» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருமுருகன் காந்தி மீது எந்த அடிப்படையில் தேசத் துரோக வழக்கு? சிறையிலடைக்க நீதிமன்றம் மறுப்பு!!

வெள்ளி 10, ஆகஸ்ட் 2018 4:38:06 PM (IST)

ஜெனிவாவில் பேசியதால் தேசத் துரோக வழக்குப் பதிவா?? திருமுருகன் காந்தியை எந்த அடிப்படையில் கைது செய்தீர்கள் என்று கேள்வியெழுப்பிய நீதிமன்ற நடுவர் அவரைச் சிறையிலடைக்க இயலாது என்று மறுத்துவிட்டார்.

தமிழ்நாட்டில் ஸ்டெர்லைட் ஆலைப் பிரச்சினை 100 நாட்கள் போராட்டமாக நடந்தது. 100-வது நாள் நிகழ்ச்சியில் பேரணியாக கலெக்டர் அலுவலகம் நோக்கி மக்கள் பெருந்திரளாகச் சென்றனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் கொல்லப்பட்டனர், 50 பேர்வரை காயமடைந்தனர். துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டவிதம் குறித்து அனைத்து எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன.

தேசிய அளவில் இப்பிரச்சினை எதிரொலித்தது. தற்போது துப்பாக்கிச் சூடு குறித்த வழக்கும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தூத்துக்குடி ஸ்டெர்லைட் படுகொலைக்கு நீதி கேட்டு ஐநா மனித உரிமைக் கவுன்சிலில் பதிவு செய்ய ஜெனிவா சென்றார்.அங்கு அவர் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்துப் பேசினார். இதையடுத்து அவரைக் கைது செய்ய லுக் அவுட் நோட்டீஸ் தமிழக போலீசாரால் கொடுக்கப்பட்டிருந்தது.

ஜெனிவா மனித உரிமை கவுன்சிலில் பேசிவிட்டு இந்தியா திரும்பிய திருமுருகன் காந்தியை லுக் அவுட் நோட்டீஸ் மூலம் பெங்களூரு விமான நிலையத்தில் போலீசார் கைது செய்தனர். அவர்மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த தமிழக போலீசார் நேற்றிரவு அவரைக் கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். இந்நிலையில் திருமுருகன் காந்தியை இன்று சென்னை சைதாப்பேட்டை 11-வது குற்றவியல் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற நடுவர் பிரகாஷ் முன் நிறுத்திய போலீசார் அவரை நீதிமன்றக் காவலில் சிறையிலடைக்க மனு அளித்தனர்.

அப்போது தனக்காக வாதாடிய திருமுருகன் காந்தி, நான் ஐநா மனித உரிமை கவுன்சிலில் பேசியதை வீடியோவாக எடுத்து வெளியிட்டது ஐநா.  நான் வெளியிடவில்லை. அப்படியானால் ஐநா மனித உரிமை கவுன்சில் மீது வழக்கு போடுவீர்களா? நான் ஜூன் மாதம் பேசினேன், ஆனால் நீண்ட கால நடவடிக்கையாக இந்த வழக்கு போடப்பட்ட நிகழ்வு உள்ளதே ஏன்? என்று கேள்வி எழுப்பினார். இந்த வழக்கை விசாரித்த குற்றவியல் நடுவர் பிரகாஷ் எதன் அடிப்படையில் இவர் மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்துள்ளீர்கள்? என்று கேள்வி எழுப்பினார்.

இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதால் கைது செய்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. ஐநாவில் இந்திய இறையாண்மைக்கு எதிராக என்ன பேசினார்? ஐநாவில் பேசியதற்கு நீங்கள் எப்படி வழக்கு போட முடியும்? எதன் அடிப்படையில் இவரை நீதிமன்றக் காவலில் வைக்கக் கோருகிறீர்கள்? என அடுக்கடுக்கான கேள்விகளை நடுவர் பிரகாஷ் எழுப்பினார்.தாம் கேட்ட கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளிக்க வேண்டும் என்று நடுவர் உத்தரவிட்டார். அதுவரை திருமுருகன் காந்தியை நீதிமன்றக் காவலில் வைக்க இயலாது என உத்தரவிட்டார்.

மேலும் நேற்றிரவு தமிழக போலீசார் திருமுருகன் காந்தியை கைது செய்த நேரத்திலிருந்து 24 மணி நேரம் வரை சைபர் பிரிவு அதிகாரி மூலம் விசாரணை நடத்தலாம் என்று உத்தரவிட்ட 11 -வது குற்றவியல் நீதிமன்ற நடுவர், விசாரணைக்கு ஒத்துழைக்கவேண்டும் என திருமுருகன் காந்திக்கும் உத்தரவிட்டார்.திருமுருகன் காந்தி கைதை அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் கண்டித்திருக்கும் வேளையில் நீதிமன்றம் காவலில் வைக்க மறுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory