» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மக்களுக்கு மறைமுக தீங்கு இழைக்கும் மத்திய அரசு : பெட்ரோல் விலை உயர்வுக்கு அன்புமணி கண்டனம்

வியாழன் 14, செப்டம்பர் 2017 4:05:00 PM (IST)

இரண்டரை மாதங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.7.51 உயர்த்தப்பட்டிருப்பதாக பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: மக்களுக்கு தீங்கு ஏற்படுத்தக்கூடாது என்பது தான் மக்கள் நலன் விரும்பும் அரசின் கொள்கையாக இருக்க வேண்டும். ஆனால், மத்திய அரசோ எவ்வளவு தீங்கு வேண்டுமானாலும் ஏற்படுத்தலாம்... ஆனால், அதை யாருக்கும் தெரியாமல் செய்ய வேண்டும் என்பதைக் கொள்கையாக வைத்திருக்கிறது. அதன்விளைவு தான் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.7.51 ஓசையில்லாமல் உயர்த்தப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் அதிக வரிவிதிப்புக்கு உள்ளாக்கப்படும் பொருட்களில் முதன்மையானது எரிபொருட்கள் ஆகும். இன்றைய நிலையில் அவற்றின் அடக்கவிலையை விட 190% அதிகமாக விற்கப்படுகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும், குறைந்தாலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மாறாமல் இருந்து வந்தது. 2000-ஆம் ஆண்டு வரை பெட்ரோல் விலை லிட்டருக்கு 30 ரூபாய்க்கும் குறைவாகவே விற்கப்பட்டு வந்தது. ஆனால், அதன்பின்னர் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றத்திற்கு ஏற்ப இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது. மாதத்திற்கு இரு நாள்கள் எரிபொருள் விலையில் மாற்றம் செய்யப்பட்ட நிலையில், எரிபொருள் விலை உயர்த்தப்படும் போதெல்லாம் அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்து வந்தது.

இதை முறியடிக்கும் வகையில் மத்திய அரசு கடந்த ஜூன் 16-ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாற்றியமைக்கும் நடைமுறையைக் கொண்டு வந்துள்ளது. இதன்மூலம் தான் பெட்ரோல், டீசல் விலை மக்களுக்கே தெரியாமல் தினமும் உயர்த்தப்பட்டு வருகின்றன. கடந்த ஜூலை ஒன்றாம் தேதி நிலவரப்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.65.46 ஆக இருந்தது. இன்றைய நிலவரப்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.72.97 ஆகும். அதாவது கடந்த இரண்டரை மாதங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.7.51 உயர்ந்திருக்கிறது. இதேகாலகட்டத்தில் டீசல் விலை ஒரு லிட்டர் ரூ.56.13 என்ற அளவிலிருந்து ரூ.61.87 ஆக ஆதாவது ரூ.5.74 உயர்ந்துள்ளது. இது வரலாறு காணாத விலை உயர்வு ஆகும். இதை சாதாரண மக்களால் தாங்கிக் கொள்ள முடியாது.

பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்தில் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் வெளிப்படைத் தன்மையை கடைபிடிப்பதில்லை. கடந்த 2008-ஆம் ஆண்டு ஜூன் -ஜூலை மாதங்களில் தான் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத வகையில் ஒரு பீப்பாய் 147 டாலர் என்ற உச்சத்தைத் தொட்டது. ஆனால், அப்போதும் கூட இந்தியாவில் பெட்ரோல் விலை ரூ.73.00 என்ற அளவிலேயே இருந்தது. கடந்த 12-ஆம் தேதி நிலவரப்படி இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயின் விலை 53.06 டாலர் மட்டுமே. ஆனால், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உச்சத்தில் இருந்தபோது பெட்ரோல், டீசல் என்ன விலைக்கு விற்பனை செய்யப்பட்டதோ, அதே விலைக்கே இப்போதும் விற்கப் படுவது எந்த வகையில் நியாயம்? இது தான் மக்கள் நலன் காக்கும் அரசின் இலக்கணமா?

மத்திய பெட்ரோலிய அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின் அடிப்படையில் இன்றைய நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோலின் அடக்கவிலை ரூ.26.65 மட்டுமே. இது கச்சா எண்ணெய் மீதான சுங்கவரியையும் உள்ளடக்கியதாகும். ஆனால், சந்தையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.72.97 என்ற விலைக்கு விற்கப்படுகிறது. இது அடக்கவிலையை விட ரூ.46.32 அதிகமாகும். அதேபோல் ஒரு லிட்டர் டீசலின் அடக்கவிலை ரூ.26.00 மட்டுமே எனும் நிலையில் ரூ.35.87 கூடுதலாக சேர்த்து ரூ.61.87க்கு விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல், டீசல் அடக்கவிலையை விட பல மடங்கு லாபமும், வரியும் விதிப்பது எந்த வகையில் நியாயம் என்பதை மத்திய ஆட்சியாளர்கள் விளக்க வேண்டும்.

கடந்த 2014, 2015 ஆண்டுகளில் கச்சா எண்ணெய் விலை கடும் வீழ்ச்சி அடைந்தது. அதன்பயனை மக்களுக்கு அளிக்காத மத்திய அரசு, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியதன் மூலம் ஆண்டுக்கு ரூ.2 லட்சம் கோடி கூடுதல் வருமானம் ஈட்டி வருகிறது. இப்போது உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும் நிலையில், அதன் சுமையை மட்டும் மக்கள் மீது திணிக்கிறது. இது முறையல்ல. பெட்ரோல், டீசல் விலை இனியும் உயர்த்தப்பட்டால் மக்களால் தாங்க முடியாது.

எனவே, கடந்த காலங்களில் உயர்த்தப்பட்ட கலால் வரியை குறைப்பதன் மூலம் பெட்ரோல், டீசல் விலைகளை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். அதுமட்டுமின்றி, பெட்ரோல், டீசலை பொருட்கள் மற்றும் சேவை வரி வரம்புக்குள் கொண்டு வந்து விலை உயர்விலிருந்து மக்களைக் காக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory