» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தாமிரா ஆர்கானிக் உழவர் உற்பத்தியாளர் நிறுவன மதிப்பு கூட்டல் மையம்: ஆட்சியர் திறந்து வைத்தார்
வியாழன் 3, அக்டோபர் 2024 5:33:27 PM (IST)
நடுக்கல்லூரில் தாமிரா ஆர்கானிக் உழவர் உற்பத்தியாளர் நிறுவன மதிப்பு கூட்டல் மையத்தினை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் திறந்து வைத்தார்.
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி வட்டம், நடுக்கல்லூரில் தாமிரா ஆர்கானிக் உழவர் உற்பத்தியாளர் நிறுவன மதிப்பு கூட்டல் மையத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் கா.ப.கார்த்திகேயன், தாமிரா நிறுவன பங்குதாரர்கள் முன்னிலையில் இன்று (03.10.2024) திறந்து வைத்து இயந்திரங்கள் செயல்பாடுகள் குறித்து பார்வையிட்டு, பங்குதாரர்களுடள் கலந்துரையாடினார்கள்.
தமிழ்நாடு நீர்பாசன நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் தாமிரா ஆர்கானிக் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் 13.4.2020 அன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் பாளையங்கோட்டை, நாங்குநேரி, சேரன்மகாதேவி மற்றும் மானூர் வட்டாரங்களை உள்ளடக்கிய 21 கிராமங்களில் இருந்து 50 உழவர் உற்பத்தி ஆர்வலர் குழுக்கள் மூலம் 1000 உறுப்பினர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது.
தாமிரா நிறுவனத்திற்கு இந்தாண்டு ரூ.4 இலட்சம் மதிப்பிலான எண்ணெய் பிழியும் இயந்திரம், ரூ.35 ஆயிரம் மதிப்பிலான தேங்காய் உடைக்கும் இயந்திரம், ரூ.1.50 இலட்சம் மதிப்பிலான எண்ணெய் சுத்திகரிக்கும் இயந்திரம், ரூ.6.10 இலட்சம் மதிப்பிலான மாவு அரைக்கும் இயந்திரம், ரூ.60 ஆயிரம் மதிப்பிலான உளுந்து உடைக்கும் இயந்திரம், ரூ.14.87 இலட்சம் மதிப்பிலான வைக்கோல் கட்டும் இயந்திரம், ரோட்டவேட்டார் உடன் கூடிய டிராக்டர் மற்றும் ரூ.10 இலட்சம் மதிப்பில் விதை பண்ணை அமைப்பதற்கான நிதி என மொத்தம் ரூ.40 இலட்சம் செலவில் தொழில் விரிவாக்கம் செய்வதற்கு தாமிரா ஆர்கானிக் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்; ரூ.10 இலட்சம் வழங்கியதன் அடிப்படையில் தமிழ்நாடு நீர்பாசன நவீன மயமாக்கல் திட்டம் மூலம் ரூ.30 இலட்சம் தொழில் மானியமாக வழங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித் தலைவர் பேசியதாவது: உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் கடந்த ஆண்டு ரூ.1.78 கோடி நல்ல வருமானம் ஈட்டியுள்ளது. மேலும் அதிகமாக வருவாய் ஈட்டுவதற்கு வரும் ஆண்டில் 1001 உறுப்பினர்களுக்கும் லாபம் ஏற்படும் வகையில் பங்குதாரர்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.
நம்ம பகுதிகளில் அதிகளவு உளுந்து பயிரிடப்பட்டு வருகிறது. நிலக்கடலை குறைந்த அளவில் பயிரிடப்பட்டு வருகிறது. நிலக்கடலையை பயிர் செய்ய வேண்டும் என விவசாயிகளை ஊக்கப்படுத்தி வருகிறது. நிலக்கடலை பயிர் செய்வதன் மூலம் நைட்ரஜன் பிக்சிங் என்ற காற்றில் உள்ள சத்தை உறிஞ்சி மண்ணிற்கு சேர்க்கும் பொழுது மண்ணின் தரம் அதிகரிக்கும். மேலும், நிலக்கடலை கொடியை ஆடு, மாடுகளுக்கு தீவனமாக வழங்கினால் ஊட்டச்சத்து அதிகரித்து பாலின் தரம் மற்றும் பாலின் அளவு அதிகரிக்கும். இதனையும் இந்த நிறுவனம் கையில் எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிறுவனம் வரும் ஆண்டில் ரூ.5 கோடி வருமானமாக இலக்கு நிர்ணயித்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். வேளாண்மைத் துறையின் மூலம் இந்நிறுவனத்தின் முன்னேற்றதிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், சிறப்பு மானியம் கிடைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றும் இந்த நிறுவனம் மென்மேலும் உயர்வதற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என மாவட்ட ஆட்சித் தலைவர் பேசினார்கள்.
முன்னதாக, கோவில்பட்டி பகுதியை சேர்ந்த ஸ்ரீ ஜெய் என்ற தனியார் நிறுவனம் தாமிரா ஆர்கானிக் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தினரிடமிருந்து தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், உடைத்த உளுந்து, அரிசி மாவு, உளுந்த மாவு, போன்ற பொருட்கள் கொள்முதல் செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மாவட்ட ஆட்சித் தலைவர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. மேலும், ரூ.1000 செலுத்தி 1001வது பங்குதாரர் ஆக சேர்ந்த நபருக்கு பங்குதாரர் சான்றிதழினை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், துணை இயக்குநர் வேளாண்மை பூவண்ணன் , இணை இயக்குநர் வேளாண்மை (பொ) கிருஷ்ணகுமார், தாமிரா ஆர்கானிக் உழவர் உற்பத்தியாளர் நிறுவன தலைவர் aந்தோணி பாஸ்கர் , முதன்மை செயல் அலுவலர் சத்யா, உதவி இயக்குநர்கள் சிவகுருநாதன் (வேளாண்மை), ஆனந்தகுமார் (வணிகம்) மற்றும் நிறுவன பங்குதாரர்கள், விவசாயிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.