» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அண்ணா பல்கலை. மறுமதிப்பீட்டு முறைகேடு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி

வெள்ளி 10, ஆகஸ்ட் 2018 10:28:46 AM (IST)

அண்ணா பல்கலைக்கழக தேர்வுத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரும் மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நேற்று உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் தாக்கல் செய்த மனு:  தமிழகம் முழுவதும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளில் கடந்த ஆண்டு (2017) ஏப்ரல், மே மாதம் நடந்த தேர்வுகளின் மறுமதிப்பீட்டில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. கடந்த 2017-இல் தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் குறைந்த மதிப்பெண் பெற்ற 3 லட்சத்து 2 ஆயிரத்து 380 பொறியியல் மாணவர்கள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்து உள்ளனர். 

இதில் 16 ஆயிரத்து 636 மாணவர்கள் தேர்ச்சி பெற வைக்கப்பட்டுள்ளனர். இந்த மாணவர்களை தேர்ச்சி பெற வைப்பதற்காக மாணவர் ஒவ்வொருவரிடமும் பாடம் ஒன்றுக்கு தலா ரூ.10 ஆயிரம் வரை பல்கலைக்கழக அதிகாரிகள் உள்ளிட்டோர் லஞ்சமாக வாங்கியுள்ளனர். இது போன்ற முறைகேடுகளால் சொந்த முயற்சியில் படித்து தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும். முறைகேடு குறித்து சில பேராசிரியர்கள் மீது சென்னை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கூட்டுச்சதி உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

ஆனால் இதுபோன்ற முறைகேடுகள் குறைந்தபட்சம் 10 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடந்து வந்திருக்கலாம். எனவே, சிபிஐ விசாரணை நடத்தக்கோரி தொடர்புடைய அதிகாரிகளுக்கு புகார் அனுப்பினேன். இதுவரை பதில் இல்லை. எனவே மறுமதிப்பீட்டு முறைகேட்டை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது, அண்ணா பல்கலைக்கழகத் தேர்வு மறுமதிப்பீடு முறைகேடு தொடர்பாக கடந்த 31-ஆம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஆனால் மனுதாரர் அதற்குள் சிபிஐ விசாரணை கேட்பது ஏற்கத்தக்கது அல்ல. எனவே மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd

Tirunelveli Business Directory