» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பாமக பிரமுகர் கொலை வழக்கில் 5 பேர் கைது: பிப்.20 வரை நீதிமன்ற காவல் - திருச்சி சிறையில் அடைப்பு!!

வெள்ளி 8, பிப்ரவரி 2019 10:58:24 AM (IST)

கும்பகோணம் அருகே திருபுவனத்தில் பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் தொடர்புடைய 5 பேரை போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனம் மேலதூண்டில் விநாயகம்பேட்டையைச் சேர்ந்தவர் பாமக முன்னாள் நகரச் செயலர் வ.ராமலிங்கம்(45). இவர், கடந்த 5-ம் தேதி இரவு 11.30 மணிக்கு தன்னுடைய வாடகை பாத்திரக் கடையை மூடிவிட்டு, மகன் ஷியாம் சுந்தருடன் லோடு ஆட்டோவில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது, வாகனத்தை வழிமறித்த ஒரு கும்பல், ராமலிங்கத்தை அரிவாளால் வெட்டியதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.

இதுகுறித்து, ஷியாம் சுந்தர் கொடுத்த புகாரின்பேரில் திருவிடைமருதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சந்தேகத்தின்பேரில் போலீசார், சிலரைப் பிடித்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் முதல்கட்ட விசாரணையில், கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என திருபுவனம் முஸ்லிம் வடக்கு வீதி யாகூப் மகன் சர்புதீன்(60), மந்திரி அலி மகன் முகமது ரிஸ்வான்(23), குறிச்சிமலை ஆஜாபகுதீன் மகன் முகம்மது ரியாஸ்(27), திருபுவனம் சர்தார்கான் மகன் நிஜாம்அலி(33), திருவிடைமருதூர் அப்துல் கலாம் மகன் அசாருதீன்(26) ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். இவர்கள் மீது, கொலை செய்தல் (ஐபிசி பிரிவு 302), தகாத வார்த்தைகளால் திட்டுதல்(294பி), கொலை முயற்சி(307), வழிமறித்தல்(341), ஆயுதங்களுடன் தாக்குதல் (147) உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட 5 பேரையும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் தஞ்சாவூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்துக்கு நேற்று அழைத்து வந்தனர். ஆனால், 5 பேரையும் கும்பகோணம் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லுமாறு நீதிபதி கூறியதை அடுத்து, போலீசார் அவர்களை கும்பகோணம் முதலாம் எண் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்துக்கு நேற்று மாலை அழைத்துச் சென்றனர். வழக்கை விசாரித்த நீதிபதி, 5 பேரையும் பிப்.20-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, 5 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.


மக்கள் கருத்து

கேட்ச்Feb 10, 2019 - 01:22:43 PM | Posted IP 162.1*****

சமீப காலமாக இப்படி மத ரீதியான சண்டைகள் ஏற்படுத்த படுகிறது, இணையத்தளம் இதற்கு முக்கிய காரணம், மக்களிடம் வெறுப்பை உண்டாக்கும் வகையில் பேசும் நபர்கள் கட்டுப்படுத்த பட வேண்டும். மேலும் மதவாத சக்திகள் இதனை தவறாக பயன் படுத்தாதவாறு பார்த்து கொள்ள வேண்டும்..

சாமிFeb 9, 2019 - 08:03:58 PM | Posted IP 103.2*****

தகுந்த நடவடிக்கை தேவை

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory