» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பியூட்டி பார்லரில் இளம்பெண்ணை தாக்கி, உதைத்த முன்னாள் கவுன்சிலர் திமுகவிலிருந்து இடைநீக்கம்!!

வியாழன் 13, செப்டம்பர் 2018 4:15:04 PM (IST)

பெரம்பலூரில் பியூட்டி பார்லருக்குள் நுழைந்து இளம்பெண்ணை தாக்கி எட்டி உதைத்த திமுக முன்னாள் கவுன்சிலர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.

பொதுவாக பெண்களை தாக்கும் அரசியல்வாதிகள் வடமாநிலங்களில் அதிகம் காணலாம். சாதாரண ஆண்கள் அவ்வாறு நடப்பதையே கடுமையாக விமர்சிக்கப்படும் காலகட்டத்தில் பொதுவாழ்வில் இருப்பவர்கள் பெண்களை கடுமையாக தாக்குவதும், எட்டி உதைப்பதும் கடுமையாக கண்டிக்கப்படவேண்டிய ஒன்று. திமுக போன்ற முக்கியமான கட்சிகளில் பொதுமக்களை தாக்குபவர்கள் பற்றிய செய்திகள் அதிகரித்து வருகிறது. 

அதற்கு கட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் மீண்டும் மீண்டும் இத்தகைய சம்பவங்கள் நடக்கின்றன. சமீபத்தில் பிரியாணி கடை ஒன்றில் ஊழியர்களை கடுமையாக தாக்கியவர்களை கண்டித்த ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். கட்சியிலிருந்து அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கடந்தவாரம் செல்போன் கடையில் ஊழியர் ஒருவரை திமுக பிரமுகர் தாக்கியதாக செய்தி வெளியான நிலையில் உச்சக்கட்டமாக பியூட்டி பார்லரில் இளம்பெண் ஒருவரை திமுக முன்னாள் கவுன்சிலர் செல்வக்குமார் கடுமையாக எட்டி உதைத்து கீழே தள்ளி தாக்கும் காட்சிகள் வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் பியூட்டி பார்லருக்கு சென்ற திமுக பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை, மேற்கு ஒன்றியம், அன்னமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த மாவட்ட ஊராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர் செல்வகுமார் என்பவர் பியூட்டி பார்லருக்குள் உள்ள பெண்களை தாக்க முனைகிறார். கண்டபடி அவர்களை திட்டுகிறார், அறைக்குள் நுழைய முற்படும் அவரை சத்தியா என்ற இளம்பெண் தடுத்து பேசுகிறார், மற்றப்பெண்கள் சமாதானப்படுத்தும் நிலையில் முதலில் தடுத்த இளம்பெண் சத்தியாவை வயிற்றிலேயே எட்டி உதைக்கிறார். 

நிலை குலைந்த சத்தியா ஓரமாக போய் நிற்கிறார். ஆனாலும் ஆத்திரம் அடங்காத அவர் அந்த சத்தியாவை வயிற்றில் மீண்டும் மீண்டும் உதைக்கிறார்.  இதில் நிலைகுலைந்த அவரை, பிடித்து கழுத்தை நெரித்து கீழே தள்ளுகிறார் செல்வகுமார். கீழே விழுந்த இளம்பெண்ணை மீண்டும் மீண்டும் மிதிக்கிறார். மற்றப்பெண்கள் தடுத்தும் மிதித்துக்கொண்டே இருக்கிறார். இதில் அந்தப்பெண் மயக்கமடைகிறார். இந்தச் சம்பவம் நடந்து 4 மாதம் ஆகியும் பெரம்பலூர் டவுன் போலீஸார் சத்தியா புகாரின் மீது நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தவே அதன் சிசிடிவி காட்சியை அவர்கள் வெளியிட்டுள்ளனர். 

அது தொலைக்காட்சிகளில், இணையதளங்களில் வைரலாகவே தற்போது இளம்பெண் சத்தியாவை கொடூரமாக தாக்கிய திமுக முன்னாள் கவுன்சிலர் செல்வகுமாரை பெரம்பலூர் டவுன் போலீஸார் தற்போது கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே திமுக தலைமையகத்துக்கு இந்த தகவல் கிடைக்கவே திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் சம்பந்தப்பட்ட திமுக முன்னாள் கவுன்சிலர் செல்வகுமாரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd

Tirunelveli Business Directory