» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆக்கிரமிப்பை அகற்றுவதில் தயவு தாட்சண்யம் கூடாது: மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

வெள்ளி 12, அக்டோபர் 2018 12:40:42 PM (IST)

நீர்நிலைகள் மற்றும் நீர்வழிப் பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் எவ்வித தயவு தாட்சண்யமும் காட்டக்கூடாது என மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நேற்று உத்தரவிட்டுள்ளது.

மதுரை மேலூரைச் சேர்ந்த வழக்கறிஞர் அருண்நிதி தாக்கல் செய்த பொதுநல மனு: மதுரை மாவட்டம் முழுவதும் உள்ள நீர்நிலைகள் மற்றும் நீர்வழிப் பாதைகளை பலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால், அவற்றில் தண்ணீரை சேமிக்க முடியவில்லை. இதே நிலை நீடித்தால் மதுரை மாவட்டம் பாலைவனமாக மாறிவிடும். எனவே இங்கு நீர்நிலைகள் மற்றும் நீர்வழிப் பாதைகளில் உள்ள தற்காலிக, நிரந்தர கட்டடங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். 

இந்த மனு, ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் நீர்நிலைகள், நீர்வழிப் பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், இம்மனு நீதிபதிகள் டி.ராஜா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. இதில் மதுரை ஆட்சியர் ச.நடராஜன், ராமநாதபுரம் ஆட்சியர் கொ.வீரராகவராவ், சிவகங்கை ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன், திண்டுக்கல் ஆட்சியர் டி.ஜி.வினய், தேனி ஆட்சியர் பல்லவி பல்தேவ் ஆகியோர் நேரில் ஆஜராகி, தங்கள் மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள், அகற்றப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகள், எதிர்காலத்திட்டங்கள் தொடர்பான விவரங்களை நீதிமன்றத்தில் தனித்தனியாக தாக்கல் செய்தனர். 

இதைப் பதிவு செய்த நீதிபதிகள், மதுரை மாவட்டத்தில் உள்ள வண்டியூர், தெப்பக்குளம், திருப்பரங்குன்றம், மாடக்குளம், தென்கரை உள்ளிட்ட கண்மாய்களை தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும். நீர்வழிப் பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை எவ்வித தயவு தாட்சயண்மும் காட்டாமல் அகற்ற வேண்டும். கண்மாய்களில் நீரைத் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டனர். மேலும் 5 மாவட்டங்களிலும் மாவட்ட வருவாய் ஆய்வாளர், பொதுப்பணித் துறை செயற்பொறியாளர்கள் தலைமையில் குழு அமைத்து, அந்தந்த மாவட்டங்களில் நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து அளவீடு செய்ய வேண்டும். மேலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அக்டோபர் 26-ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory