» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அதிமுகவில் பொதுச் செயலாளர் பதவியே இனி கிடையாது : சசிகலாவின் நியமனமும் ரத்து

செவ்வாய் 12, செப்டம்பர் 2017 3:14:58 PM (IST)அதிமுகவில் பொதுச் செயலாளர் பதவியே இனி கிடையாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் எம்ஜிஆரால் உருவாக்கப்பட்ட அப்பதவி அடியோடு ஒழிக்கப்பட்டது.

பரபரப்பான அரசியல் சூழலில் இன்று பொதுக் குழு கூட்டம் கூடியது. இதில் சசிகலா, தினகரன் நீக்கம் உள்பட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. டிடிவி தினகரன் சார்பில் இந்த பொதுக் குழுக் கூட்டத்துக்கு தடை விதிக்க கோரியும் சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்நிலையில் திட்டமிட்டபடி பொதுக் குழு கூட்டம் வானகரத்தில் திருமண மண்டபத்தில் கூடியது. இதைத் தொடர்ந்து கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து ஜெயலலிதாவுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. 

பொதுச் செயலாளராக சசிகலாவின் நியமனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அதிமுகவில் இனி பொதுச் செயலாளர் என்ற பதவியே கிடையாது என்றும் நிறைவேற்றியுள்ளனர். கட்சியில் ஒருவரை சேர்க்கவோ நீக்கவோ ஒருங்கிணைப்பாளரான ஈபிஎஸ்ஸுக்கும் இணை ஒருங்கிணைப்பாளரான ஓபிஎஸ்ஸுக்கும் மட்டுமே உள்ளது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த பதவிகள் பொதுச் செயலாளர் பதவிக்கு இணையானது என கூறப்படுகிறது.

திமுகவின் தலைவராக அண்ணாதுரை இருந்தபோது, அதிலிருந்து பிரிந்து 1972-இல் அதிமுக என்ற புதிய கட்சியை எம்ஜிஆர் தொடங்கினார். அப்போது தலைவர் என்றால் அது அண்ணாவை மட்டுமே ஏற்றுக் கொள்வோம் என்று கூறிய எம்ஜிஆர், அதிமுகவில் தலைவர் பதவியே கிடையாது என்றார். அப்போது பொதுச் செயலாளர் என்ற புதிய பதவியை உருவாக்கி அதில் அமர்ந்தார் எம்ஜிஆர். அதிமுகவில் தலைவர் பதவியில்லாதது போல் பொதுச் செயலாளர் பதவியும் இனி இல்லை என்று அதிமுக பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


தீர்மானங்கள் விவரம்:

இரட்டை இலை சின்னத்தையும், அதிமுக என்ற கட்சிப் பெயரையும் தேர்தல் ஆணையத்தில் இருந்து மீட்பது.

ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர்கள் அதே பதவிகளில் தொடர்வார்கள்.

எம்ஜிஆர். நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்தி வருவதற்காக தமிழக அரசுக்கு பாராட்டு.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மணி மண்டபம் கட்ட ரூ.15 கோடி நிதி ஒதுக்கிய தமிழக அரசுக்கு நன்றி.

வர்தா புயல் மீட்பு பணிகளில் சிறப்பாக செயல்பட்ட, விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் அளித்த தமிழக அரசுக்கு நன்றி. 

நெருக்கடியான சூழலில் கட்சியை ஆட்சியை காப்பாற்றும் நிர்வாகிகளுக்கு பாராட்டு.

அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மட்டுமே.

தற்காலிக பொதுச் செயலாளராக சசிகலா நியமனம் செய்யப்பட்டது ரத்து. அவரது நியமனங்கள் ஏதும் செல்லாது.

கட்சிக் கட்டுப்பாட்டை சீர்குலைக்கும் வகையில் தினகரன் நியமிக்கும் நியமனங்கள் செல்லாது.

தொண்டர்கள் மனம் அறிந்து கட்சியை வழிநடத்த புதிய பதவி உருவாக்கப்படும்.

பொதுச்செயலாளர் வகித்துவந்த அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்., இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ்.க்கு வழங்கப்படும்.

கட்சியின் சட்டவிதிமுறை விதி எண் 19 முதல் 40 வரை மாற்றம் செய்து திருத்தம் மேற்கொள்ள ஏகமனதாக ஒப்புதல்.


மக்கள் கருத்து

kingSep 12, 2017 - 03:25:26 PM | Posted IP 117.2*****

அந்த அம்மா இருந்து இருந்தால் ...நீங்கள் வானத்தை பார்த்து இருப்பீர்களா ...ஒரு வேலையும் நடக்கல ...இது ஒண்ணுதான் நல்ல படியா நடக்கு..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsTirunelveli Business Directory