» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஓபிஎஸ் மீதான சொத்து குவிப்பு புகாரை சிபிஐயிடம் ஏன் ஒப்படைக்க கூடாது?: உயர்நீதிமன்றம் கேள்வி

செவ்வாய் 17, ஜூலை 2018 4:44:04 PM (IST)

ஓபிஎஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அளிக்கப்பட்டுள்ள சொத்துக் குவிப்பு புகாரை ஏன் சிபிஐயிடம் ஒப்படைக்க கூடாது என்று தமிழக அரசுக்கு  சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

திமுக அமைப்புச் செயலாளரும், எம்பியுமான ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல்  செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அவரது மனைவி விஜயலட்சுமி, மகன்கள் ரவீந்திரநாத், ஜெயபிரதீப், மகள்  கவிதாபானு மற்றும் சகோதரர்கள் பெயரில் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார்.

வருமானம் குறித்த தவறான தகவல்களை தேர்தல் வேட்புமனுக்களில் கொடுத்துள்ளார். தேனி மாவட்ட போஜராஜன் மில்ஸ் நிறுவனத்துக்கு 99 ஆண்டுகளுக்கு  வழங்கப்பட்ட 140 கோடி ரூபாய் நிலத்தை சந்தை விலைக்கு குறைவாக கொடுத்து வாங்கியுள்ளார். வில்லிப்புத்தூரில் செண்பகத்தோப்பு பகுதியில் மாந்தோப்பு  வாங்கியுள்ளார். அமெரிக்கா, துருக்கி, இந்தோனேசியா நாடுகளில் உள்ள நிறுவனங்களிலும், இந்திய நிறுவனங்களிலும் பன்னீர்செல்வத்தின் வாரிசுகள் ரூ.200 கோடி  அளவில் முதலீடு செய்துள்ளனர். கடந்த 2011 தேர்தலில் மனைவிக்கு ரூ.24.20 லட்சம் சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிட்ட பன்னீர்செல்வம், 2016 தேர்தலில் தாக்கல்  செய்த வேட்புமனுவில் ரூ.78 லட்சம் மதிப்புள்ள சொத்து உள்ளதாக தெரிவித்துள்ளது சந்தேகத்தை எழுப்புகிறது.

மகன் ஜெயபிரதீப் மூன்று நிறுவனங்களில் இயக்குனராக உள்ளார். குறைந்த வயதுடைய இவர் பெரியகுளம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான சொத்துக்களை  வாங்கியுள்ளார். சொத்துக்களுக்கான வருவாய் ஆதாரம் எதுவும் இல்லாமல் எப்படி இவ்வளவு சொத்துக்களை வாங்க முடியும். மணல் குவாரி மோசடியில்  சிக்கியுள்ள சேகர் ரெட்டியின் டைரியில் மோசடியில் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் தொடர்பிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். 6 மாதங்களில் அவரிடம் ஓ.பன்னீர்செல்வம்  ரூ.4 கோடி பணம் பெற்றுள்ளதாக டைரியில் குறுப்பிட்டுள்ளார். தனது அரசியல் செல்வாக்கு மற்றும் எம்எல்ஏ, முதல்வர், துணை முதல்வர் ஆகிய பதவிகளை  துஷ்பிரயோகம் செய்து ஏராளமான சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளார். இதன் மூலம் தனக்கு வாக்களித்த மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளார்.

எனவே, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யக்கோரி கடந்த மார்ச் 10ம்  தேதி ஊழல் தடுப்புத் துறையில் புகார் அளித்தேன். எனது புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஊழல் செய்துள்ளதாக பொது ஊழியருக்கு எதிராக  புகார் அளித்தால் உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும். எனவே, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான சொத்து குவிப்பு தொடர்பாக  விசாரணை நடத்துமாறு ஊழல் தடுப்புத் துறைக்கு உத்தரவிட வேண்டும். இந்த மனு  நீதிபதி ஜெயசந்திரன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.  அப்போது ஆர்.எஸ்.பாரதி சார்பில் மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி, ‘’ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் கோடி கணக்கில் சொத்து  வாங்கி குவித்துள்ளனர். 

அவர்கள் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று 3 மாதங்களுக்கு முன்பே தமிழக லஞ்ச  ஒழிப்புத்துறையிடம் மனுதாரர் புகார் கொடுத்துள்ளார். ஆனால் அந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் லஞ்ச ஒழிப்புத்துறை மனுவை கிடப்பில்  போட்டுள்ளது’’ என்று வாதிட்டார். அப்போது நீதிபதி அரசு குற்றவியல் தலைமை வக்கீல் எமிலியாஸ்சிடம், இந்த விவகாரத்தில் 3 மாதங்களுக்கு முன்பே புகார்  கொடுக்கப்பட்டுள்ளது. ஏன் இன்னும் அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேட்டார். 

அதற்கு அரசு வக்கீல், ஏற்கனவே மனுதாரர் கொடுத்த புகாரில் உள்ள சேகர்ரெட்டி தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது என்று கூறினார்.  இதைகேட்ட நீதிபதி, இந்த புகார் மீது விசாரணை நடத்துமாறு சிபிஐக்கு ஏன் உத்தரவிடக்கூடாது? என்று கேள்வி எழுப்பினார். அப்போது கூடுதல் அட்வகேட்  ஜெனரல் மணிசங்கர் ஆஜராகி, அரசிடம் கேட்டு பதில் தருகிறேன் என்றார். இதையடுத்து நீதிபதி அடுத்தக்கட்ட விசாரணையை திங்கள் கிழமைக்கு ஒத்தி வைத்து  உத்தரவிட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsSterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory