» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மீன்பிடி தடைக் காலம் இன்றுடன் நிறைவு: கடலுக்குள் செல்ல தயாராகும் மீனவர்கள்!!

வியாழன் 14, ஜூன் 2018 10:18:09 AM (IST)

61 நாட்கள் கொண்ட மீன்பிடி தடைக்காலம் நாளை முடிவடைகிறது. இதையொட்டி நாளை நள்ளிரவு மீன்பிடிப்பதற்காக மீனவர்கள் கடலுக்கு செல்கின்றனர்.

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15-ம் தேதி முதல் ஜூன் 15-ம் தேதி வரையிலான 61 நாட்கள் மீன்களுக்கான இனப்பெருக்க காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இக்காலத்தில் தமிழகத்தில் ஆழ்கடலில் மீன்பிடிக்க (தமிழக கடல்வழி மீன்பிடி ஒழுங்குமுறை சட்டம் 1983-ம் படி) தடை விதிக்கப்பட்டு வருகிறது. இக்காலத்தில் மீனவர்கள் கரையோர பகுதிகளில் மட்டுமே மீன்பிடிக்க அனுமதி உண்டு.

அந்தவகையில் கடந்த ஏப்ரல் 15-ம் தேதி மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது. தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டம் காரம்பாக்கத்தில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் வரையிலான வங்க கடல் எல்லைகளில் இந்த தடை அமலில் உள்ளது. தடையையொட்டி மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லவில்லை. தடைக்காலம் என்பதால் மீனவர்கள் தங்களது பைபர் மற்றும் விசைப்படகுகளை கடல் எல்லைகளில் நிறுத்தி வைத்துள்ளனர்.

இதனால் சென்னை காசிமேடு, கடலூர், நாகை, ராமேசுவரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, முட்டம் உள்ளிட்ட முக்கிய துறைமுகங்களில் ஆயிரக்கணக்கான படகுகள் கடல் எல்லைகளில் நிறுத்தப்பட்டு உள்ளது. தடைக்காலம் அமலில் இருக்கும் காலக்கட்டங்களில் கடற்கரையோரங்களில் வலை பின்னுதல், அறுந்த வலைகளை சீரமைத்தல், படகுகளில் வெடிப்பு ஏற்படாமல் இருக்க சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

தடை காலத்தை முன்னிட்டு ஒவ்வொரு மீனவ குடும்பத்துக்கும் தலா ரூ.5 ஆயிரம் உதவித்தொகையாக அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. தடைக்காலம் அமலில் இருந்ததால் வெளிமாநில மீன்களே விற்பனைக்கு இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. இதனால் மீன்களின் விலையும் உயர்ந்து காணப்பட்டது.இந்தநிலையில் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் நாளை யுடன் (வெள்ளிக்கிழமை) முடிவடைகிறது. இதையொட்டி நாளை நள்ளிரவு (12 மணிக்கு பிறகு) மீனவர்கள் கடலுக்குள் செல்ல உள்ளனர். 61 நாட்களுக்கு பிறகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்வதையொட்டி, அனைத்து ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளனர்.

படகுகளில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து பராமரிப்பு பணிகளும் முடிந்துவிட்ட நிலையில், படகுகளில் ஐஸ் கட்டிகள் உள்ளிட்ட தேவையான பொருட்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. இதனால் மீனவர்கள் புதிய உற்சாகத்துடன் காணப்படுகின்றனர். 61 நாட்களுக்கு பிறகு கடலுக்குள் செல்வதால் அதிக மீன்கள் கிடைக்கும் என்று மீனவர்கள் எதிர்பார்க்கின்றனர். மீன்பிடி தடைக்காலம் முடிவடைவதால் மீன்கள் விலை குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory