» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பொங்கல் தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாயை விட்டுத் தரலாம்: தமிழக அரசு அழைப்பு

வியாழன் 10, ஜனவரி 2019 11:21:55 AM (IST)

ஆயிரம் ரூபாயுடன் நியாய விலைக் கடைகளில் அளிக்கப்பட்டு வரும் பொங்கல் பரிசை விட்டுத் தர தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. 

பொங்கல் பண்டிகையை ஒட்டி, தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாயுடன் ஒரு கிலோ அரிசி, சர்க்கரை, உலர் திராட்சை, கரும்பு ஆகியன வழங்கப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டம் கடந்த திங்கள்கிழமை முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவு: கடந்த மூன்று நாள்களாக ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில், வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளோருக்கு மட்டுமே அதனை வழங்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதையடுத்து, எத்தனை பேருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த பரிசுத் தொகுப்பைப் பெறுவதற்காக நியாய விலைக் கடைகளில் மக்கள் கூட்டம் தினமும் அலைமோதி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் பணியில் போலீஸார் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

விட்டுத் தர வாய்ப்பு: 

நீதிமன்ற உத்தரவு, பல்வேறு விமர்சனங்களுக்கு இடையே, ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இதனை விட்டுத் தர விருப்பம் உள்ளோர் அதற்கான வாய்ப்பினை உணவுப் பொருள் வழங்கல் துறையின் இணையதளத்திலும், செயலியிலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உணவுப் பொருள் வழங்கல் துறையின் (www.tnpds.gov.in) முகப்புப் பக்கத்தில் பயனாளர் நுழைவுப் பிரிவு உள்ளது. இதிலிருந்து உள்நுழைந்தால் உணவுத் துறையில் பதிவு செய்துள்ள செல்லிடப்பேசி எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். இதன்பின், அந்த செல்லிடப் பேசிக்கு ஒருமுறை பயன்படுத்தும் எண் குறுஞ்செய்தியாக வரும்.

இந்த எண்ணைப் பதிவிட்டு உள்ளே சென்றால், பொங்கல் தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாயை விட்டுத் தருவதற்கான வாய்ப்பு இருக்கும். அந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி பொங்கல் தொகுப்பு, ஆயிரம் ரூபாயை விட்டுத் தரலாம். நீதிமன்ற உத்தரவு, பல்வேறு விமர்சனங்களுக்கு இடையே தமிழக அரசு இந்தவொரு வாய்ப்பினை வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory