» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தடையை மீறி போராட்டம்: ஆசிரியர்–அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு

புதன் 13, செப்டம்பர் 2017 9:09:19 AM (IST)

தடையை மீறி போராட்டம் நடத்தி வரும் ஆசிரியர்–அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் நேரில் ஆஜராக வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த வக்கீல் சேகரன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘தமிழ்நாடு ஆசிரியர்–அரசு ஊழியர் சங்கங்கள் (ஜாக்டோ–ஜியோ) தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நடத்தி வரும் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தால், மாணவர்களும் பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அரசு ஊழியர்கள்–ஆசிரியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்‘ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை, நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் விசாரித்து, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்திற்கு இடைக்கால தடை விதித்தனர். இந்நிலையில், கோர்ட்டு உத்தரவை மீறி ஏராளமான அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை தொடர்ந்து வருகின்றனர். எனவே அவர்கள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வக்கீல் சேகரன் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், அரசு ஊழியர்கள்–ஆசிரியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு தடை விதித்து ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவு பற்றி ஜாக்டோ, ஜியோ சங்கங்களின் நிர்வாகிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டது. அதன் பிறகும் அவர்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இது கோர்ட்டு உத்தரவை அவமதிப்பதாகும். போராட்டத்தை தொடர்ந்து வரும் அரசு ஊழியர்கள் 74,675 பேருக்கு அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கோர்ட்டு விதித்துள்ள தடையை நீக்கக்கோரி வழக்கு எதுவும் தாக்கல் செய்யாதநிலையில், வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களை கோர்ட்டு அவமதிப்பு சட்டத்தின்கீழ் தண்டிக்க வேண்டும்‘ என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்த தடை விதித்த ஐகோர்ட்டின் உத்தரவு அடங்கிய நோட்டீசை சம்பந்தப்பட்ட சங்க நிர்வாகிகளுக்கு சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்பின், தமிழ்நாடு ஆசிரியர்–அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தலைவர், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தலைவர், தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தலைவர் ஆகியோர் வருகிற 15–ந்தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory