» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இயற்கையை வணங்கும் இயற்கை திருவிழா பொங்கல் விழா : பங்காரு அடிகளார் அருளுரை

ஞாயிறு 14, ஜனவரி 2018 10:58:28 AM (IST)

ஓம்சக்தி! ஆதிபராசக்தி!
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

ஓம்சக்தி

மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர்பீட ஆன்மிக குரு அருள்திரு பங்காரு அடிகளார் அவர்களின் பொங்கல் விழா ஆசியுரை

ஓம்சக்தி! ஆதிபராசக்தி!

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

மாதங்கள் அனைத்திலும் தனித்துவம் பெற்ற மாதம தை மாதம் தை எனும் ஓரெழுத்தை மட்டுமே தன் பெயராக கொண்ட மாதம் இது. 

பொங்கல் விழா என்பது இயற்கையை வணங்கும் இயற்கை திருவிழா.

தைமாதம் பொங்கல் திருநாளில் பூமிக்கு பூசைபோட்டு மண்ணைத் தோண்டி அந்தப்பள்ளத்தை அடுப்பாக்கி, அதன்மேல் புதிய மண்பாணையை வைத்து அதனுள் அருகம்புல் இட்டு நெருப்பேற்றி, மண்பானையில் பால் ஊற்றி பானைக்கு ஒரே சீராக சூடேற்றி வணங்குகிறோம்.

சிறிது நேரத்தில் உள்ளிருக்கும் பால் "தை" "தை" எனக் கொதித்து சப்தம் கேட்டு, நம் உள்ளமும் மகிழ்ச்சியில்  "தை" "தை"  எனக் குதிக்கிற‌து. பால்  பொங்கி வரும்பொழுது, குடும்பத்தில் உள்ளவர்களெல்லாம் அரிசியைப் பொங்கல் பானையிலிட்டு பொங்கலோ பொங்கல் என கூறி குலவையிட்டு மகிழ்கிறோம். அனைவர் மனதிலும் மகிழ்ச்சி எனும் உணர்வு பொங்கி வழிகிறது. 

தை மாதம் இரண்டாம் நாள் நிலத்தை உழுது உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக உள்ள மாடுகளை தெய்வ நிலையில் வைத்து வணங்கும் மாட்டுப் பொங்கல் விழா. அடுத்த நாள் உற்றார், உறவினர், நண்பர்களைக் கண்டு கலந்து பேசி உறவாடி மகிழ்ந்திட "காணும் நாள்". அன்றைய நாள் "காணும் பொங்கல் நாள்".

பொங்கல் விழாவினால் மனம் பொங்கி மகிழ்ச்சியானது. இந்த மகிழ்ச்சி நிலைக்க வேண்டும் என்றால், இயற்கையின் இயல்பான கொடைத்தன்மை நிலைக்க வேண்டும். நிலத்தின் வளம் பாதுகாக்க வேண்டும். காலத்தே மழை பெழிய வேண்டும். ஆகாயத்தின் ஆற்றல்கள் நமக்கு சகாயமாக அமைய வேண்டும்.  

இத்தகைய நிலைகளில் இருந்து இயற்கை மாறி சீற்றம் அடைந்தால், இயல்பான வாழ்க்கையிலும் மாற்றம் வருகிறது. எதிர்காலம் ஏமாற்றமாகிறது. எனவே தான் நாம் இயற்கையை வணங்கச் சொல்கிறோம். இயற்கையை வைத்துதான் எதையும் செய்ய முடியும். 

இயற்கை முழுவதும் சார்ந்து மனிதன் வாழ்ந்த கால்தில் அவன் உடல் நிலையும், மன நிலையும் நன்றாக இருந்தது. விஞ்ஞான வளர்ச்சியாலும், அதன்மேல் ஏற்பட்ட மோகத்தாலும் செயற்கையான வாழ்க்கை முறைகளுக்கு மாறிய பிறகு ஏற்படும் தீய விளைவுகளும்ப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். 

விஞ்ஞானம் ஓரளவுக்குத் தேவைதான்.  ஆனால் அதிலேயே மூழ்கி, எந்நேரமும் கம்ப்யூட்டர், எந்நேரமும் கைப்பேசி என்று அதன் தாக்கத்திலேயே இருக்கும் பொழுது மனித மூளையின் சக்தி பாதிக்கப்படுகிறது. செல்போனில் சொல்வதையெல்லாம் செல்படுத்த ஆரம்பித்து, மாடியிலிருந்து குதிக்கும் நிலையெல்லாம் செய்தித்தாள்களில் படிக்கிறோம். அங்கே அறிவு வேலை செய்யவில்லை என்று தெரிகிறதல்லவா?

விஞ்ஞானத்தின் முன்னேற்றம் அழிவுக்கான ஆயுதங்களை அதிகமாக்கியுள்ளது. அதனால் நாடுகளுக்கு இடையே ஒரு பதட்டநிலை எப்போதும் இருந்துகொணடே உள்ளது. 

மனிதனுக்கு உயிர் இருக்கும் வரை உணர்வு இருந்து கொண்டுதான் இருக்கும். அந்த உணர்வுகளில் தமக்கும், பிறர்க்கும் நன்மை தரும் உணர்வுகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். தீய உணர்வுகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ள ஆன்மிக உணர்விகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். தம்மிடமிருந்து அத்தகைய உணர்வுகளை மாறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 

பூமியின் அடியில் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்திருக்கும் வேர்கள் மூலம் ஒரு மரம் தண்ணீரை உறிஞ்சுகிறது. பூமிக்கு வெளியே தெரியும் இலைகள் மூலம் காற்றை சுவாசிக்கின்றது. அதனால் அம்மரத்திற்கு வளர்ச்சி ஏற்படுகிறது. அதுபோலவே மனிதனின் உள்ளுணர்வும், வெளி உணர்வும் ஒன்றாக இருக்க வேண்டும். அப்போது தான் ஆன்ம உணர்வு உயர்வடையும்.

இப்போது வாழும் வாழ்க்கை எப்பொழுது முடியும் என்பது தெரியாது. அது முடிந்தால் முடிந்ததுதான்; போனால் போனதுதான்; அப்படிப் போவதற்கு முன் நல்ல செயல்களைச் செய்ய வேண்டும். நல்ல எண்ணங்களையும், நல்ல சிந்தனைகளையும் மற்றவர்கள் மனதில் விதைத்து அவர்களும் நல்ல செயல்களைச் செய்வதற்கு உறுதுணையாகவும், ஆக்க சக்தியாகவும் செயல்பட வேண்டும்.

மனிதனுக்கு அறிவு வளர, வளர அதனால் ஏற்படும் தன்னம்பிக்கை கர்வமாக மாறிவிட்டது. அதனால்  சிலர் தாய், தந்தையரைக் கூட மதிப்பதில்லை. தாய், தந்தையர் எப்போதும் வணங்கப்பட வேண்டியவர்கள் என்பதை உணர்ந்து திருந்த வேண்டும். 

இயற்கையான பொருட்களை உணவாக உண்டு, இயல்பான வாழ்க்கை வாழ்ந்து வந்தபொழுது, இத்தனை நோய்களில்லை; இத்தனை மருந்துகளில்லை; இயற்கையில் இருந்து செயற்கைக்கு மாற மாற, மருந்தால் மட்டுமே நோய் குணமாகாமல், அறுவை சிகிச்சையும் செய்து கொள்ளும் நிலைமையும் பெருகிவிட்டது. 

பூமி என்பது தனித்தன்மை வாய்ந்த ஒர் பொருள்; பூமிதான் இயற்கை; விளை பொருட்களை நமக்கு கொடுக்கிறது. அதனை போலவே எத்தனையோ நட்சத்திரங்கள் வானில் இருந்தாலும் வெளிச்சம் கொடுப்பது சூரியன் எனும் ஒரு பொருள்தான். இரவில் பார்வைக்கு அழகாக இருந்து குளிர்ச்சியை தரும் ஒரு பொருள் சந்திரன்தான்.


அதைப் போலவே பிரபஞ்சத்தின் ஒரே தாய் ஆதிபராசக்திதான்.
மனிதரெல்லாம் ஒரே குலம்தான்.

ஒரே தாய்! ஒரே குலம்!

மனித குலம் தழைக்க வேண்டுமென்றால் ஆன்மிகத்தில் ஈடுபாடு கொள்ள வேண்டும். ஆன்மிகத் துறையில் ஈடுபட்டு வரவர, மனப்பக்குவம் வளரும். மனம் பக்குவப்பட மன அமைதி வரும். மன நிம்மதி வரும். 

நேற்றைய செயல்களால் கிடைக்கும் அனுபவங்களை வைத்து, இன்றைய செயல்பாடுகளை நல்ல முறையில் அமைத்துக் கொண்டால், அவை நாளைய முன்னேற்றத்திற்கு வித்துக்களாக அமையும். 

அத்தகைய செயல்பாடுகளுக்கு மனமும், உடலும் ஒருங்கிணைந்து செயலாற்றும் உழைப்புத்தேவை. அயர்வறியா உழைப்பே உயர்வைத் தரும். 

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், சூரியன், சந்திரன், போன்ற இயற்கை பொருட்களெல்லாம், தங்கள் கடமைகளை முறையாகச் செய்து வருவதால்தான் இவ்வுலகம் இயங்குகிறது. உயிர்களும்  வாழ்கின்றன. இவை தங்கள் கடமைகளை மறந்தால் என்ன ஆகும்? இதைப்போலவே மனிதனும் தன் கடமைகளை உணர்ந்து  நன்றாக உழைத்து, நேர்மையாக வாழ்ந்தால்தான் நிம்மதியாக வாழ முடியும்.

உழைப்பு, தாய் - தந்தையிடம் அன்பு, பண்பு, பாசம், அக்கம்பக்கம் இருப்பர்களோடு ஒட்டி வாழும் பண்பு, தர்மம், ஒற்றுமை உணர்வு, ஒழுக்கம் இவையெல்லாம் இன்றைய தேவை. இத்தகைய பண்புகள் பெருகும்போது ஆன்மிக உணர்வும் பெருகும். ஆன்மிக உணர்வு பெருக பெருக மன அமைதியும், மன நிம்மதியும் உண்டாகும்.

மக்களிடையே அன்பு, பண்பு, பக்தி, பாசம், பொங்கி, மன அமைதியும், மன நிம்மதியும் பெற்று வாழ்ந்திட இந்த பொங்கல் திருநாளில் வாழ்த்துகிறோம்!

வாசகர்களுக்கும், பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அன்பான பொங்கல் வாழ்த்துக்கள்.

அம்மாவின் ஆசி!
ஓம்சக்தி! ஆதிபராசக்தி!


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsSterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory