» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழக நிதிநிலை அறிக்கையில் வரவேற்கத்தக்க சில அம்சங்கள் உள்ளன: டாக்டர் ராமதாஸ் கருத்து

வெள்ளி 8, பிப்ரவரி 2019 4:41:10 PM (IST)

தமிழக நிதிநிலை அறிக்கையில் வரவேற்கத்தக்க சில அம்சங்கள் இடம்பெற்றிருப்பது  உண்மை. அதேநேரத்தில், அதன் பெரும்பாலான அம்சங்கள் ஏமாற்றம் அளிப்பவையாகவே உள்ளன என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை : தமிழக சட்டப்பேரவையில் 2019-20 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்திருக்கிறார். அத்திக்கடவு - அவினாசித் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது உள்ளிட்ட ஒரு சில திட்டங்கள் வரவேற்கத்தக்கவை. அதேநேரத்தில் மீதமுள்ள அறிவிப்புகள் மக்களின் எதிர்பார்ப்புக்கு மாறாகவும், ஏமாற்றம் அளிப்பவையாகவும் அமைந்திருக்கின்றன.

தமிழக அரசுக்கான நிதிநிலை அறிக்கையில் உழவர்களின் நலன் காப்பதற்கான திட்டங்கள் அதிக அளவில் அறிவிக்கப்படும் என்பது தான் அனைத்துத் தரப்பு மக்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால், வேளாண்துறைக்கான நிதி ஒதுக்கீடு கடந்த ஆண்டின் அளவான ரூ.8916 கோடியிலிருந்து  ரூ.10,559 கோடியாக உயர்த்தப்பட்டிருப்பதைத் தவிர உழவர்கள் நலனுக்காக வேறு எந்தத் திட்டமும் அறிவிக்கப்படவில்லை. பயிர்க்கடன் தள்ளுபடி, மூலதன மானியத் திட்டம், கொள்முதல் விலை உயர்வு  உள்ளிட்ட அறிவிப்புகளை எதிர்பார்த்த உழவர்களுக்கு அரசின் அறிவிப்புகள் ஏமாற்றமாகவே உள்ளன.

அதேநேரத்தில், 55 ஆண்டுகளாக உழவர்களால் வலியுறுத்தப்பட்டு வரும் கனவுத்திட்டமான அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை செயல்படுத்த ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இதன்மூலம் அத்திட்டம் அடுத்த இரு ஆண்டுகளில் செயல்வடிவம் பெறக்கூடும். தமிழ்நாட்டில் உழவுத் தொழிலை மேம்படுத்த இன்னும் 40&க்கும் மேற்பட்ட பாசனத் திட்டங்களை செயல்படுத்த வேண்டியுள்ள  நிலையில், அதற்கான பாசனப் பெருந்திட்டத்தை வகுத்து செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும்.

இந்தியாவின் மற்ற மாநிலங்களைப் போலவே தமிழகத்திலும் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து உள்ள நிலையில், அதை சமாளிப்பதற்காகவும், வேலைவாய்ப்புகளை பெருக்குவதற்காகவும் சிறப்பாக எந்தத் திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை. பொறியியல் பட்டதாரிகளுக்கு தனியார் நிறுவனங்களுடன் இணைந்து பயிற்சியளிக்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. இது பொறியியல் மாணவர்களின் வேலைக்கு செல்லும் திறனை அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால், அவர்களுக்கான வேலை வாய்ப்புகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் இந்த பயிற்சிகளால் எந்த பயனுமில்லை.

பெருங்குடி, கொடுங்கையூர் குப்பைக் கிடங்கு கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்க ரூ.5,259 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலோட்டமாகப் பார்க்கும் போது இது மின்னுற்பத்திக்கு உதவும் திட்டம் போன்று தோன்றினாலும், குப்பைகள் எரிக்கப்படும் போது சுற்றுச்சூழலுக்கு மோசமான பாதிப்புகள் ஏற்படும். அதேபோல், சென்னையில் 2 லட்சம் வாகனங்களை நிறுத்தும் வகையில் பல அடுக்கு வாகன நிறுத்தம் அமைக்கும் திட்டம் அந்தப் பகுதிகளில் நெரிசலை அதிகரிக்கவே வழிவகுக்கும். மாறாக, நெரிசல் அதிகமுள்ள பகுதிகளை தனியார் வாகனங்கள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பதே பயனளிக்கும்.

சென்னை, மதுரை, கோவை ஆகிய நகரங்களில் 500 மின்சார பேருந்துகள் இயக்கப்படும் என்ற அறிவிப்பும்,  சென்னை மெட்ரோ தொடர்வண்டி சேவை வண்டலூர் வரை நீட்டிக்கப்படும் என்பதும்  வரவேற்கப்பட வேண்டியவை ஆகும். இவை போக்குவரத்துத் தேவையை நிறைவேற்றுவது மட்டுமின்றி,  போக்குவரத்து சார்ந்த சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் உறுதியளிக்கப்பட்டிருந்தது. அதன்படி முதல் இரு ஆண்டுகளில் 1000 மதுக்கடைகளை மூடப்பட்டன. அடுத்த இரு ஆண்டுகளில் மேலும் 1000 மதுக்கடைகள் மூடப்பட்டிருக்க வேண்டும். அதுகுறித்த அறிவிப்புகளை வெளியிடாமல், கடந்த காலங்களில் மூடப்பட்ட மதுக்கடைகளின் எண்ணிக்கையை மட்டும் அரசு வெளியிட்டிருப்பது ஏமாற்றமளிக்கிறது. இந்த புள்ளிவிவரங்களால் மக்களுக்கு பயனில்லை.

தமிழகத்திலுள்ள நிலங்களை சிறப்பாக பயன்படுத்தும் வகையில் நிலப்பயன்பாட்டுக் கொள்கை வகுக்கப்படும், மாநிலம் முழுவதும் திட்டமிட்ட வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கத்துடன் தமிழ்நாட்டை மொத்தம் 9 நிலையான மண்டலங்களாகப் பிரித்து அவற்றுக்கான மண்டலத்திட்டங்கள் வகுக்கப்படும் என்பது போன்ற அறிவிப்புகளும் வரவேற்கத்தக்கவை ஆகும். எனினும், 9 நிலையான மண்டலங்கள் வீட்டு வசதிக்காகவும், நிலப்பயன்பாட்டுக்காகவும் மட்டுமே வகுக்கப்படுவதாக தெரிகிறது. இத்திட்டத்தை விரைவுபடுத்தி தமிழகத்தை பல்வேறு பொருளாதார மண்டலங்களாக பிரித்தால் தொழில் வளர்ச்சியையும், அதன் மூலம் வேலைவாய்ப்பையும் அதிகரிக்க முடியும் என்பதை அரசு மனதில் கொள்ள வேண்டும்.

தமிழக அரசின் கடன்சுமை தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்வதும் கவலையளிக்கிறது. தமிழகத்தின் 2018-19 ஆம் ஆண்டுக்கான  சொந்த வரி வருவாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டதைவிட  ரூ.1438 கோடி சரிந்து ரூ.1,10,178 கோடியாக குறைந்துள்ளது. அதேநேரத்தில் நிதிப்பற்றாக்குறை ரூ.44,176 கோடியாகவும்,  அரசின் நேரடிக் கடன் சுமை ரூ.3,97,495 கோடியாகவும் அதிகரித்துள்ளன. தமிழக அரசின் நேரடிக் கடனுக்கான வட்டி மட்டும் ரூ.33,226 கோடியாக அதிகரித்துள்ளது. தமிழகப் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் பயணிப்பதற்கான அறிகுறிகளாக இவை தென்படவில்லை. மொத்தத்தில் தமிழக நிதிநிலை அறிக்கையில் வரவேற்கத்தக்க சில அம்சங்கள் இடம்பெற்றிருப்பது  உண்மை. அதேநேரத்தில், அதன் பெரும்பாலான அம்சங்கள் ஏமாற்றம் அளிப்பவையாகவே உள்ளன.


மக்கள் கருத்து

உண்மைFeb 11, 2019 - 07:04:29 AM | Posted IP 162.1*****

கூட்டணிக்கு பல்லை காட்டுகிறார்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory