» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நீதிமன்றத்தின் புண்ணியத்தில்தான் தமிழக அரசு காலம் தள்ளிக் கொண்டிருறது: ராமதாஸ் காட்டம்

வியாழன் 14, ஜூன் 2018 5:11:50 PM (IST)

நீதிமன்றத்தின் கால தாமதங்களின் புண்ணியத்தில் தான் தமிழக அரசு காலம் தள்ளிக் கொண்டிருப்பதாக, பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கை: "முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய 18 சட்டப்பேரவை உறுப்பினர்களின் பதவி நீக்கம் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு மாறுபட்ட இருவேறு தீர்ப்புகளை வழங்கியிருக்கிறது. தமிழகத்தின் அரசியல் குழப்பங்களுக்கு தீர்வு ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், குழப்பம் தொடர இந்தத் தீர்ப்புகள் வகை செய்துள்ளன.

தினகரன் ஆதரவு சட்டப்பேரவை உறுப்பினர்கள் 18 பேரும் பதவி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்று உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், பதவி நீக்கம் செல்லாது என்று நீதிபதி சுந்தரும் தீர்ப்பளித்துள்ளனர். இருவரும் தங்களின் முடிவுகளுக்கான காரணங்களையும் பட்டியலிட்டு உள்ளனர்.

கர்நாடகத்தில் இதேபோன்ற சூழலில் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் 11 பேர் உட்பட 16 பேர் பதவி நீக்கம் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவர்களை பதவி நீக்கம் செய்த கர்நாடக பேரவைத் தலைவருக்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன், அவரது நடவடிக்கை செல்லாது என்று கூறி, 16 பேரவை உறுப்பினர்களின் பதவியையும் மீண்டும் வழங்கி தீர்ப்பளித்தது. 18 பேர் பதவி நீக்கம் குறித்த வழக்கில் ஒரு நீதிபதி உச்ச நீதிமன்றத் தீர்ப்பைப் பின்பற்றி தீர்ப்பளித்த நிலையில், தலைமை நீதிபதி உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு மாறாக தீர்ப்பளித்திருக்கிறார். இவ்வழக்கின் இறுதித் தீர்ப்பை மூன்றாவது நீதிபதி விசாரித்து வழங்க உள்ள நிலையில், இந்தத் தீர்ப்பு சரியா? தவறா? என்று விவாதிப்பது சரியாக இருக்காது. இறுதித் தீர்ப்புக்காக காத்திருக்கத் தான் வேண்டும்.

ஆனால், இந்த வழக்கில் மிகவும் காலம் தாழ்த்தி வழங்கப்பட்டுள்ள இந்தத் தீர்ப்பு, தமிழக அரசுக்கு செயற்கையான ஆயுளைக் கொடுத்து, அதன் மூலம் தமிழகத்திற்கு மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை ஆகும். முதல்வருக்கு எதிராக டிடிவி தினகரன் ஆதரவு சட்டப்பேரவை உறுப்பினர்கள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 22 ஆம் தேதி ஆளுநரிடம் மனு அளித்தனர். அவர்களை பதவி நீக்கம் செய்து செப்டம்பர் 19 ஆம் தேதி பேரவைத் தலைவர் தனபால் ஆணையிட்டார். அதை எதிர்த்து செப்டம்பர் 20 ஆம் தேதி தொடரப்பட்ட வழக்கில் 9 மாதங்களுக்குப் பிறகு தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது.

 இந்த 9 மாத காலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு ஏராளமான மக்கள் விரோத செயல்களை செய்திருக்கிறது; பல்லாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் செய்திருக்கிறது. இந்த வழக்கில் இறுதித் தீர்ப்பு வழங்கப்படுவதற்கு இன்னும் 3 மாதங்கள் ஆகும் என்று வைத்துக் கொண்டால், அதுவரை தமிழகம் தொடர்ந்து கொள்ளையடிக்கப்படும். அதுமட்டுமின்றி 18 உறுப்பினர்களின் தொகுதிகளில் வளர்ச்சிப்பணிகள் தொடர்ந்து பாதிக்கப்படும்.

சென்னை உயர் நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பு ஒருபுறம் இருக்க, தார்மிக அடிப்படையில் தமிழக அரசு பதவியில் நீடிக்கலாமா? என்று கேள்வி எழுப்பப்பட்டால், இல்லை என்பது தான் பதிலாக இருக்கும். அரசியலமைப்புச் சட்டத்தின்படி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்களில் பெரும்பான்மையினரின் ஆதரவு இருப்பவர் தான் முதல்வராக நீடிக்க முடியும். அந்த வகையில் அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 136 சட்டப்பேரவை உறுப்பினர்களின் முழுமையான ஆதரவு முதலமைச்சருக்கு இல்லை.

பேரவையின் மொத்த வலிமையான 234 உறுப்பினர்களில் பெரும்பான்மை வலிமையான 117 உறுப்பினர்களின் ஆதரவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை. தினகரன் ஆதரவு சட்டப்பேரவை உறுப்பினர்கள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆளுநரிடம் மனு அளித்த நாளுக்கும், அவர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட நாளுக்கும் இடைப்பட்ட ஒரு மாதத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க தமிழக அரசுக்கு ஆளுநர் ஆணையிட்டிருந்தால், அப்போதே இந்த அரசு கவிழ்ந்திருக்கும்.

அந்த வகையில், கடந்த ஆகஸ்ட் -செப்டம்பர் மாதங்களில் ஆளுநர் செய்த தாமதம், அதன்பின்னர் உயர் நீதிமன்றத்தில் 4 மாதங்களில் வழக்கு விசாரணை முடிவடைந்து விட்ட நிலையில், தீர்ப்பளிப்பதற்காக செய்யப்பட்ட 5 மாத தாமதம், இதன்பின்னர் மூன்றாவது நீதிபதியின் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளவிருக்கும் காலம் என கால தாமதங்களின் புண்ணியத்தில் தான் தமிழக அரசு காலம் தள்ளிக் கொண்டிருக்கிறது. எந்த வகையில் பார்த்தாலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பதவி நீடிக்கும் தகுதியை இழந்து விட்டது. ஆகவே, தமிழக அரசு உடனடியாக பதவி விலக வேண்டும்” என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.


மக்கள் கருத்து

உண்மை தமிழன்Jun 16, 2018 - 02:16:08 PM | Posted IP 117.2*****

என்ன ஆனாலும் - அன்பான மணிக்கு - மாற்றமும் இல்லை முன்னேற்றமும் கிடையாது

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory