» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

உதவி இயக்குநருடன் திருமணம் நடந்ததா? கமிஷனர் அலுவலகத்திற்கு வந்த நடிகை நிலானி விளக்கம்!!

செவ்வாய் 18, செப்டம்பர் 2018 5:40:57 PM (IST)

உதவி இயக்குநர் லலித்குமார் தற்கொலையில் தன்னை போலீஸ் தேடுவதை அறிந்து தான் தலைமறைவாக இருப்பதாக செய்தி வெளியிடும் தொலைக்காட்சிகள் மீது நடிகை நிலானி புகார் அளித்தார்.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் காந்தி லலித்குமார். சென்னையில் திரைப்பட உதவி இயக்குநராகப் பணிபுரிந்து வந்தார். இவருக்கும் ஏற்கெனவே திருமணம் ஆகி கணவரைப் பிரிந்து வாழும் சின்னத்திரை நடிகை நிலானிக்கும் நட்பு ஏற்பட்டது. சின்னத்திரை நாடகங்களில் நடித்து வருபவர் நடிகை நிலானி. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக போலீஸாரைக் கண்டித்து வீடியோ வெளியிட்டு சர்ச்சையில் சிக்கி கைதானவர்.

போலீஸ் சீருடையில் சர்ச்சைக்குரிய கருத்து பேசியதால் வடபழனி போலீஸார் சில மாதங்களுக்கு முன் நிலானியைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையில் அடைக்கப்பட்ட நிலானிக்கு ஜாமீனில் வர உதவி செய்தவர் காந்தி லலித் குமார்தான். இருவரும் நெருக்கமாகப் பழகி வந்தனர். இருவரும் காதலித்து திருமணம் செய்யாமல் ஒரே வீட்டில் இணைந்து வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படங்களை லலித்குமார் தனது ஃபேஸ்புக்கில் பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில் காந்தி லலித்குமாரை விட்டு நிலானி திடீரெனப் பிரிந்தார். இதனால் மனம் உடைந்த லலித்குமார் நிலானியைச் சந்தித்து பல முறை பேசினார். ஆனாலும் நிலானி அசைந்து கொடுக்கவில்லை. கடந்த சனிக்கிழமை மயிலாப்பூரில் சின்னத்திரை படப்பிடிப்பின் போது நடிகை நிலானியை காந்தி லலித்குமார் சந்தித்து இதுகுறித்துக் கேட்டார். அப்போது அவர் நிலானியைத் திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். இதனால் தன்னைத் திருமணம் செய்யக்கோரி தொந்தரவு செய்வதாக லலித்குமார் மீது நிலானி மயிலாப்பூர் காவல் நிலையத்தில் செப்.16 அன்று புகார் அளித்தார். நிலானியின் புகாரை அடுத்து மயிலாப்பூர் போலீஸார் காந்தி லலித்குமாரை எச்சரித்து அனுப்பி வைத்தனர். 

இதனால் மனம் உடைந்த லலித்குமார் தீக்குளித்துத் தற்கொலை செய்துகொண்டார். அவர் மரணத்திற்கு முன்னர் தானும் நிலானியும் நெருக்கமாகப் பழகியதற்கு அடையாளமான புகைப்படங்கள், வீடியோ ஆதாரங்களை நண்பர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். அது ஊடகங்களிலும் வெளியானது. லலித்குமார் தற்கொலைக்குக் காரணம் நிலானி என்பதால் அவரைக் கைது செய்ய போலீஸார் முடிவு செய்துள்ளதாகவும், இதனால் அவர் தலைமறைவாக இருப்பதாகவும் சில தொலைக்காட்சிகளில் செய்தி வெளியானது. இதையடுத்து இன்று கமிஷனர் அலுவலகத்துக்கு நிலானி வந்தார். அவர் புகார் ஒன்றை அளித்தார். 

அவரது புகாரில், நான் இரண்டு நாட்களுக்கு முன் உதவி இயக்குநர் லலித்குமார் மீது மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன், அதன் பின்னர் அவர் தற்கொலை செய்துகொண்டார்.சில தொலைக்காட்சிகளில் நான் தலைமறைவு என்றும், எனக்கும் லலித்குமாருக்கும் திருமணம் ஆகிவிட்டது என்றும் வீடியோவுடன் செய்தி வருகிறது. அந்த வீடியோவின் உண்மைத்தன்மை என்ன என்று தெரியாமல் இப்படிச் செய்தி வெளியிடுவதை நிறுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று நிலானி தெரிவித்துள்ளார். புகாரைக் கொடுத்த நிலானி செய்தியாளர்களைச் சந்திக்காமல் புறப்பட்டுச் சென்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory