» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நீட் தேர்வில் ஜீரோ மார்க் எடுத்தவர்களுக்கு மருத்துவ இடம்: ராமதாஸ் குற்றச்சாட்டு

செவ்வாய் 17, ஜூலை 2018 3:35:43 PM (IST)

நீட் தேர்வில் ஜீரோ அல்லது அதற்குக் குறைவான மதிப்பெண் எடுத்தவர்களுக்கு மருத்துவ இடம் கிடைத்துள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: "மருத்துவக் கல்வி வணிகமயமாவதைத் தடுக்கவும், அதன் தரத்தை உயர்த்தவும் தான் நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது. ஆனால் அவை முற்றிலும் பொய் என்பதைப் புள்ளி விவரங்கள் நிரூபித்திருக்கின்றன. நீட் தேர்வில் 3 பாடங்களில் இரண்டில் ஜீரோ அல்லது அதைவிடக் குறைவாக மதிப்பெண்கள் எடுத்தவர்களுக்குக் கூட மருத்துவம் படிக்க இடம் கிடைத்துள்ளது என்பது தான் அந்த புள்ளிவிவரம்” என்று குறிப்பிட்டுள்ளார். 

2017ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் மொத்த மதிப்பெண்கள் 720க்கு 150க்கும் குறைவான மதிப்பெண் பெற்றவர்களின் பாடவாரியான நீட் தேர்வு மதிப்பெண்களை டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் ஆய்வு செய்தது. அதில் நீட் தேர்வில் 150க்கும் குறைவான மதிப்பெண்கள் பெற்று தேசிய தரவரிசையில் 5 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் பிந்தைய இடத்தைப் பிடித்தவர்களில் 1990 பேர் தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர்.

இவர்களில் 530 பேர் இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களில் ஒற்றை இலக்க மதிப்பெண்கள் எடுத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. நீட் தேர்வில் 500க்கும் கூடுதலான மதிப்பெண் பெற்றவர்களுக்கு மட்டும் தான் அரசு கல்லூரிகளில் இடம் கிடைக்கும். 150க்கும் குறைவான மதிப்பெண் என்பது எந்த வகையிலும் பரிசீலிக்கக் கூட தகுதியானதல்ல. ஆனாலும், இந்த மதிப்பெண் பெற்றவர்களில் 1990 பேர் மருத்துவப் படிப்பில் சேர முடிந்ததற்குக் காரணம் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு சாதகமான விதிகள் தான்” என்று ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

"குறிப்பாக இந்த 1990 பேரில் 400 பேர் இயற்பியல் ,வேதியியல் பாடங்களில் 9க்கும் குறைவான ஒற்றை இலக்க மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். 110 பேர் இந்த இரு பாடங்களில் ஏதேனும் ஒன்றிலோ அல்லது இரண்டிலுமோ ஜீரோ அல்லது அதைவிடக் குறைவான எதிர்மறை மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். எனினும், உயிரியல் பாடத்தில் சற்று கூடுதலான மதிப்பெண் எடுத்ததால் நீட் தேர்வில் அவர்களால் தேர்ச்சி பெற முடிந்துள்ளது. இவ்வாறு தேர்ச்சி பெற்ற 530 பேரில் 507 பேர் தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மருத்துவப் படிப்பில் சேர்ந்து ஓராண்டை முடித்துள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

"கடந்த ஆண்டு மருத்துவப் படிப்புக்கு சுமார் 60,000 இடங்கள் மட்டுமே இருந்தன. தகுதி அடிப்படையில் இந்த இடங்கள் நிரப்பப்பட்டிருந்தால் தரவரிசையில் முதல் 75,000 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு மட்டும் தான் வாய்ப்பு கிடைத்திருக்க வேண்டும். ஆனால், தரவரிசையில் 50,000க்குள் வந்த பலருக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளிலோ, தனியார் மருத்துவக் கல்லூரிகளிலுள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களிலோ வாய்ப்பு கிடைக்கவில்லை.

அதேநேரத்தில் தரவரிசையில் 5.30 லட்சத்திற்கும் கீழ் ஆறரை லட்சமாவது இடத்தைப் பிடித்தவர்களுக்குக் கூட தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மருத்துவ இடம் கிடைத்துள்ளது. இதற்குக் காரணம் 50,000க்குள் இடங்களைப் பிடித்தவர்களால் தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் ஆண்டுக்கு ரூ.18 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை செலுத்திப் படிக்க வசதி இல்லை. அதனால் அவர்களால் மருத்துவப் படிப்பில் சேர முடியவில்லை. அதேநேரத்தில் மதிப்பெண்களே இல்லாமல், பணத்தைக் குவித்து வைத்திருப்பவர்களால் நிகர்நிலைப் பல்கலைகழகங்களில் சேர முடிந்துள்ளது. அப்படியானால், மருத்துவப் படிப்பில் சேரத் தேவை மதிப்பெண்களா, கோடிகளா? " என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுபோன்று மருத்துவ படிப்பில் சேர்பவர்கள் தட்டுத்தடுமாறி மருத்துவர்கள் ஆனாலும் கூட இவர்கள் தரும் மருத்துவம் எந்த அளவுக்குத் தரமானதாக இருக்கும்? என்ற கேள்விக்கு மத்திய அரசு பதில் தர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட பாடங்களில் தேர்ச்சி பெறுவதற்கு 35 சதவிகித மதிப்பெண்களைப் பெற வேண்டியது கட்டாயமாகும். ஆனால், நீட் தேர்வில் அத்தகைய கட்டாயம் எதுவும் கிடையாது. இந்தச் சூழலில் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு தகுதி இல்லை என்றும், நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு மருத்துவம் படிக்க தகுதியுள்ளது என்றும் கூறுவது எந்த வகையான சமூகநீதி?

உண்மையில் நீட் தேர்வு 2010ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட போது, அதில் ஒவ்வொரு பாடத்திலும் தேர்ச்சி பெற குறைந்தபட்ச மதிப்பெண் தேவை என அறிவிக்கப்பட்டிருந்தது. அத்தகைய நிபந்தனை விதிக்கப்பட்டால் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் தேர்ச்சி பெற மாட்டார்கள், இந்த சூழலில் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் சேர மாணவர்கள் கிடைக்க மாட்டார்கள் என்பதால் பாடவாரியாக குறைந்தபட்ச மதிப்பெண் நிபந்தனை நீக்கப்பட்டது. இது மருத்துவக்கல்வி சீரழிவின் தொடக்கமாகும்.

இவ்வாறு கூறியுள்ள ராமதாஸ்,”ஓட்டைகள் நிறைந்த நீட் தேர்வை ரத்து செய்ய இதை விடச் சிறந்த காரணம் தேவையில்லை. எனவே, அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரி இடங்களுக்கு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். நிகர்நிலைப் பல்கலைக்கழக இடங்களுக்கு மட்டும் கடுமையான விதிகளுடன் நீட் தேர்வை நடத்த வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory