை, வீரவநல்லூர் பகுதியில் இஸ்லாமிய சமூகத்தினர் மெல்லிய கோரைப் பாய் நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு மெல்லிய கோரைப் பாய்கள், பட்டுப் பாய்கள் உற்பத்தி செய்யப்படுவதால் பத்தமடை பாய் புகழ் பெற்று திகழ்கிறது. இந்த கோரைப் பாய்களுக்கு சந்தை வாய்ப்புகள் காலப்போக்கில் குறைந்ததால் உற்பத்தி நலியத் தொடங்கியது. 

மேலும் கோரைப் பாய்கள் நுண்ணிய கடின வேலைப்பாடுகள் உள்ளடக்கியதாகவும் பழமையான கைவினை முறைகளை பின்பற்றியும் இன்றும் நெசவு செய்யப்பட்டு வருவதால் அதிக உற்பத்தி செலவு ஏற்படுகிறது. மேலும் இந்த தொழிலில் ஊதியம் குறைவாக கிடைப்பதால் இத்தொழிலில் இருந்து தொழிலாளர்கள் விலகிச் செல்லும் நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில் சென்னையிலுள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் ஊரக தொழில்நுட்பப் பிரிவு பத்தமடை மற்றும் வீரவநல்லூர் பகுதியில் பாய் நெசவுத் தொழிலில் ஈடுபடும் நெசவாளர்களின் நிலையறிந்து மெல்லிய கோரைப் பாய் தொழிலை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 

அதன்படி நெசவாளர்களின் பணிச் சூழலியல் மற்றும் அவர்களின் வேலைப் பழுவைக் குறைக்க வேண்டும் ஆகியவற்றை கருத்தில் கொண்டு எலக்ட்ரானிக் ஜக்கார்டு கைத்தறி உருவாக்கப் பட்டது. இத்தொழில்நுட்பத்தால் உற்பத்தி திறன் பன் மடங்கு அதிகரிக்கவும் வருமானத்தை பெருக்கவும் உதவி செய்துள்ளது. அதன்படி தமிழ்நாடு கைத்திறத் தொழில் வளர்ச்சிக் கழக நிதி உதவியுடன் எலக்ட்ரானிக் ஜக்கார்டு கைத்தறி மூலம் பத்தமடை வீரவநல்லூர் நெசவுத் தொழிலாளர்கள் அதிகளவில் பாய்கள் உற்பத்தி செய்து வருகின்றனர். 

மேலும் சென்னையில் இயங்கி வரும் ஊரக தொழில்நுட்ப செயற்குழு ஆலோசகர் நளினி, டெக்ஸ்டைல் விஞ்ஞானி கணேசன் ஆகியோர் பாய் நெசவாளர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி வருகின்றனர். இதனிடையே, வீரவநல்லூரில் மெல்லிய ரக பாய்களை சிறந்த முறையில் உற்பத்தி செய்து வரும் சுலைகாள் பீவிக்கு தமிழக அரசு 2022}23ஆம் ஆண்டின் வாழும் கைவினைப் பொக்கிஷம் எனும் விருது வழங்கியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory