» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கவிஞர் வைரமுத்து மீதான வழக்குகளை விசாரிக்க இடைக்காலத் தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு

வெள்ளி 19, ஜனவரி 2018 3:42:58 PM (IST)

ஆண்டாள் குறித்த கவிஞர் வைரமுத்துவின் சர்ச்சைக் கருத்து தொடர்பான வழக்குகளின் விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து அவதூறாக பேசியதாக சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பாக வைரமுத்துவை கண்டித்து இந்து அமைப்புகள் போராட்டங்களை நடத்தின. இந்து அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் பாஜக நிர்வாகிகளும் வைரமுத்துவுக்கு எதிராக கண்டனங்களை தெரிவித்து வந்தனர். பல இடங்களில் வைரமுத்து மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் தன்மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வைரமுத்து மனுத்தாக்கல் செய்தார். சென்னை கொளத்தூர் காவல்நிலையத்தில் முருகானந்தம் என்பவர் தொடர்ந்த வழக்கில் வைரமுத்து இந்த மனுவை தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமெரிக்கா ஆராய்ச்சியாளர் கட்டுரையைதான் வைரமுத்து சுட்டிக்காட்டியதாக அவரது தரப்பு வழக்கறிஞர் வாதாடினார்.

மேலும் ஆண்டாள் பெண்களுக்கு அதிகாரம் அளிக்க போராடினார் என்றே வைரமுத்து பேசினார் என்றும் அவர் வாதிட்டார். மேலும் ஆராய்ச்சியாளரின் கட்டுரைக்கு குற்றச்சாயம் பூசுவதாகவும் அவர் புகார் கூறினார். விஹெச்பி மற்றும் அரசியல் கட்சிகளே இந்த விவகாரத்தை பெரிதாக்கி உள்ளன என்றும் வைரமுத்துவின் வக்கீல் வாதாடினார். மேலும் வைரமுத்து கூறியது அவரது சொந்தக் கருத்து அல்ல என்றும் வைரமுத்துவின் வக்கீல் நீண்ட வாதத்தை முன்வைத்தார்.

இதனைக் கேட்ட நீதிமன்றம் வைரமுத்து கூறிய கருத்தில் தவறு இருப்பதாக தெரியவில்லை என்றும் தெரிவித்தது. ஆண்டாள் பற்றி ஆராய்ச்சி கட்டுரையைத்தான் வைரமுத்து மேற்கோள் காட்டியுள்ளார் என்றும் சொந்த கருத்தை வைரமுத்து கூறவில்லை என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது. வைரமுத்து கூறியதை ஏன் அரசியல் ஆக்குகிறீர்கள் என்றும் உயர்நீதிமன்ற நீதிபதி ரமேஷ் கேள்வி எழுப்பினார். ஒரு தரப்பு வாதம் மட்டும் நிறைவடைந்த நிலையில் வைரமுத்துவின் மனு மீதான விசாரணை பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

பிற்பகலில் மீண்டும் விசாரணையை தொடங்கிய ஹைகோர்ட் ஆண்டாள் தொடர்பான வைரமுத்துவின் கருத்தை பெரிதுபடுத்த வேண்டாம் எனக்கூறி அவர் மீது காவல்நிலையங்களில் உள்ள வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டது.வைரமுத்துவின் கோரிக்கையை ஏற்று சென்னை ஹைகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும் இந்த வழக்கு விசாரணை வரும் பிப்ரவரி 16ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsSterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory