» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருநெல்வேலி - ஹாப்பா ரயில் எக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்றம் : தினசரி ரயிலாக இயக்க கோரிக்கை

சனி 19, அக்டோபர் 2013 2:07:00 PM (IST)

திருநெல்வேலி வரை நீட்டிப்பு செய்து இந்த ரயிலை தினசரி ரயிலாக இயக்க வேண்டும் என்று குமரி மற்றும் நெல்லை மாவட்ட பயணிகள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருநெல்வேலியிருந்து நாகர்கோவில் வழியாக குஜராத் மாநிலத்தின் ஹாப்பா என்ற பகுதிக்கு வாரத்துக்கு இரண்டு நாள் செல்லதக்க வகையில் சூப்பர் பாஸ்டு ரயில் 2009-ம் ஆண்டு ரயில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. 12997 எண் கொண்ட இந்த ரயில் திருநெல்வேலியிருந்து திங்கள் மற்றும் செவ்வாய் புறப்பட்டு நாகர்கோவில் டவுண், திருவனந்தபுரம், ஆலப்புழா, எர்ணாகுளம், மங்களுர், மட்கான், பன்வல், அகமதாபாத், ராஜ்கோட் வழியாக 27 ரயில் நிலையங்களில் நின்று ஹாப்பா போய் சேருகிறது. மறுமார்க்கம் 12998 எண் கொண்ட ரயிலாக ஹாப்பாவிலிருந்து திருநெல்வேலிக்கு இயக்கப்படுகிறது. 

இந்த ரயில் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் சூப்பர் பாஸ்டு நிலையிலிருந்து எக்ஸ்பிரஸ் ரயிலாக தரம் குறைக்கப்படுகிறது. இந்த ரயிலின் எண் 12997 மாற்றம் செய்து 19577 என்றும் மறுமார்க்கம் 12998 என்ற ரயில் எண் 19578 மாற்றம் செய்யப்படுகிறது. இவ்வாறு எக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்றம் செய்வதால் திருநெல்வேலியிருந்து புறப்படும் கால அட்டவணையும் மாற்றம் செய்யப்படுகிறது. 

இந்த ரயில் திருநெல்வேலியிருந்து காலை 6:00 மணிக்கு பதிலாக 7:55மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் டவுண்( பள்ளிவிளை) ரயில் நிலையத்திலிருந்து காலை 7:30க்கு பதிலாக 9:25 மணிக்கு புறப்படும்.    மறுமார்க்கம் காலஅட்டவணையில் எந்த மாற்றமும் செய்யாமல் ஹாப்பாவிலிருந்து வெள்ளி மற்றும் சனிகிழைமகளில் இரவு 09:20 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவிலுக்கு ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் இரவு 8:55மணிக்கு வந்து சேர்ந்து திருநெல்வேலிக்கு இரவு 10:20 மணிக்கு போய் சேருகிறது.

வள்ளியூர், இரணியல், குழித்துறை நிலையங்களில் நிறுத்தம்

திருநெல்வேலி - ஹப்பா சூப்பர்பாஸ்டு ரயிலை வள்ளியூர், இரணியல், குழித்துறை ரயில் நிலையங்களில் நின்று செல்ல வேண்டும் என்று இந்த பகுதிமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக ரயில்வேதுறைக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த ரயில் சூப்பர் பாஸ்டு ரயிலாக இருப்பதால் கூடுதல் ரயில்  நிலையங்களில் நிறுத்தினால் சூப்பர்பாஸ்டு ரயிலின் நிலை பாதிக்கப்படும் என்று நிறுத்தம் மறுக்கப்பட்டு வந்தது. 

இதனால் இந்த பகுதியை சார்ந்த பயணிகள் பேருந்துகளில் நாகர்கோவில் டவுண் நிலையத்துக்கு வந்து இந்த ரயிலில் தற்போது பயணம் செய்து வருகின்றனர். நவம்பர் ஒன்றாம் தேதி முதல் இந்த ரயில் எக்ஸ்பிரஸ் ரயலாக மாற்றபடுவதால் இந்த ரயில் அடுத்த ஆண்டு ரயில் கால அட்டவணையில் வள்ளியூர், இரணியல், குழித்துறை ரயில் நிலையங்களில் நின்று செல்ல பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன.

திருநெல்வேலி, நாகர்கோவிலிருந்து புறப்படும் நேரம் மாற்றம்

திருநெல்வேலி மற்றும் நாகர்கோவிலிருந்து இந்த ரயில் புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. இவ்வாறு மாற்றப்பட்டதால் இந்த புதிய காலஅட்டவணை நெல்லை மற்றும் குமரி மாவட்ட புறநகர் உள்ள பயணிகளுக்கு மிகவும் வசதியாக உள்ளது. குமரி மற்றும் நெல்லை மாவட்ட புறநகர் பயணிகள் இந்த ரயிலில் பயணிக்க வேண்டும் என்றால் அதிகாலையிலேயே புறப்பட்டு ஆட்டோ பிடித்து ரயில் நிலையம் வரவேண்டி இருந்தது.  தற்போது புதிய காலஅட்டவணையின்படி முதல் பேருந்தில் வந்தால் இந்த ரயிலில் பயணித்துவிடலாம் என்பது குறிப்பிடதக்கது. 

இந்த ரயில் தற்போது நெல்லை ரயில் நிலையத்திலிருந்து தற்போது காலை 6:00 மணிக்கு புறப்படுகிறது. இவ்வாறு ஆறு மணிக்ககு புறப்படுவதால் நெல்லை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் உள்ள ஒரு நாள் முன்பாகவே இரவு நெல்லை ரயில் நிலையத்தில் குடும்பத்துடன் பயண சாமான்களுடன் தங்கி மறுநாள் காலையில் பறப்படும் ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். இந்த புதிய மாற்றம் செய்த கால அட்டவணையின் மூலமாக நெல்லை மாவட்டத்திலிருந்து மும்பைக்கு செல்லும் பயணிகளுக்கு மிகவும் வசதியாக உள்ளது. 

கோரிக்கை:இந்த ரயில் தற்போது எக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்றப்பட்டதால் வள்ளியூர், இரணியல், குழித்துறை ரயில் நிலையங்களில் நின்று செல்லவேண்டும். மேலும் இந்த ரயிலின் பெட்டிகளை 24 பெட்டிகளாக அதிகரித்து உணவு வழங்கும் பெட்டியையும் இணைக்க வேண்டும். இந்த ரயில் தற்போது இரண்டுநாட்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. 

திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து மும்பைக்கு தினசரி ரயில் இயக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாகவே கோரிக்கை வலுத்து வருகிறது. இந்தியாவின் வர்த்தக தலைநகரமான மும்பை விளங்குகிறது. தமிழகத்திலிருந்து மும்பைக்கு தினசரி ஆயிரகணக்கான பயணிகள் பயணிக்கின்றனர். குறிப்பாக தென் தமிழகத்திலிருந்து மும்பையில் பல்வேறு தொழில்கள் சம்மந்தமாகவும், வியாபாரம் செய்யவும்  தமிழர்கள் லட்சகணக்கானவர்கள் வசித்து வருகின்றனர். தென் தமிழகத்திலிருந்து மும்பைக்கு குறைந்த அளவே ரயில்கள் இயக்கபட்டு வருகிறது. 

தற்போது இயங்கிகொண்டிருக்கும் ரயில்கள் எல்லாம் ஒரு நாள் இரண்டு நாள் மூன்று நாள் என்று இயக்கப்பட்டு வருகிறது. இந்த ஹாப்பா ரயில் குமரி மற்றும் நெல்லை மாவட்ட பயணிகள் மும்பைக்கு குறைந்த தூரம் கொண்ட வழித்தடம் வழியாக இயக்கப்படுவதால் இந்த ரயில் இந்த பகுதி பயணிகளிடம் மிகவும் பிரபலம் ஆகும். ஆகவே இந்த ரயிலை தினசரி ரயிலாக இயக்க வேண்டும் என்று இந்த பகுதி பயணிகள் ரயில்வேதுறைக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

தற்போது மடகான் - ஹாப்பா வாராந்திர ரயில் எர்ணாகுளம் - ஓக்கா வாரத்துக்கு இரண்டுநாள் ரயில் ஆகிய இரண்டு ரயில்களையும் திருநெல்வேலி வரை நீட்டிப்பு செய்தி திருநெல்வேலி -ஹாப்பா ரயிலை தினசரி ரயிலாக இக்க நல்ல வசதி வாய்ப்புகள் உள்ளன. எனவே இந்த இரண்டு ரயில்களையும் அடுத்த ரயில் பட்ஜெட்டில் திருநெல்வேலி வரை நீட்டிப்பு செய்து இந்த ரயிலை தினசரி ரயிலாக இயக்க வேண்டும் என்று குமரி மற்றும் நெல்லை மாவட்ட பயணிகள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsGuru HospitalTirunelveli Business Directory