» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கருணாநிதியின் மறைவால் காலியானது திருவாரூர் தொகுதி: தேர்தல் ஆணையம் இன்று அறிவிப்பு

வெள்ளி 10, ஆகஸ்ட் 2018 10:55:44 AM (IST)

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவைத் தொடர்ந்து திருவாரூர் தொகுதி காலியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையம் இன்று வெளியிடும் என தெரிகிறது.

திமுக தலைவரும் திருவாரூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான கருணாநிதி, கடந்த 7-ம் தேதி காலமானார். அவரது உடல் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிட வளாகத்தில் நேற்று முன்தினம் நல்லடக்கம் செய்யப்பட்டது. சட்டப்பேரவை உறுப்பினர் யாராவது மறைந்தால், அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட வேண்டும்.

அதன்படி, கருணாநிதி மறைவைத் தொடர்ந்து, திருவாரூர் தொகுதி காலியாக உள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு தமிழக சட்டப்பேரவைச் செயலகம் விவரங்களை அனுப்ப உள்ளது. இதையடுத்து, திருவாரூர் தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக இன்று அறிவிக்கும் என தெரிகிறது. திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக எம்எல்ஏ சில நாட்களுக்கு முன்பு காலமானார். அதனால், அந்த தொகுதியும் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், காலியாக அறிவிக்கப்பட்ட தொகுதிக்கு 6 மாதத்துக்குள் தேர்தல் நடத்த வேண்டும். அதன்படி, திருப்பரங்குன்றம்,திருவாரூர் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும் என தேர்தல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழக சட்டப்பேரவையில் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 234. இதில் ஏற்கெனவே, முதல்வருக்கு எதிராக மனு அளித்ததால் டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். அன்றே அந்த தொகுதிகள் அனைத்தும் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், நீதிமன்ற தடை இருப்பதால், 6 மாதங்களுக்கு மேலாகியும் அந்தத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படவில்லை. தற்போது திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளையும் சேர்த்து 20 தொகுதிகள் காலியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd


Tirunelveli Business Directory